வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (22/02/2017)

கடைசி தொடர்பு:17:23 (11/03/2017)

ஹெச்1பி விசா மசோதா பற்றி என்ன சொல்கிறார்கள் இளைஞர்கள்? - விகடன் சர்வே முடிவுகள்! #VikatanSurvey

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறார். வரிசையாக வெளியாகும் அதிரடியான அறிவிப்புகளால் இந்தியா, சீனா போன்ற வளர்ச்சிப் படியில் இருக்கும் நாடுகள் மட்டுமின்றி, முஸ்லிம் மக்களை அதிகளவில் கொண்ட நாடுகளும், அகதிகளாய்த் தஞ்சம் புகும் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில்தான் ஹெச்1பி விசா மீதான புதிய மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இந்திய ஐடி நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது.

ஹெச்1பி, ட்ரம்ப்

ஹெச்1பி விசா மீதான புதிய நடைமுறைகளின் அடிப்படையில், ஒரு பணியாளர் அமெரிக்காவிற்கு வேலைக்காகச் செல்ல, அவருடைய வருட சம்பளம் 1,30,000 டாலர்களாக இருக்க வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் வருடத்திற்கு சுமார் 88 லட்ச ரூபாய். மாதத்திற்கு 6 முதல் 7 லட்ச ரூபாய். இம்மசோதா அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தால், இந்திய ஐ.டி துறைக்குப் பாதிப்புகள் அதிகம் என்கின்றனர் ஒரு சாரார். மற்றொரு பக்கம், இது இந்தியாவிற்கு நன்மையே என்கின்றனர் சில வல்லுனர்கள். 

ஐடி துறை ஊழியர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஹெ1பி விசா குறித்து ஒரு பட்டிமன்றத்தையே நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், வருங்கால அரசு ஊழியர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லாத் துறையிலும் மிளிரப் போகும் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களிடம் இதுகுறித்த சில கேள்விகளை முன்வைத்தோம். முடிவுகளின் அடிப்படையில், பெரும்பாலான மாணவர்களுக்கு ஹெ1பி விசா பற்றி தெரிந்திருக்கவில்லை என்பதும் தெளிவாகியது. அதன் முடிவுகள் இங்கே உங்களுக்காக...

படித்து முடித்தவுடன் என்ன செய்ய இருக்கிறீர்கள்?

வேலைக்குச் செல்லத் தயார் - 68.36 %

உயர் கல்வி செல்லத் தயார் - 22.66 %

பெற்றோர்களின் தொழிலைக் கவனிக்கப் போகிறேன் - 2.34 %

இன்னும் முடிவெடுக்கவில்லை - 6.64 %

இதில், வேலைக்குச் செல்வேன் என்று பதிலளித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இதிலிருந்து மாணவர்களிடம் வேலைக்குச் செல்லும் மனப்பான்மை உறுதியாக உள்ளது. இந்த எண்ணிக்கையில் பெண்களும் அடக்கம். 

கல்லூரிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறதா?  

நடத்துகிறார்கள் - 51.17 %

நடத்தவில்லை - 37.5 %

நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது -11.33 %

வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளதா?

கலந்துகொண்டிருக்கிறேன் - 21.48 %

கலந்துகொள்ள ஆர்வம் இல்லை - 59.76 %

கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் - 18.75%

உங்கள் படிப்பும் பாடப்பிரிவும் நீங்கள் வேலைக்குச் செல்ல உதவியாக இருக்கும் என நினைக்கிறீர்களா?

உதவியாக இருக்கும் - 59.76 %

உதவியாக இருக்காது - 8.98 %

இருக்கும் என நினைக்கிறேன் - 31.25 %

இன்னும் கூடுதலான திறன்களை மேம்படுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா?

கூடுதல் திறன் வேண்டும் - 76.17 %

கூடுதல் திறன் தேவையில்லை - 3.51 %

வாய்ப்புக் கிடைத்தால் பயில்வேன் - 20.31 %

வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என நம்புகிறீர்களா?

உறுதியாக கிடைக்கும் - 76.17 %

கிடைக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது - 1.95 %

தெரியவில்லை - 21.87 %

எந்தத் துறையில் பணியாற்ற விரும்புகிறீர்கள்?

தகவல் தொழில்நுட்ப சார்ந்த பணிகள் - 9.76 %

அரசு சார்ந்த பணிகள் - 42.58 %

படித்த படிப்பு சார்ந்த பணி - 47.66%

எவ்வளவு சம்பளத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

ரூ.10,000 இருந்து 15,000 வரை - 12.5 %

ரூ.15,000 இருந்து 25,000 வரை - 30.07 %

ரூ. 25,000 ரூபாய்க்கு மேல் - 38.28 %

கிடைத்த சம்பளத்துக்குச் சேருவேன் -19.14 %

எடுத்தவுடனேயே 25 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மை பெரும்பாலான மாணவர்களிடம் அழுத்தமாக பதிந்துள்ளது. இக்கேள்விக்கு பதிலளித்த மாணவர்களின் சதவீத எண்ணிக்கை அதைத்தான் காட்டுகின்றது.

வெளிநாடுகள் சென்று படிப்பதற்கு விருப்பம் இருக்கிறதா?

விருப்பம் இருக்கிறது - 24.60 %

படிக்க விருப்பம் இல்லை - 44.53 %

வாய்ப்புக் கிடைத்தால் செல்வேன் - 30.85 %

அதே போன்று வெளிநாட்டுக் கல்வி மீதான நாட்டமும் மாணவர்களிடம் குறைவாக உள்ளது. அதற்கான செலவு, கல்விக்கடன் என்று விருப்பமில்லாததற்கான காரணங்களின் பட்டியலையும் நீட்டுகிறார்கள் மாணவர்கள். 

வெளிநாடுகள் சென்று வேலை பார்ப்பதற்கு விருப்பம் இருக்கிறதா?

விருப்பம் இருக்கிறது - 39.45 %

விருப்பம் இல்லை - 34.37 %

வாய்ப்பு கிடைத்தால் செல்வேன் - 26.17 %

படிப்பதற்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்று சொன்ன மாணவர்களில் பலருக்கும், வெளிநாட்டில் சென்று வேலை பார்ப்பதில் மிகுந்த ஆர்வமிருக்கிறது. அதனை எதிரொலிக்கிறது இந்த எண்ணிக்கை.

வேலை சென்றதும் வெளிநாட்டுத் திட்டப்பணிகள் கிடைத்தால் பங்கேற்பீர்களா?

ஆர்வத்துடன் பங்கேற்பேன் - 31.25 %

பங்கேற்க ஆர்வம் கட்ட மாட்டேன் - 25.78 %

பணியினைப் பொறுத்து முடிவு செய்வேன் - 42.96 %

பெரும்பாலான மாணவர்கள் வெளிநாட்டு ப்ராஜெக்ட் கிடைத்தால் போகும் மனநிலையில்தான் இருக்கின்றனர். வெளிநாட்டு வேலை என்பது, அதன் சம்பளம், வசதி வாய்ப்புகள் என்கிற அடிப்படையில் மாணவர்களின் கனவாக உள்ளது. 

ஹெச்1பி விசா மீது அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் குறித்து அறிந்திருக்கிறீர்களா?

அறிந்திருக்கிறேன் - 17.18 %

அறிந்திருக்கவில்லை - 60.15 %

கொஞ்சம் கேள்விப்பட்டு இருக்கிறேன் - 22.65 %

வெளிநாட்டு வேலை, சம்பளம் மீதிருக்கும் ஆர்வமளவிற்கு அதற்கான நடைமுறைகள் குறித்த தெளிவு மாணவர்களிடம் இல்லை என்பதையே இந்தக் கேள்வியின் முடிவு பிரதிபலிக்கிறது. கிட்டதட்ட 61% மாணவர்கள், ஹெச்1பி விசா மீதான புதிய மசோதா பற்றியும், ஹெச்1பி விசா என்றால் என்பது பற்றியுமே அறிந்திருக்கவில்லை. 

வேலை வாய்ப்பில் உங்களது சாய்ஸ் எது?

பன்னாட்டு நிறுவனங்கள் - 17.18 %

இந்திய நிறுவனங்கள் - 67.57 %

ஐடியா இல்லை - 15.23 %

பொறியியல் தவிர, அறிவியல், மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற துறைகளில் இறுதியாண்டுப் படிப்பில் இருக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கான முதல் சாய்ஸாக இந்திய நிறுவனங்களே உள்ளன. அதையே இந்த எண்ணிக்கை காட்டுகின்றது.

ஹெச்1பி விசா மீதான நடை முறை லாபமா? நஷ்டமா?

லாபம் - 10.15 %

நஷ்டம் - 21.87 %

தெரியவில்லை-67.96 %

ஹெச்1பி விசா மீதான நடைமுறையால் வேலை வாய்ப்புகள் குறையுமா?

குறையும் - 25 %

குறையாது - 21.87 %

பெரிய அளவில் பாதிப்பு இருக்காது - 53.12 %

இந்த இரண்டு முடிவுகளும், ஹெச்1பி விசா பற்றிய விழிப்புணர்வு, வேலைவாய்ப்புத் துறைகள் குறித்த விழிப்புணர்வு, முதல்நிலை வேலைச்சூழல் குறித்த நடைமுறைகளை கல்வி நிறுவனங்கள், மற்ற பயிற்சிகளுடன் சேர்த்து எடுத்துக் கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

இந்திய ஐடி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா?

குறையும் - 26.95 %

குறையாது - 27.34 %

பெரிய அளவில் பாதிப்பு இருக்காது - 21.87 %

எண்ணிக்கை பாதியாகக் குறையும் - 23.82 %

இந்தியாவில் ஐடி துறை வேலை வாய்ப்புக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறதா?

பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது - 48.04 %

பிரகாசமான எதிர்காலம் இல்லை - 17.18 %

தெரியாது - 34.76 %

எனினும், ஐடி துறை குறித்த முன்முடிவுகளை எடுக்கும் திறன் மாணவர்களிடம் அதிகமாக உள்ளது. இன்றைய ஒட்டுமொத்த உலகமே தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்குவதைக் கருத்தில் கொண்டு இப்பதிலைத் தெரிவித்தாக மேற்சொன்ன கேள்வி குறித்து கேட்டபோது மாணவர்கள் தெரிவித்தனர். 

இந்த சர்வேயின் அடிப்படையில் இந்திய நிறுவனங்களில் பணியாற்ற விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. அதே போன்று ஹெச்1பி விசா மசோதாவால் பெரிய அளவில்  வேலை வாய்ப்புகள் குறையாது என்று தெரிவித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எனினும், அதற்கு முக்கிய காரணம், விசா நடைமுறைகள், கல்விச் சூழலுக்கும் வேலைச்சூழலுக்கும் இடையிலான வித்யாசம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த தெளிவு ஆகியவை பெரும்பாலான மாணவர்களிடம் இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது. மொத்தத்தில் வளர்ச்சியின் முதல்கட்டத்தில் இருக்கும் மாணவர்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஊட்டப்படவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது இந்த சர்வே முடிவு!

 

ஹெச்1பி விசா நடைமுறை சிக்கல்கள் குறித்து பிரபல நிறுவனங்களின் அதிகாரிகள் சிலரிடமும் கருத்துக் கேட்டோம்.

ஜானகிராமன் (மைண்ட் ட்ரீ நிறுவன முன்னாள் அதிகாரி):

 ஜானகிராமன் “இந்தியாவிலிருந்து ஏற்கனவே வேலையில் இருக்கும் நபர்களுக்கு இதனால் பாதிப்பு எதுவுமில்லை. எனினும், அவர்கள் விசாவினைப் புதுப்பிக்கும்போதும், இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பும்போதும் சிலருக்கு நடைமுறைச் சிக்கல்களால் விசா கிடைக்காமல் போகலாம். இந்த பயத்தின் காரணமாகவே அங்கிருக்கும் இந்திய ஊழியர்கள், விடுமுறைக்கு கூட சொந்த ஊர் திரும்ப யோசிக்க வேண்டியிருக்கும். மற்றொருபக்கம், ஏற்கனவே பணியிலிருக்கும் ஊழியர்களின் சம்பளத்தை கணக்கிட்டு அவர்களை வெளியில் அனுப்புவதோ, கட்டாயப் படுத்துவதோ முடியாத காரியம். ஆனால், இனிமேல் அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்லவிருப்பவர்களுக்கு 1,30,000 டாலர் சம்பளம் கொடுக்கவேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால், ஜூனியர் லெவலில் இருக்கும் நபர்கள் அமெரிக்கா செல்லமுடியாத நிலை ஏற்படலாம். சீனியர் நிலையில் இருக்கும் ஊழியர்களால் மட்டுமே விசா பெற்றுச் செல்ல முடியும். இதுதான் ட்ரம்ப்பின் திட்டம். அமெரிக்காவில் இருக்கும் தொடக்க நிலை ஊழியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்க சட்டதிட்டங்களில் இருக்கும் நேர்மைத்தன்மையால் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கு பிரச்னையில்லை. எனினும், இதுவரை இல்லாத அளவிற்கு மதம் சார்ந்த நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் ஈடுபட ஆரம்பித்திருப்பதால், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்க விசா பெற முனையும்போது சிறுசிறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.”

பிரபு ஜி குமார் (நிறுவனத் தலைவர், லாஜிக் இன்பர்மேஷன் சிஸ்டம்):

"நிறுவனங்களில் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்களை அமெரிக்காவுக்கு  அனுப்புகிறார்கள். இவர்களின் திறன், அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் சராசரியாக 60,000 டாலருக்கு கூடுதலாக சம்பளம் கிடைக்கிறது. இதனை குறைந்தப்பட்ச சம்பளமாக நிர்ணயித்து நீண்ட காலம் ஆகி விட்டது என்பதால் இதில் மாற்றம் கொண்டு வருவது நல்லது தான். ஆனால் ஒரேயடியாக இரண்டு மடங்காக மாற்றுவது நிறுவனங்கள் தாக்குப்பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். 75,000 டாலர் முதல்  80,000 டாலர் வரை நிர்ணயிக்கலாம். இங்கு மும்பையில் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதும், மதுரையில் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதனைப்போல் அமெரிக்காவில் கலிப்போர்னியாவில் ஒரு வகையான சம்பளமும், இதர மகாணங்களில் ஒரு வகையான சம்பளம் இருக்கிறது. 

சில நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்துதான் அலுவலகப் பணிகள் முழுமைக்குமே ஆட்களை நியமிக்கிறார்கள். அமெரிக்கர்களை நியமிப்பது இல்லை என்று சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும் போது ட்ரம்ப்பின் குரல் நியாயமான  குரல்தான்.  நம் ஊரில் வெளிநாட்டு நிறுவனம் தொழில் தொடங்கும் போது இந்தியாவில் இருந்து பெரிய அளவில் ஆட்கள் எடுக்க மாட்டேன் என்று வெளிநாட்டில் இருந்து தான் ஆட்கள் எடுப்பேன் என்று சொன்னால் நாம் எப்படி ஏற்றுக்கொள்ள மாட்டோமோ அதைப்போலத்தான் அமெரிக்காவிலும் நடக்கிறது. ஒரே வித்தியாசம் இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். அங்கு ஆட்கள் இல்லை என்பது மட்டும் தான். அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் அமெரிக்காவில் படித்த கலாச்சாரம் தெரிந்தவர்களை தேந்தெடுப்பது அந்த நிறுவனத்துக்கும், வியாபாரத்துக்கும் நல்லது.  பெரிய நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்கர்களை அதிகளவில் ஆட்களை நியமிக்க வேண்டும். 

பொதுவாக, இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால் 70 பேர் இந்தியாவிலும், 30 பேர் அமெரிக்காவிலும் வேலை பார்ப்பார்கள். இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் 10% பேரும், இந்தியாவில் 90% பேர் இருந்தும் பணியாற்றலாம். அதற்கான வசதிகள் வந்து விட்டது. வீடியோ கான்பரன்ஸ் வசதியும், லைவ்வாக அலுவலகத்தை இணைத்து பயணியாற்றும் வசதியும் வந்துவிட்டது. அதனால் பணியாற்றும் சூழ்நிலை மாறி வருகிறது. பிரபு ஜி குமார்

ஆரம்பத்தில் ஹெச்1பி விசா எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல்தான் இருந்தது. அதன் பின்பு கட்டுப்பாடு வந்த போது பல நிறுவனங்கள் அதற்கு தகுந்தாற்போல் ஆட்களை எடுத்தன. இதனால் இந்தியாவிலும் நிறுவனங்கள் வர ஆரம்பித்தன.  இதைப்போலவே தற்போது ஹெச்1பி விசா பிரச்சனையால் இந்தியாவிலும் திறமையானவர்கள் பணியாற்றுவார்கள். அமெரிக்காவிற்கு போனால் அங்கு வரி செலுத்த வேண்டும். அங்கு கார் வாங்கினால் அங்குள்ள நிறுவனம்தான் வளரும். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் அமெரிக்க டாக்டர்களிடம் தான் காட்ட வேண்டும்.  ஆனால், இந்தியாவில் வேலை பார்க்கும் போது இங்குள்ள நிறுவனங்கள் வளரும்.  இந்தியாவும் வளரும். 

இப்போது மசோதாவினை தாக்கல் மட்டுமே செய்து இருக்கிறார்கள். இதனை உடனே அமல்படுத்தி விட முடியாது. அங்கு ஒரே கட்சியில் உள்ளவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி ஓட்டு போட மாட்டார்கள். அவர்களுடைய மாகாணத்தில் எந்த மாதிரியான பிரச்சனை இருக்கிறது என்பதற்கு தகுந்தாற்போல் தான் ஓட்டுப்போடுவார்கள். நீண்ட விவாதத்துக்கு பின்னர்தான் அதனை மசோதாவாக ஏற்றுக்கொள்வார்கள். அதனால்,  இந்த ஹெச்1பி மசோதாவை உடனடியாக நிறைவேற்றி விட முடியாது. நமது நாட்டிலும் இது குறித்து கோரிக்கை வைக்கலாம். அமெரிக்காவில் இருந்து பெருமளவில் பாதுகாப்பு சாதனங்கள் வாங்குகிறோம். அதனை வாங்கும் போது எங்களுடைய நாட்டில் சாப்ட்வேர் துறையின் வேலைவாய்ப்புகளில் தடையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளலாம். 

ஏற்கனவே விசா வாங்கி இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அதனை திரும்ப புதுப்பிக்கும் போது மட்டுமே பிரச்சனை வர  வாய்ப்பு இருக்கிறது. 1990 களில் வேலைக்கு சென்றவர்களுக்கு ஒராண்டுக்கு பின்பு உடனடியாக கிரீன் கார்டு கிடைத்தது. ஆனால், இப்போது 6 வருடம் முதல் 8 வருடம் வரைக்கும் அமெரிக்காவில் இருந்தால் மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கும்.  அதனால் அதனையும் எளிதாக வாங்கி விட முடியாது என்ற நிலை இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக ஐடி துறை வளர்ச்சி நிலை மந்தமாக இருக்கிறது. ஆனால் இது ஒரு சைக்கிள் சக்கரம் போல். நான்கு ஐந்து வருடங்கள்  நன்றாக செயல்படும். அதன் பின்பு இரண்டு வருடங்கள் மந்தமாக இருக்கும். கடந்த ஆறு மாதங்களாக மந்தமாகத்தான் இருக்கிறது. அடுத்த இரண்டு வருடத்தில் நிலைமை சீராக வாய்ப்பு இருக்கிறது.

இன்னொரு பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. தேவைக்கு அதிகமாக மாணவர்கள் வெளியே வருகிறார்கள். இதனால் போதுமான வேலை வாய்ப்பினை பெற முடியாமல் தடுமாறுகிறார்கள். 250 கல்லூரியில் இருந்து 300 கல்லூரி வரை இருந்தால் போதுமானது. பிளஸ் டூ படித்து முடிப்பவர்களை விட கல்லூரியில் அதிகமான சீட் இருக்கிறது. ஒரு மாணவன் கூட சேராத கல்லூரிகள் கூட இருக்கின்றன. இந்த கல்லூரிகள் எல்லாம் அந்தந்த பகுதியின் தேவைக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தற்போது பொறியியல் படிப்பவர்கள் மேற்கொண்டு முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதில்லை. இனி வரும் காலங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க வேண்டும்.  இதனை அமெரிக்காவில் சென்று படிக்கலாம். இங்கு சிறந்த கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு படிக்க செல்லும்போது எளிதாக விசா கிடைக்கும்.  இவ்வாறு படிக்கும் போது அங்குள்ள கலாச்சாரத்தை கற்றுக்கொள்ளலாம். அதன் பின்பு அங்குள்ள நிறுவனத்தை அணுகும் போது எளிதில் வேலை கிடைக்கும். 

ட்ரம்ப் என்ன நினைக்கிறார் என்றால் இந்திய, சீனா நிறுவனங்கள் அமெரிக்காவில் நிறுவனத்தை தொடங்கி 10,000 பேர், 20,000 பேரை வேலைக்கு வைக்கிறார்கள். இதில் 90% பேருக்கு மேல் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற குற்றஞ்சாட்டுகிறார். இனி வரும் காலங்களில் 50% வெளிநாட்டில் இருந்தும், மீதமுள்ள 50% அமெரிக்காவிலும் எடுக்கச் சொல்லலாம். 
ஒரு வேளை இந்த விசா சட்டம் நடைமுறைக்கு வந்தால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திறமையான பணியாளர்கள் கிடைப்பார்கள். இவர்களுக்கு இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை போட்டி போட்டு வழங்குவார்கள். இதன் மூலம் செலவு குறையும், பணியாளர்களும் நல்ல சூழ்நிலையில் வாழும் நிலைமை கிடைக்கும். ஆக ட்ரம்ப் நடவடிக்கை எதிர்கால நோக்கில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும்.”

அருண் நட்ராஜன் (வென்ச்சர் இண்டலிஜென்ஸ் நிறுவன அதிகாரி):

அருண் நட்ராஜன் ட்ரம்ப்பை பொறுத்தவரை, பதவியேற்ற பத்து நாட்களுக்குள், தான் அறிவித்த எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறார். அதனாலேயே இந்தமாதிரியான அவசர மசோதாக்கள், சட்டதிட்ட நடைமுறை அறிவிப்புகள். முதலில் கடுமையாக இருந்தாலும், போகப்போக இம்மசோதா மீதான கடினத் தன்மை குறையவே செய்யும். அவுட்சோர்சிங் வகையில் இந்திய நிறுவனங்களும் கூட அமெரிக்க நிறுவனங்களுக்கே பணிபுரிகின்றன. அதற்காகவே அதிகளவிலான ஊழியர்கள் ஆன்சைட் செல்லவும் தேவை. விப்ரோ போன்ற பெருநிறுவனங்களில் ஆட்டோமேஷன் அதிகரித்து வருகிறது. இங்கிருந்தே வெளிநாட்டிலிருக்கும் ஒரு சர்வரை, ஒரு சாப்ட்வேரை இயக்க முடியும் என்ற வகையில் வளர்ச்சி பெற்று வருகின்றன இந்திய நிறுவனங்கள். மேலும், நிறைய இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் கிளைகள் இருக்கின்றன. எனினும், இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளர் என்கிற வகையில் இந்திய ஊழியர்களுக்கு சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேமாதிரி, பலவருடங்களாக அமெரிக்காவிலேயே இருந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும், ஹெச்1.பி விசாவில் மட்டுமே பிரச்னை. அதைத் தாண்டி இன்னும் பலவகையான விசாக்கள் இருக்கின்றன. அவற்றின் நடைமுறைகளில் எந்த சிக்கலும் இல்லை. எனவே, டெக்னிக்கலா எனக்கு சொல்லத் தெரியாவிட்டாலும், தற்போது அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எதிர்காலத்தில் செல்லவிருக்கும் பணியாளர்களுக்கே இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.”

- பா.விஜயலெட்சுமி, சக்திவேல் முருகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்