'யாராக இருந்தாலும் சுதந்திரமாகப் பேசும் உரிமை இருக்கிறது'- சேவாக் ட்வீட்

Virendar Sehwag

டெல்லியைச் சேர்ந்த 20 வயது மாணவி குர்மெஹர் கவுர், சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க-வின் மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி-க்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து கூறியிருந்தார். இதனையடுத்து, அவருக்கு பாலியல் மிரட்டல்கள் வந்தன. குர்மெஹர், கார்கில் போரில் மரணமடைந்த இந்திய ராணுவ வீரரான கேப்டன் மந்தீப் சிங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னர், 'பாகிஸ்தான் என் தந்தையைக் கொல்லவில்லை. போர்தான் அவரைக் கொன்றது' என இந்திய-பாகிஸ்தான் இடையே அமைதியை வலியுறுத்தி,  சமூக வலைதளங்களில் பதாகை ஏந்திப் பிரசாரம் செய்துவந்தார். ஏ.பி.வி.பி பிரச்னை எழுந்த சமயத்தில், கிரிக்கெட் வீரர் சேவாக், 'நான் முச்சதம் அடிக்கவில்லை, என் பேட் தான் அடித்தது' என்று கவுரைக் கிண்டல்செய்யும் விதத்தில் ட்வீட் செய்திருந்தார்.

சேவாக் கிண்டல்செய்யும் விதத்தில் ட்வீட் செய்ததற்கு, கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, கவுருக்கு எதிராக பல விளையாட்டு வீரர்களும் கவுர் விஷயத்தைப் பற்றி கருத்து கூறியிருந்தனர். தற்போது, சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், 'யாராக இருந்தாலும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் சுதந்திரமாகப் பேசும் உரிமை இருக்கிறது. குர்மெஹர் கவுருக்கும் இந்த உரிமை இருக்கிறது. அதற்காக, அவருக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவர்கள் மிகக் கீழ்த்தரமான ஜீவிகள்.' என்று பதிவுசெய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!