வெளியிடப்பட்ட நேரம்: 20:13 (01/03/2017)

கடைசி தொடர்பு:20:57 (01/03/2017)

டெல்லி போராட்டம் : மாணவர்களின் அரசியலை கொச்சைப்படுத்தும் கட்சிகள்!

மாணவர்கள் போராட்டம்

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்தும், அதில் ஈடுபட்ட அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பைச் சேர்ந்த மாணவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து இரண்டு மாணவர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

கண்டனப் பேரணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் டெல்லி பல்கலைக்கழகத்தில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது. டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

ஏ.பி.வி.பி மாணவர்களுக்கு எதிர்ப்பு!

டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த வாரத்தில், இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும், ஏ.பி.வி.பி அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. அப்போது ஏ.பி.வி.பி மாணவர்கள், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களை கொடூரமாகத் தாக்கினர். பாரதிய ஜனதா சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யின் செயலைக் கண்டித்து, டெல்லியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக ஏ.பி.வி.வி-யினர் பதிவிட்டிருந்த சமூகவலைதள பதிவுகளுக்கும் பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வன்முறைக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் பங்கேற்ற மாணவர்களைத் தாக்கியதாகக்கூறி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டதாக ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த இரு மாணவர்களை அந்த அமைப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து பாரதிய வித்யா பரிஷத் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள ரம்ஜாஸ் கல்லூரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த சிலர் வன்முறையை ஏவி விட்டனர். சத்ராமாக் என்ற இடத்தில் இடதுசாரி சார்பு அமைப்பான ஏ.ஐ.எஸ்.ஏ அமைப்பினர், கடந்த செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த ஏ.பி.வி.பி-யினர், அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். சிலர், ஒரு மாணவரின் கழுத்தை நெரித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏ.ஐ.எஸ்.ஏ சார்பில் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகத் தாக்குதல், குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் அரசியல் புகுந்து விடுகிறது என்பதற்கு, இந்த வன்முறை மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி, மாணவர்களிடையே கலாசாரத்தை புகுத்துவதாக இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மாணவர்கள் படிப்புக்கு அப்பாற்பட்டு, தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் கொள்கைகளை வலுக்கட்டாயமாக புகுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதுபோன்ற நிலையில்தான் மோதல்கள் ஏற்பட்டு, அதுவே வன்முறையாக வெடித்துள்ளது. அதிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகங்களில், இத்தகைய சங்கங்களின் செயல்பாடு சற்று எல்லை மீறும் வகையிலேயே அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபோது வன்முறை ஏற்பட்டது. மாணவர் சங்கங்களின் செயல்பாடே பல்வேறு பிரச்னைகளுக்கும், வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. மாணவர்களிடையே கொள்கைகளைப் புகுத்தும் நிலையை சம்பந்தப்பட்ட அமைப்புகள் அல்லது அவை சார்ந்த அரசியல் கட்சிகள் தவிர்த்தால், மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாது, நாட்டின் எதிர்காலத்துக்கும் உகந்ததாக அமையும். கட்சிகள் தங்களின் வாக்குவங்கி அரசியலுக்காக மாணவர்களின் நியாயமான போராட்டங்களைக் கூட கொச்சைப்படுத்தும் நிலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது, இது ஜனநாயக நாட்டுக்குச் சிறந்ததல்லவே. அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை அறிந்து, தங்கள் எதிர்காலம் கருதி மாணவர்களும் செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் தங்களின் சுயலாபத்துக்கு மாணவர்களை இரையாக்காமல் இருத்தல் அவசியம்.

- சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்