”அந்த ராணுவ வீரர் போல நானும் பாதிக்கப்பட்டேன்!- குமுறும் இஸ்ரோ முன்னாள் அலுவலர்”

ராணுவ வீரர் தேஜ் பகதூர் மனைவியுடன்

தேஜ் பகதூரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ''பசிக்கு உணவே இல்லாமல்தான் நாங்கள் எல்லையில் காவல் காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சப்பாத்தியும் தேநீரும் மட்டும்தான் எங்களுக்குத் தரப்படுகிறது.” என்று எல்லையில் மலைகளுக்கிடையே நின்றபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் இந்த எல்லைக் காவற்படை ராணுவ வீரர். மத்திய உள்துறை அமைச்சரும், தான் அந்த காணொளியைப் பார்த்ததாகவும் எல்லைக் காவற்படை அலுவலகத்தில் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருப்பதாகவும் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், அதிகாரிகளோ தேஜ் பகதூரின் மீது ஏற்கெனவே பல புகார்கள் இருக்கின்றன என்றும். அவர் கூறுவது எதுவும் உண்மையில்லை என்றும், அவரின் இந்த செயலுக்காக அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற ரீதியிலும் பதில் அளித்திருந்தனர். மேலும், கடந்த வருடத்தில் தேஜ் பகதூர் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி சென்ற மாத இறுதியில் அவர் விருப்ப ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால், தேஜ் பகதூரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடர்வதால் அவருக்கான விருப்ப ஓய்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளது எல்லைக் காவற்படை.

தேஜ் பகதூர் யாதவ்

ஆனால், தேஜ் பகதூரின் மனைவியோ, ''எனது கணவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். விசாரணை என்கிற பெயரில் அவரை அதிகாரிகள் சிறையில் வைத்துள்ளதாகவும் அவரை துன்புறுத்துவதாகவும் எனக்கு தொலைபேசியில் ரகசியமாகக் கூறினார்.” என்று புகார் கூறியிருந்தார். இதையடுத்து தேஜ் பகதூரின் உண்மை நிலையைக் கண்டுபிடிப்பதற்காக ஆட்கொணர்வு மனுவை அவர் தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேஜ் பகதூரின் மனைவியின் இந்தப் புகாரை முற்றிலுமாக மறுத்துள்ளது எல்லை காவற்படை.  

முன்னாள் இஸ்ரோ பணியாளர் ஒருவர்  கூறுகையில், “அரசின் உயர் அலுவலக மையங்கள் பெரும்பாலான சமயங்களில் இப்படித்தான் நடந்துகொள்கிறது. எனக்கும் அப்படியொரு அனுபவம் நேர்ந்துள்ளது.” என்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரோவின், விக்ரம்சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய 69 வயதான ராஜகுமார் என்பவர் கூறுகையில், ''நான் 26 வருடங்கள் இஸ்ரோவில் பணியாற்றினேன். முன்னாள் ஜனாதிபதி கலாமுடன் அவரது எஸ்.எல்.வி திட்டப்பணியில் ஒன்றாகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு. 1992-ல் ஏ.எஸ்.எல்.வி திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். மொத்தம் நான்கு முறை விண்ணில் செலுத்தப்பட்ட ஏ.எஸ்.எல்.வி-யில் 1992-ல் ஏவப்பட்டது முழுவதும் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், அது முழுவதும் வெற்றியில்லை என்கிற வாதத்தை முன்வைத்தேன். இதற்காக அதற்கடுத்து பதினாறு ஆண்டுகள் எனக்கு எவ்வித பதவி உயர்வும் தரப்படாமல் மறுக்கப்பட்டேன். பிறகு 2002-ல் இஸ்ரோ ஆராய்ச்சி மையத் தலைவர் சதிஷ் தவான் இறந்தார். அதுவரை அவருக்காக மட்டுமே என்னை பணியில் அமர்த்தி இருந்தவர்கள் அதற்கடுத்து 2003-ல் என்னை விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்கள். நானும் சிலபல சுயகாரணங்களால் அதுதான் சரியான முடிவென்று விலகிக் கொண்டேன். ஆனால், வேலையில் இருந்த இடைப்பட்ட அந்த பதினாறு வருடங்களில் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அரசியலிலும் அரசு இயந்திரத்திலும் அப்பாவிகள்தான் தொடர்பில்லாமல் தண்டிக்கப்படுவார்கள். அதனால், தேஜ் பகதூரின் மனைவி அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதை அசட்டையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக தேஜ் பகதூரை மீட்க ஆவண செய்ய வேண்டும். பழிவாங்குதல் என்பது அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதிகாரமற்றவர்கள் செய்யும் செயல். அதற்கு தேஜ் பகதூர் பலியாகிவிடக் கூடாது. இதற்காக நான் ஜனாதிபதிக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேஜ் பகதூர் பாதுகாப்பாகவே இருக்கிறார் என்று நம்பிக்கை கொள்வோம், அவரது மனைவிக்காகவும் சேர்த்து!

- ஐஷ்வர்யா 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!