வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (28/02/2017)

கடைசி தொடர்பு:15:08 (28/02/2017)

சேவாக்கை தொடர்ந்து மல்யுத்த வீரர் யோகேஷ்வரும் சர்ச்சை ட்வீட்

YOGESHWAR DUTT

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி குர்மேஹர் கவுர், சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.-வின் மாணவர்கள அமைப்பான ஏ.பி.வி.பி அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து கூறியிருந்தார். இதனையடுத்து, அவருக்கு பாலியல் மிரட்டல்கள் வந்தன. இதற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். கவுர், கார்கில் போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் அவர், 'பாகிஸ்தான் என் தந்தையை கொல்லவில்லை. போர்தான் கொன்றது' என்ற பதாகையை ஏந்தி சமூக வலைதளங்களில், இரு நாட்டின் அமைதியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஏ.பி.வி.பி பிரச்னை எழுந்த சமயத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக், 'நான் முச்சதம் அடிக்கவில்லை, என் பேட் தான் அடித்தது' என்று கவுரை கிண்டல் செய்யும் விதத்தில் ட்வீட் செய்திருந்தார். தற்போது, ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் டட், அவரை கிண்டல் செய்யும் விதத்தில் புகைப்பட ட்வீட் செய்துள்ளார்.

Yogesh tweet

கவுருக்கு, பாலியல் மிரட்டல் வந்ததையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது டெல்லி போலீஸ்.

இன்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் 'வன்முறைக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம்' என்ற பெயரில் பேரணி நடக்கிறது. இதில் கலந்துகொள்ள இருந்த கவுர், கடைசி நேரத்தில் பேரணியில் இருந்து விலகினார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் பிரசாரத்தில் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். இந்த பிரசாரம் என்னைப் பற்றியது அல்ல, மாணவர்களைப் பற்றியது. நான் என்ன சொல்ல விழைந்தேனோ அதைச் சொல்லிவிட்டேன். நான் பல கஷ்டங்களை கடந்துள்ளேன். ஒரு 20 வயது பெண்ணால் இவ்வளவுதான் தாங்கிக் கொள்ள முடியும்.' என்று பதிவு செய்துள்ளார். 

Gurmehar tweet

இன்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் துணை நிலை ஆளுநரை சந்தித்து இந்தப் பிரச்னை குறித்து பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க