மீத்தேனும் கிடையாது அணு உலையும் கிடையாது... அற்புத நாடு பூட்டான்! #Bhutan | Bhutan: The World's Happiest Country

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (06/03/2017)

கடைசி தொடர்பு:17:25 (06/03/2017)

மீத்தேனும் கிடையாது அணு உலையும் கிடையாது... அற்புத நாடு பூட்டான்! #Bhutan

இந்தியாவின் அருகில் உள்ள நாடு பூட்டான். ஆசியாவின் 'ஸ்விட்சர்லாந்து ' எனச் சொல்வார்கள். பணமும் பவிசும் இல்லாத எளிமை நிறைந்த மக்கள். அரசும் எளிமையானது.  மன்னர் ஆட்சி முறைதான். மக்கள் மகிழ்ச்சி மட்டுமே அரசின் இலக்கு. மீத்தேனும் கிடையாது... அணு ஆயுதமும் தயாரிக்காது... எந்த நாட்டுடனும் போர் புரிந்ததில்லை. விவசாயம்தான் முக்கியத் தொழில்.

மகிழ்ச்சியான மக்கள் நிறைந்த நாடு பூடான்

இந்த நாட்டில் மக்களின் மகிழ்ச்சியைப் பாதுகாக்க  'Happiness' என்ற தனித்துறை இயங்குகிறது. மேற்கத்திய கலாசாரத்தை விரும்பும் நம் நாட்டில், ஐபோன் இல்லையென்றால் வருத்தப்படுகிறார்கள்.  அதனை வாங்குவதற்கு பணத்தைப் புரட்டுகிறார்கள். பின்னர். அதனை பாதுகாக்க படாத பாடுபடுகிறார்கள். மனதுக்குப் பிடித்ததைச் செய்தாலும்கூட, மன அழுத்தமே நமக்கு ஏற்படுகிறது. 

பூட்டான் மக்களோ... விலை உயர்ந்த எந்த வாழ்க்கை முறைக்கும் ஆசைப்படுவதில்லை. எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள்.

பூடான்

மக்களிடம் பொய் , புரட்டு இல்லை. அடுத்தவர்களுக்கு முடிந்தவரை நன்மை செய்கிறார்கள். 'நாம் சந்தோஷமாக இருந்தால்தானே மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முடியும்' என்பதையும் புரிந்துகொண்டிக்கிறார்கள். இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார்கள். டி.வி. பார்ப்பதைக்கூட மக்கள் விரும்புவதில்லை. சமூக வலைதளங்கள் பக்கம்கூடப் போவதில்லை. ட்வீட், ரீட்வீட், ஃபேஸ்புக். லைக்ஸ் கமென்ட்ஸ் இதுவெல்லாம் நமது சந்தோஷத்தை பாதிக்கக் கூடிய விஷயமாம். பூட்டான் மக்கள் பார்வையில் சமூக வலைதளங்கள் ஒரு 'நான்சென்ஸ்'!.. இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த நாட்டு மக்கள் உழைப்பைக் கொட்டிக் கொடுக்கத் தேவையே இல்லை. தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தையும் அணுஉலை திட்டங்களையும் கொண்டு வரும் மத்திய அரசு, பூட்டானில் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்கிறது. 

பூடான்

அதனால், கடந்த சில ஆண்டுகளாக பூட்டான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துக்கொண்டே வருகிறது. தங்கள் நாட்டில் குவிந்து கிடக்கும் இயற்கை வளத்தைக் காப்பதோடு, நாட்டின் வளத்தை பொருளாதாரத்துக்கு உகந்த வகையில் எப்படி மாற்ற முடியும் என்பதில் பூட்டானியர்கள் மிகத் தெளிவு. சுற்றுலா முக்கியத் தொழில். இந்த நாட்டில் நீர் மின் திட்டத்தில் முதலீடு செய்யும் இந்தியா, அங்கே மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கேட்டால், தூதரக உறவையே முறித்துக்கொள்ளும் பூட்டான்.

நாட்டில் 50 சதவீத வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டவை. காடுகளை அழித்து விட்டு இஷ்டத்துக்கு கட்டடங்கள் கட்டிவிட முடியாது. பொதுவாகவே புத்த மதம் அமைதியை விரும்புகிறது. காடுகள் மட்டும்தான் அமைதியைத் தர முடியும் என்பது பூட்டானின் நம்பிக்கை. எங்கு நோக்கினாலும் வனச் சரணாலயங்கள் இருக்கின்றன. பூட்டானில் 'விலங்குகள் கொலை' பற்றியெல்லாம் யோசித்துக்கூட பார்த்துவிட முடியாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் பூட்டானியர்கள் செய்துவிடுவதில்லை. ஒரு திட்டத்தால் மக்கள் மகிழ்ச்சி பாதிக்கிறதா... அந்த விஷயத்தை அரசு யோசித்துக்கூட பார்ப்பதில்லை. 

பூடான்

பூட்டான் மக்கள் தங்களைத் தாங்களே சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள். அரசாங்கம் மக்களின் சந்தோஷத்தை, மகிழ்ச்சியை ஆராய்வதற்காக ஜிடிபி போல Gross National Happiness (GNH) என்ற அளவீடு வைத்திருக்கிறது.. ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், 'நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா...' என்ற கேள்வி கண்டிப்பாக எழுப்பப்படும். ஆய்வின்படி, கடந்த 2015ம் ஆண்டு, 35 சதவீத மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் 47.9 சதவீத மக்கள் மிதமான மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். வெறும் 8.08 சதவீத மக்கள்,  'நாங்கள் சந்தோஷமாக இல்லை' எனக் கூற, அதிர்ந்துவிட்டதாம் பூட்டான் அரசு. கவலையில் உள்ள மக்களையும் மகிழ்ச்சியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

பூடான்

பூட்டான் இயற்கையாகவே மலைகள் சூழ்ந்த நாடு. நாட்டில் 70 சதவீதம் காடுகள். ஆசியாவிலேயே வனம் நிறைந்த நாடு இதுதான். விலங்கினங்களும் ஏராளம். அடிக்கடி அவற்றை எதிர்கொள்ளவும் செய்கிறார்கள். அந்த வழக்கம், பூட்டான் மக்களை துணிவுமிக்கவர்களாகவும் மாற்றியிருக்கிறது. அடிக்கடி வனங்களுக்குள் சுற்றுலா செல்வதும் மக்களின் பழக்கம். இதனால், ஒவ்வொரு முறையும் மனம் புத்துணர்வு பெறுகிறதாம்.

பூட்டானை பொறுத்தவரை மக்களும் மன்னரும் ஒன்றுதான். வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர், பூட்டானுக்கு ஒரு முறை விசிட் செய்துள்ளார். திம்புவில் ஒரு இடத்தில் குழந்தைகளுடன் இளைஞர் ஒருவர் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.  அவர் பூட்டான் இளவரசர் எனத் தெரிந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.  மன்னர் வீட்டுக் குழந்தைகளும் சமானியர்களாகவே வாழ்கின்றனர். பூட்டான் அரச குடும்பத்தினர் சாதாரணமாக சாலையில் நடந்து போகலாம். தாங்கள் விரும்பிதைச் செய்யலாம். மக்களும் மன்னரைக் கண்டு வியப்பதில்லை. மன்னரும் மக்களை அணுகத் தயங்குவதில்லை. 

பூடான்

அடுத்தபடியாக உறங்குவதிலும் பூட்டான் மக்கள் வஞ்சனை வைப்பதில்லை. நல்ல உறக்கம் நம்மை மகிழ்ச்சியாக இருக்க வைக்கும். நமது பணித்திறனை அதிகரிக்கும்.. அதனால் 8 மணி நேரம் நிம்மதியாக உறங்குகின்றனர்.  பூட்டான் உலகமயமாக்கலுக்கெல்லாம் இன்னும் பலியாகாத நாடு. வெளிநாட்டுத் தலைவர்கள் பூட்டானுக்குச் சென்றால், அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன் பூடான் கலாசார உணவான செவ்வரிசி உணவும் கண்டிப்பாகப் பரிமாறப்படும். 

 கடந்த 2008ம் ஆண்டு பூட்டானில் முதன்முறையாக அதிபர் பதவிக்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. நம்ம ஊரு அரசியல்வாதிகள், 'உங்களுக்கு அதைச் செய்வேன்... இதைச் செய்வேன்' என அள்ளி விடுவார்கள். ஆனால், பூட்டான் தேர்தலில் போட்டியிட்ட தலைவர்கள் அளித்த வாக்குறுதி என்ன தெரியுமா?

'உங்களின் மகிழ்ச்சி பாதுகாக்கப்படும்!'

-எம்.குமரேசன்


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்