டெல்லியில், கல்லூரி மாணவிக்கு மிரட்டல்!

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்  எனும் மாணவர் அமைப்பு, பாஜகவுடன் தொடர்பு உடையதாகும். டெல்லியைச் சேர்ந்த மாணவி குர்மீஹர் கவுர், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் பேச்சு, சுதந்திரத்தைக் குலைப்பதாகவும், இவர்களுக்கு எதிரான கருத்தை யார் முன் வைத்தாலும் தேசத் துரோகிகள் என அவர்களை  ஏ.பி.வி.பி அமைப்பு அடையாளப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
 
இதற்காக, அந்த அமைப்பினர் தொடர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டி வந்திருக்கின்றனர். மேலும் சிலர், அவரை ‘பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம்' என்றும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வக்கிர உணர்வோடு ஆபாச மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 
 
 

 

 

என்ன நடந்தது? 
 
குர்மீஹர் கவுர் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் மகளாவார். இவரது தந்தை ராணுவ பணியில் இருந்த போது நாட்டுக்காக உயிர்நீத்தவர். "எனது தந்தை கார்கில் போரில் கொல்லப்பட்டபோது  எனக்கு வயது வெறும் இரண்டு தான். ஆரம்பத்தில்  நான் பாகிஸ்தான் மீதும், முஸ்லீம்கள் மீதும் வெறுப்பு கொண்டிருந்தேன். ஆனால் ஆண்டுகள் உருண்டோட, என் தந்தைக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த பகையும் இல்லை என்பதையும், போர் என்பது என் தந்தையின் உயிரைப் பறித்ததையும் உணர்ந்தேன். போரற்ற வாழ்வே வேண்டும், இந்தியா பாகிஸ்தான் நல்லுறவை பேண வேண்டும்" என ஒரு வீடியோவில்   வலியுறுத்தியிருந்தார். இந்த வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. 
 
மாணவர்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் விதமாக செயல்படுவதாக ஏபிவிபி மீது குற்றச்சாட்டுகளை வைத்து சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவுகள் இட்டார். இதையடுத்து "என் தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர் தான் கொன்றது" என்ற பதாகையுடன் இருக்கும் அந்த மாணவியின் போட்டோவை வீடியோவில் இருந்து எடுத்து,  இணையதளத்தில் பரப்பி, அந்த மாணவி தேசத்துரோகி என அடையாளப்படுத்தும் பணிகளை சில 'தேச பக்தர்கள்' செய்ய ஆரம்பிக்கவே, 'நான் ஏபிவிபி அமைப்பை கண்டு பயப்படவில்லை' என்ற பதாகையை ஏந்திய போட்டோவை பேஸ்புக்கில்  புரொபைல் படமாக வைத்து, பேச்சுரிமையை ஆதரிக்கும் மாணவர்கள் இதை ஆதரிக்கவும் என குறிப்பிட்டிருந்தார். இங்கே தான் பிரச்னை வேறு விதமாக மாறியிருக்கிறது. குர்மீஹர் கவுருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!