வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (02/03/2017)

கடைசி தொடர்பு:14:37 (02/03/2017)

பணப் பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம்... சாமான்யனை இம்சிக்கும் தனியார் வங்கிகள்!

‘ஒரு மாதத்தில் நான்கு பணப் பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்’ என்று ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் அறிவித்துள்ளன. இது சாமனியனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

வங்கி, தனியார் வங்கி, பண பரிவர்த்தனை


மார்ச் 1-ம் தேதியுடன்!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி, தனது சேமிப்பு மற்றும் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ‘இனி மாதம் நான்கு முறை மட்டுமே இலவசமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்’ என்று அறிவித்துள்ளது. பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை எடுப்பது என எந்தவிதமான பரிவர்த்தனையாக இருந்தாலும், பணம் பிடித்தம் செய்யப்படும். ஒரு மாதத்தில் ஹெச்டிஎஃப்சி-யின் வங்கிக் கிளைகளில் நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசி‌ட் செய்வதற்கும், எடுப்பதற்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2017, மார்ச் 1-ம் தேதியுடன் ஆரம்பமாகிறது.

உதாரணத்துக்கு, ஒரு மாதத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர் அதன் வங்கிக் கிளைகளில் நான்கு முறை 2 லட்சம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். ஐந்தாவது முறையாக அதே மாதத்தில் வாடிக்கையாளர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கிறார் என்றால் 250 ரூபாய் பரிவர்த்தனைக் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். பரிவர்த்தனைக் கட்டணம் ஆயிரத்துக்கு 5 ரூபாய் என்று வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் வாடிக்கையாளர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கிறார் என்றால் 100 ரூபாய்தான் கட்டணமாக வரும். ஆனால், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. பரிவர்த்தனைக் கட்டணத்தைப் பொறுத்தவரை எது அதிகமாக இருக்கிறதோ அதுவே கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆயிரத்துக்கு மேல் அனுமதி இல்லை!

ஹெச்டிஎஃப்சி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அதன் கிளை தவிர, மற்ற வங்கிக் கிளைகளில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது அல்லது எடுப்பதாக இருந்தால் ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் அல்லது குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதில் எந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறதோ அந்தக் கட்டணமே வசூலிக்கப்படும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் வங்கிக் கிளைகளில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். ஏடிஎம்-களில் எடுக்கப்படும் பணத்திற்கு முன்பு இருந்த கட்டணங்களே பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைக்கு இனி மேல் 150 ரூபாய் கட்டணத்துடன் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். 25 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கணக்குகளில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ்...

ஹெச்டிஎஃப்சி வங்கியைப் போல ‌ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியும் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை விதித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் ஒவ்வொரு மாதமும் முதல் நா‌ன்கு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதன் பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. ‌இவ்வாறு வசூலிக்க‌ப்படும் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.150 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைக்கு, நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வங்கி கிளைகளில் முதல் முறை பணம் டெபாசிட் அல்லது பணம் பெறுவதற்கும் கட்டணம் விதிக்கப்படாது. ஆனால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு ஆயிரத்துக்கு 5 ரூபாய் அல்லது குறைந்தபட்சம் ரூ.150 என கட்டணமாக விதிக்கப்படும். இதைப்போல ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-களில் முதல் முறையாக இலவசமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். இரண்டாவது முறையிலிருந்து ஆயிரத்துக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தவரை அதன் வங்கிக் கிளைகளில் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின் பரிவர்த்தனைக்கு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 அல்லது குறைந்தபட்சம் ரூ.150 என்ற விகிதத்தில் கட்டண‌ம்‌ வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி பணமில்லாப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக பணப் பரிவர்த்தனைக்கு அதிரடியாக குறிப்பிட்ட கட்டணங்களை விதித்துள்ளது. ஆனால், இந்த அதிரடி சாமன்யனுக்கு `இடி'யாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. தனியார் வங்கிகளைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளும் இதேபோல் கட்டணம் வசூலிக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. 

- சோ.கார்த்திகேயன்