வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (06/03/2017)

கடைசி தொடர்பு:17:56 (06/03/2017)

28,700 டன் எடை... 226.5 மீட்டர் நீளம் , 48.78 மீட்டர் அகலம்... 30 ஆண்டுகள் சேவை... விடைபெறுகிறார் ஐ.என்.எஸ் விராட்! #INSViraat

விராட்

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கடற்படையில் சேவையாற்றிய ஐ.என்.எஸ் விராட், இன்றுடன் ஓய்வுபெறுகிறது. விராட் பற்றிய சில நினைவுகள்...
 
மிகப் பழைமையான விமானந்தாங்கி கப்பல்களில் ஒன்று ஐ.என்.எஸ் விராட். இது,1944-ல் இங்கிலாந்து நாட்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் (ஆர்-12) என்று பெயரிடப்பட்ட இந்த விமானந்தாங்கி கப்பல்,1959-ம் ஆண்டு இங்கிலாந்து கடற்படையில் சேர்க்கப்பட்டது. 1984-ல் அந்த நாட்டு கப்பற்படையிலிருந்து ஓய்வுபெற்ற அந்தக் கப்பலை இந்தியா வாங்கி, ஐ.என்.எஸ் விராட் என்று பெயரிட்டு சில மாற்றங்களைச் செய்தது. அதற்குப் பின்னர் அது, 1987-ல் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை, பாட்டியம்மாவாக (கிராண்ட் ஓல்டு லேடி) இந்தியக் கடற்பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. 28,700 டன் எடைகொண்ட இந்தக் கப்பலின் நீளம் 226.5 மீட்டர், அகலம் 48.78 மீட்டர். மணிக்கு 52 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது. அதிகபட்சமாக இந்தக் கப்பலில் 2,100 போர் வீரர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் பயணிக்க முடியும். 1989-ம் ஆண்டு இலங்கைக்கு, இந்திய அமைதிப்படை சென்றபோதும், 2001-ல் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின்போதும் ஐ.என்.எஸ் விராட் விமானந்தாங்கி கப்பல், இந்தியக் கடற்படையின் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றியது.
 
இந்தியாவிடம் ஐ.என்.ஐ விக்ராந்த், ஐ.என்.எஸ் விராட் என்று இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்கள் இருந்தன. மூன்றாவதாக ரஷ்யாவிடமிருந்து வாங்கிய விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா பணியில் சேர்ந்தது. தற்போது, விக்ரமாதித்யா மட்டுமே இந்தியாவிடம் உள்ளது. இன்னொரு கப்பல் கொச்சி, கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் புதிய கப்பல் 2018-ல் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் 'விக்ராந்த்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐ.என்.எஸ் விக்ராந்த் ஓய்வுபெற்றது. அந்தக் கப்பலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட இரும்பைப் பயன்படுத்தி வாகனம் தயாரிப்பதாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுவனம் விளம்பரம் செய்வது குறிப்பிடத்தக்கது. ஓய்வுபெறும் அந்த விமானந்தாங்கி கப்பலை, ஆந்திர அரசு வாங்கப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆந்திர அரசு இதை வாங்கி, அதைக்கொண்டு விசாகப்பட்டினம் அருகில் போர்க்கப்பல் அருங்காட்சியகமாகவும், சொகுசு விடுதியாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன் செலவு 1,000 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

''ஆந்திர அரசு இதை வாங்கவில்லை எனில், இந்தக் கப்பல் ஏலத்தில் விடப்பட்டு உடைக்கப்படும்'' என்று கடற்படைத் தளபதி தெரிவித்திருக்கிறார்.

பழசுக்கு எப்போதும் மவுசு குறையாது.

-பிரவீன் குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்