“எங்களுக்கே பாதுகாப்பில்லை!” - எல்லையில் ராணுவ வீரர்கள்...!

ராணுவ வீரர்கள்

“பாதுகாப்பு தரும் எங்களுக்கே பாதுகாப்பு இல்லைனா நாங்க எங்க போய் முறையிட?” என்று எல்லையில் குமுறத் தொடங்கியுள்ளனர் நம் ராணுவ வீரர்கள். கடந்த டிசம்பர் மாதம் ராணுவ வீரர் தேஜ் பகதூர் என்பவர், ராணுவத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். ''ராணுவத்தில் தங்களுக்கு உணவு சரிவரத் தரப்படுவதில்லை எனவும், ஒரு சப்பாத்தியும் கொஞ்சம் பருப்புமே தரப்படுகிறது எனவும், அதைச் சாப்பிட்டுவிட்டுத்தான் தாங்கள் கடுங்குளிரில் நிற்க வேண்டியுள்ளது'' எனவும் அவர் அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். ராணுவத் தரப்பு அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றது.

ராணுவ வீரர்

தேஜ் பகதூரின் கதை!

இதனைத் தொடர்ந்து அவர் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் அதற்கு அனுமதி மறுத்தது எல்லை பாதுகாப்புப் படை தலைமை. இந்த நிலையில், அவர் காணாமல் போனதாகவும் அவரது மனைவி புகார் ஒன்றைத் தெரிவித்தார். அதற்கு, எல்லை ராணுவத் தலைமையோ... ''அவர் காணாமல் போகவில்லை என்றும், அவரது குற்றச்சாட்டின் மீதான விசாரணை இன்னும் தொடர்வதால் அவருக்கு விருப்ப ஒய்வு தற்காலிகமாக மறுக்கப்பட்டுள்ளது'' என்றும் தெரிவித்தது. 

ராணுவ வீரர்

ராய் மேத்யூவுக்கு நிகழ்ந்த பரிதாபம்!

தேஜ் பகதூருக்கு நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து... எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் உண்மையிலேயே அல்லல்படுகிறார்களா என்று கள ஆய்வு செய்ய ஊடகத்தைச் சேர்ந்த ஒருவர், ராணுவ அதிகாரிகளிடம் துப்பறியும் வேலையில் ஈடுபட்டார். அப்போது, அங்கே அதிகாரிகளுக்கு உதவியில் ஈடுபட்டிருந்த ஜவான் ராய் மேத்யூ பேசியதை ரகசியமாக வீடியோ பதிவுசெய்து வெளியிட்டுள்ளது ஒரு வடக்கத்திய ஊடகம். இந்த வீடியோ ஆதாரம் உடனடியாக அதன் தளத்திலிருந்து நீக்கப்பட்டாலும், இது பகிரப்பட்ட அடுத்த நொடியே பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜவான் ராய் மேத்யூ, இரண்டு தினங்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்தவர் ஜவான் ராய் மேத்யூ. ''அவரின் இறப்புக்கு ஊடகத்தின் அலட்சியப் போக்குதான் காரணமென்று குற்றம்சாட்டுகிறார்கள்'' அவரது மனைவியும் உறவினர்களும்.

ராணுவ வீரர்

சிந்தவ் ஜோகிதாஸ் குமுறல்!

ஜவானின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ராணுவத்தில் இருக்கும் மற்றொரு சிப்பாயான சிந்தவ் ஜோகிதாஸ் என்பவர், தங்கள் தலைமை அதிகாரிகளின் வீட்டில் வீடு துடைப்பதற்கும் துணி துவைப்பதற்கும் தாங்கள் நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் துணி துவைக்கும் பணிக்குத்தான், சிந்தவ் ராணுவத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், ராணுவத்தில் சமைப்பது, நீர் இறைப்பது என்று ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொருவர் இருப்பார்கள். இது சிந்தவுக்கு ஏற்கெனவே தெரிந்த நிலையிலும் அவர் பொய் பிரசாரம் செய்வதாக எல்லை ராணுவப் படை தலைமையகம் கூறியுள்ளது.

ராணுவத்தில் பாதுகாவலுக்கு மட்டும்தான் சீருடை அணிந்து துப்பாக்கி ஏந்தி இருக்கிறார்கள். இருபத்து நான்கு மணி நேரமும் அவர்கள் காவல் காப்பதையே கடமையாகக் கொண்டவர்கள் என்றும் அவர்களை நாம் என்றுமே அவமதிக்கக் கூடாது என்றும் பள்ளிக்காலத்தில் போதிக்கப்பட்ட அத்தனைக்கும் மாறாக, இங்கே சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. உண்மையில், அவர்களை மதிப்பது என்பதைக் கடந்து அவர்களின் நிலைக்காகக் கவலைகொள்ளும் நிலைதான் தற்போது இருக்கிறது.

- ஐஷ்வர்யா 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!