உணவு அரசியல்: பெருநிறுவன உணவு விடுதிகள் தரமானதா? #Alert

உணவு

கே.எஃப்.சி, மெக்டொனல்ட்ஸ் என மேற்கத்திய கலாசாரம் இந்தியாவுக்குள் காலடி வைத்தபிறகு, இன்றைய தலைமுறையினர் பலரும் வீட்டுச் சாப்பாட்டை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள். பிறந்தநாள், திருமண நாள், பணி ஓய்வு தினம் என எந்த நாள் வந்தாலும் ட்ரீட் கேட்கும் நண்பர்கள், பெரும்பாலும் செல்ல நினைப்பதும் இதுபோன்ற மேல்நாட்டு உணவகங்களுக்குத்தான். இங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில், சேர்க்கப்படும் மூலப் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானவையா? அவை நாம் உண்ணக்கூடிய வகையிலான உணவு வகைகள் தானா? என்பதெல்லாம் கேள்விக்குறிய விஷயங்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி கொல்கத்தாவில் இருக்கும் மெக்டொனல்ட்ஸ் கடையினுள் கொலைப் பசியோடு நுழைந்துள்ளார் பிரியங்கா என்ற கர்ப்பிணிப் பெண்மணி! உள்ளே நுழைந்த அவர் தனது டேபிளைத் தேடிப்பிடித்து அமர்ந்ததும், தனக்கு இஷ்டமான (உருளைக்கிழங்கால் செய்யப்படும்) 'ஃபிங்கர் சிப்ஸ்' (Fingerchips) ஆர்டர் செய்துள்ளார். டேபிளுக்கு சிப்ஸ் வந்ததும், அதில் ஒன்றை எடுத்து ஆசையோடு சாப்பிட எத்தனித்தவருக்கு சிப்ஸ்களுக்கு நடுவே வித்தியாசமாக தென்பட்ட பொருளை உற்று நோக்கியிருக்கிறார். அவர் கையில் வைத்திருந்த சிப்ஸிலும், நறுமணத்துக்குப் பதிலாக ஏதோ ஒருவித துர்வாடை வீசுவதைக் கண்டவர் உஷாராகி, சிப்ஸ் டப்பாவை அப்படியே சாய்த்து சிப்ஸ்களை டேபிளில் கொட்டி விளக்கு வெளிச்சத்தில் அந்தப் பொருளை தெளிவாகப் பார்த்தவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். காரணம்... சிப்ஸ்களுக்கு நடுவே இருந்த அந்த வித்தியாசமான பொருள், 'இறந்த நிலையிலான ஒரு குட்டிப் பல்லி'!

சாப்பாட்டுப் பொருளில் பல்லி கிடந்ததைப் பார்த்ததும், பசி அனைத்தும் பறந்து வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்துள்ளது. எழுந்து அவசரம் அவசரமாக கழிப்பறை நோக்கி ஓடியவர் அங்கே வாந்தி எடுத்துள்ளார். மீண்டும் கடைக்குள் திரும்பியவர் உடனடியாக, கடையின் மேலாளரிடம், சிப்ஸ்களுக்கு நடுவே பல்லி இறந்துகிடந்ததை சுட்டிக்காட்டி கொந்தளித்துள்ளார். ஆனால், அந்த மேலாளரோ, பிரியங்காவின் நியாயமான கோபத்தைப் புரிந்துகொள்ளாமல், வெகு அலட்சியமாக பதில் கூறியதுடன், கடமைக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். அவரின் இந்த செய்கை, பிரியங்காவின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. உடனடியாக, தனது செல்போனில், அந்த சிப்ஸ்-பல்லியினை புகைப்படம் எடுத்தவர் அதனைக் காவல் நிலையத்தில் கொடுத்து முறையாக வழக்குப்பதிவு செய்துவிட்டார். 

இதுகுறித்து லக்னோவில் இருக்கும் அவர் கணவர் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நான் என் குடும்பத்தின் மீது அக்கறைக் கொண்டுள்ளேன். ஒரு உணவு நிறுவனம் எப்படி இதுபோன்று கவனம் இல்லாமல் செயல்படுகிறது? இதுகுறித்து நான் மேலதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளேன். போலீஸும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது பற்றிய வழக்கு விசாரணையில் இருக்கிறது. கூடிய விரைவில் இதற்கு அந்த நிறுவனம் சரியான பதில் அளிக்க வேண்டும்.” என்று நியாயம் கேட்டுள்ளார்.

இதேபோல், கலிபோர்னியாவில் உள்ள கே.எஃப்.சி-யிலும் சிக்கனுக்கு பதில் எலிக்கறியை கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கே.எஃப்.சி டேவோர்ஸ் டிக்ஸன் என்பவர் கே.எஃப்.சி-யில், வறுத்த சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். சிறுது நேரம் கழித்து அவருக்கு எலி வடிவத்திலான பொரித்த சிக்கன் கொண்டுவந்து வைக்கப்பட்டது. இதனைப் பார்த்ததும் சந்தேகம் அடைந்த டேவோர்ஸ் டிக்ஸன், மேலாளரை அணுகி விசாரித்திருக்கிறார். ஆனால், மேலாளரிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, அந்த மேலாளர் அதனை எலிக் கறிதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதேபோல், அமெரிக்க கே.எப்.சி ஒன்றில் சிக்கனுக்கு நடுவே புழு ஒன்று உயிருடன் நெளிவதைப் பார்த்த ஒருவர் அதனை வீடியோவாகப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதிர்ச்சியடை வைக்கும் அந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து வந்தனர். வீடியோவில் இருந்து ஸ்க்ரீன் ஷாட்டுகளாகப் புகைப்படம் எடுத்தும் அவை பகிரப்பட்டன.

ருசிக்கு ஆசைப்பட்டு, உணவைத் தேடி இதுபோன்ற கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இப்படியான விபரீதங்களும் அரங்கேறி வருகின்றன. உணவு நிறுவனங்களில், உணவு தயாரிக்கும்போது கொஞ்சம் அக்கறையோடும் கவனத்தோடும் பணியாளர்கள் செயல்பட வேண்டும். மேலும், தவறுகள் நேர்ந்துவிட்டது தெரிந்த பிறகும் அதனை ஒப்புக்கொள்ளாமல், சமாளிக்கும் கடை நிர்வாகிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது. இந்த நிலைமை மாறினால்தான் அவர்களது வியாபாரம் செழிக்கும் என்ற அடிப்படையை இவர்கள் புரிந்துகொள்வது அவசரமான அவசியம். இனி மக்களாகிய நாம் போராட வேண்டியது, தரமான உணவுக்காக என்பதை உணர்த்துகிறது இதுபோன்ற பெருநிறுவன உணவு விடுதிகள்.

 - நந்தினி சுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!