மோடி... பணமதிப்பு நீக்கத்தால் நீங்கள் சாதித்தது இதுதானா!? #100DaysofDemonetiztion #VikatanExclusive | Is this what you have achieved through demonetisation?

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (16/02/2017)

கடைசி தொடர்பு:19:59 (17/02/2017)

மோடி... பணமதிப்பு நீக்கத்தால் நீங்கள் சாதித்தது இதுதானா!? #100DaysofDemonetiztion #VikatanExclusive

`பண மதிப்பு நீக்கம் - இது ஒரு நல்ல திட்டம்; இந்த திட்டத்தால் நாட்டில் ஊழல் பெருமளவு குறையும்; ஊழல், பண பதுக்கல், கறுப்பு பணம், கள்ள நோட்டு போன்றவை இந்த நடவடிக்கையால் மிகமிகக் குறையும்’ எனப் பலரும் பாராட்டினர். ஆனால், இன்றுடன் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்து 100 நாள்கள் ஆகிவிட்டது. இந்த திட்டத்தால் நாட்டு மக்களுக்குக் கிடைத்த பயன் என்ன? பிரதமர் மோடி சாதித்தது என்ன?

மோடி... பணமதிப்பு நீக்கத்தால் நீங்கள் சாதித்தது இதுதானா!?

முன்னுக்கு பின் முரண்!
 பண மதிப்பு நீக்கத்தினையடுத்து ஓரிரு வாரங்கள் மட்டுமே எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது; எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அதன்பின் எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் அரசு தரப்பில் இருந்தும் பதில் இல்லை. நவம்பர் 28-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், `நவம்பர் 27-ம் தேதி வரையிலான காலத்தில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் சென்டர் மூலமாக 2.16 லட்சம் கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் 2000, 500, 100, 50 என எந்தெந்த ரூபாய் நோட்டுகளில் பணம் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

இதுகுறித்து டிசம்பர் 6-ல், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால், `நவம்பர் 29-ம் தேதி வரையிலான காலத்தில் 3.29 லட்சம் கோடி ரூபாய் பணம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் 160.8 கோடிக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள், 15.6 கோடிக்கு, 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 176 கோடி நோட்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3.29 லட்சம் கோடி ரூபாய்’ என பதிலளித்தார்.  

நவம்பர் 9-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரையிலான காலத்தில் 2.16 லட்சம் கோடி ரூபாய் பணம் மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்களின் கணக்கீட்டின் படி அடுத்த இரண்டு நாள்கள் அதாவது 28 மற்றும் 29-ம் தேதி 1.13 லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் காந்தி, `டிசம்பர் 6-ம் தேதி வரையிலான காலத்தில் 4 லட்சம் கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது’ என்றார். இதில் 1.06 லட்சம் கோடி ரூபாய் சிறிய ரூபாய் நோட்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மீதி 2.94 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள், பெரிய மதிப்பு கொண்ட 500, மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஆனால், நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக நிதித் துறையின் இணை அமைச்சர், `நவம்பர் 29-ம் தேதி வரையிலான காலத்தில் விநியோகம் செய்யப்பட்ட பணம் 3.29 லட்சம் கோடி ரூபாய்’ என தெரிவித்துள்ளார். இவையனைத்தும் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்குப்பின் டிசம்பர் 6-ம் தேதி வரை வரையிலான காலத்தில் 2.94 லட்சம் கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களைப் படிக்கும்போதே சற்று குழப்பம் வரலாம். தலை சுத்தலாம். ஆனால், இதில் எதுதான் உண்மை? ஏன் முன்னுக்கு பின்னான தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது தெரியவில்லை. 

100 நாட்கள்!

இப்போது பண மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியாகி 100 நாள்கள் கடந்து விட்டன. ஆனால், இன்றளவும் எவ்வளவு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. எவ்வளாவு பணம் புழக்கத்தில் விடப்பட்டது என்பது குறித்து ஒரு தகவலும் இல்லை. இதுகுறித்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கெடு முடிவடைந்த பின்னும் சொல்லப்படவில்லை. பண மதிப்பு நீக்கம் பாதிப்பையடுத்து, ஆண்டு இறுதியில் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றும் போதும் பிரதமர் மோடியும் விளக்கம் அளிக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்திலும் கவர்னர் அறிவிக்கவில்லை. பட்ஜெட்டுக்கு முன் மிக விரிவாகவும், புள்ளி விவரங்களோடும் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையிலும் எந்த ஒரு தகவலும் இல்லை. ஏன் 2017-18ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பிலும் கூட, பண மதிப்பு நீக்கத்தினையடுத்து, எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டது என்பது குறித்தும் எந்த ஓர் அறிவிப்பும் இதுவரை இல்லை.

மெளனம் கலைப்பீர்களா மோடி?

மத்திய அரசினைப் பொறுத்தவரை பண மதிப்பு நீக்க அறிவிப்பு, அரசு அறிவிக்கும் திட்டங்களைப்போல பத்தோடு பதினொன்றாக இருக்கலாம். ஆனால், இது சாமனியனுக்கு ஒரு திணிப்பாகவே இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தீர்கள். அதற்கு முன் யாருக்குமே, 'Demonetisation' எனும் வார்த்தையைப் பற்றி தெரியாது. இந்த வார்த்தையை அனைவரும் அறிய வைத்ததுதான் உங்கள் சாதனை. மற்றபடி, 100 என்ன 1000 நாள்கள் ஆனால் கூட, இதுகுறித்து அரசு மெளனம் கலைக்காது.

-சோ.கார்த்திகேயன்
 


டிரெண்டிங் @ விகடன்