வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (24/02/2017)

கடைசி தொடர்பு:14:27 (24/02/2017)

இக்கட்டின்போது டாக்டர் ஆன எம்.எல்.ஏ! - இதுவும் இந்தியாவில்தான்

மக்கள் மீது அக்கறை இல்லாமல் சுற்றி வரும் எம்.எல்.ஏக்கள் நிறைந்த இந்த நாட்டில், மருத்துவமனையில் டாக்டர்களே இல்லாத நிலையில் பெண் ஒருவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார் எம்.எல்.ஏ. ஒருவர்.

அறுவை சிகிச்சை செய்யும் எம்எல்ஏ கம் டாக்டர்

சில மாதங்களுக்கு முன் தெலங்கானாவில் ஒரு சம்பவம் நடந்தது. விபத்து நடந்த இடத்தை அமைச்சர் ஒருவர் கடந்து சென்றார். அப்போது சாலையில் கிடந்த சடலத்தைக் கண்டும்கூட தனது வாகனத்தை அவர் நிறுத்தவில்லை. என்ன ஏதுவென்று கேட்காமல் விபத்து நடந்த பகுதியை எந்தச் சலனமும் இல்லாமல் கடந்து சென்றார். அமைச்சரின் மனிதாபிமானமற்ற செயல் குறித்து மீடியாக்களில் செய்தி வெளியானது. இதுபோன்று பொறுப்பற்றவர்களை அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் தேர்வு செய்த நாம்தான் 'பொறுப்பற்றவர்கள்' என மக்கள் புலம்பினர். தமிழக எம்.எல்.ஏக்கள் சிலரின் சமீபத்திய செய்கைகள் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. அத்தகைய காயங்களுக்கு மருந்து போடும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

எம்.எல்.ஏ

மிஷோரத்தைச் சேர்ந்தவர் டாக்டர். பெய்ச்சுவா. சாய்ஹா தொகுதி எம்.எல்.ஏ இம்பாலில் உள்ள ரீஜனல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 1991-ம் ஆண்டு  எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர். அரசியல் ஆர்வம் காரணமாக தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக ஆனார். அரசியலுக்கு வருவதற்கு முன் பெய்ச்சுவா, மருத்துவப் பணிதான் செய்து வந்தார். தற்போது 51 வயதான பெய்ச்சுவா, மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரும்கூட. கடந்த 2013-ம் ஆண்டு மிசோரம் தேசிய முன்னணிக் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ ஆனார். ''மக்கள் நலனில் அக்கறை மிகுந்தவர். சிரத்தையும் எடுத்துக் கொள்பவர்" என்றும் இவரைப் பற்றி தொகுதியில் பேச்சும் அடிபடுகிறது.

நேற்று முன்தினம் சாய்ஹா, மாவட்டத் தலைமை மருத்துவமனையில் இருந்து, எம்.எல்.ஏ பெய்ச்சுவாவுக்கு ஒரு தகவல் வந்தது. 'மருத்துவமனையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் வயிற்று வலியால் அவதிப்படுகிறார். அறுவை சிகிச்சை செய்யக் கூடிய டாக்டர், பயிற்சிக்காக வெளியே சென்றிருக்கிறார். நீங்கள் வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா?' எனக் கேட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் 7 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். அதில் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர்தான். அவரும் பயிற்சிப் பணிக்காகச் சென்றிருக்கும் நிலையில்தான் அந்தப் பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

mizoram M.L.A

இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற எம்.எல்.ஏ டாக்டர் பெய்ச்சுவா, அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். ஆச்சரியம்; ஆபரேஷன் சக்ஸஸ். பேஷன்ட்டும் ஹெல்த்தி!  உயிர் பிழைத்த அந்தப் பெண், தனக்கு அறுவை சிகிச்சை செய்தது எம்.எல்.ஏ.வா என்று ஆச்சரியம் கலந்த நன்றிகளைக் கண்ணீர்ப் பெருக்குடன் தெரிவித்தாராம். மருத்துவமனை அலுவலர்களும், தக்க சமயத்தில் வந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட எம்.எல்.ஏ.வைக் கொண்டாடித் தீர்த்து விட்டனராம்.

இந்த சம்பவம் தொடர்பாக பெய்ச்சுவா கூறுகையில், ''அந்தப் பெண்ணின் உள் வயிற்றுப் பகுதியில் சிறிய துளை இருந்துள்ளது. அதனால்தான் வலியால் துடித்துள்ளார். அறுவை சிகிச்சைதான் வழி. உடனடியாக மேற்கொள்ளப்பட்டதால் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். நேற்று கூட அவரைச் சென்று பார்த்தேன். நலமாக இருக்கிறார். எனது மருத்துவப் பணியில் ஏராளமான அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறேன். எம்.எல்.ஏ ஆன பிறகு அறுவைசிகிச்சை செய்யவில்லை. அதனால், இந்த அறுவை சிகிச்சை எனக்கு ஸ்பெஷல்'' என்கிறார். 

டாக்டர் பெய்ச்சுவா கடந்த 2008-ம் ஆண்டே அரசியலில் புகுந்து சுயேட்சையாகப் போட்டியிட்டார். நம்ம மக்கள்தான் தகுதி வாய்ந்தவர்கள் சுயேட்சையாக நின்றால் தோற்கடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள்தானே! டாக்டர். பெய்ச்சுவா தோற்றுப் போனார். பின்னர் 2013-ம் ஆண்டு மிஸோரம் தேசிய முன்னணிக் கட்சியில் சேர்ந்த அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹைடோவை 222 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். 

பொறுப்பானவர்கள் பொறுப்புக்கு வரும்போது, மக்கள் சுபிட்சமடைவார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

- எம்.குமரேசன்


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்