மகளிர் தின விழாவில் பெண்கள் அவமதிப்பைக் கண்டுகொள்ளாத மோடி! | On Women's Day event, Modi kept calm as women were disrespected at the function

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (13/03/2017)

கடைசி தொடர்பு:19:52 (13/03/2017)

மகளிர் தின விழாவில் பெண்கள் அவமதிப்பைக் கண்டுகொள்ளாத மோடி!

மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்திலுள்ள காந்தி நகரில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி,  பெண் சாதனையாளர்களை  கெளரவிக்கும் விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் விருது  பெறவிருந்த  இஸ்லாமியப் பெண்கள் அணிந்திருந்த ‘ஹிஜாப்’ என்ற  தலை சால்வையை  அகற்றுமாறு கூறப்பட்டதாக  சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து, அங்கு பரபரப்பான சூழல்  உருவானது. 

மேலும்,  இந்த விழாவில் மோடியை  சந்திக்க விரும்பிய  சாலினி சிங் என்பவரையும், அங்கிருந்த காவலர்கள் பலவந்தமாக, அவரைக் கைப்பிடித்து இழுத்து அப்புறப்படுத்திய காட்சி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த இரண்டு சம்பவங்களுக்கும், மோடி எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. இதுகுறித்து வெளியான வீடியோ பதிவு.   

உத்தரப்பிரதேச  மாநிலத்தைச் சேர்ந்த சாலினி சிங் என்ற பெண், கெளத்தம் புத்த மாவட்டத்தில் உள்ள தோரா (Thora) என்ற கிராம பஞ்சாயத்தின் சார்பில், விழாவில்  கலந்துகொண்டார். விழா துவங்கிய சற்று நேரத்திலேயே, தனது பஞ்சாயத்தில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகளை சொல்வதற்காகவும், நினைவுப் பரிசு ஒன்றை அளிக்கவும், அவர்  காவலர்களை மீறி, மோடியிருக்கும் மேடை அருகே செல்ல முற்பட்டார். அவரை மோடியின் பாதுகாப்பாளர்களும், காந்தி நகர் காவல்துறையினரும் உடனே அவரை தடுத்து நிறுத்தி, அந்த விழாவை விட்டு வெளியேற்றினர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், “அவர் மாநில அரசு மீதுள்ள அதிருப்தியை மோடியிடம் தெரிவிக்க விரும்பினார். அவரின் கிராமத்தில்,  கிட்டதட்ட  12,000 பேருக்கும் மேலான மக்கள் இருந்தும், தண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் போன்ற அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கின்றனர். மேலும், மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் எதுவும், மாநில அரசு, அக்கிராமத்துக்கு வழங்குவதில்லை. இதனை மோடியிடம் கூறவும், மேலும் தனது கிராமத்தின் சார்பாக ஒரு நினைவுப் பரிசை அவருக்கு  வழங்கவும் சென்றார். அவருக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதால், நாங்கள் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”,  என்று கூறினர். 

மேலும் இதே நிகழ்ச்சியில், கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்களின்  ‘ஹிஜாப்’ என்று அழைக்கப்படும் தலை சால்வையை அகற்றுமாறும், அதன்பின்னரே விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அங்கிருந்த பாதுகாவலர்கள்  கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.  

இதுகுறித்து, அதில் கலந்துகொண்ட ஷாஹர்பான்  சைதல்வி (Shaharban Saidalavi) என்ற பெண், கேரள தனியார் தொலைகாட்சிகளுக்கு அளித்த பேட்டியில், ”நிகழ்ச்சியின் பாதுகாவலர்கள், நாங்கள்  அணிந்திருந்த தலை சால்வையை அகற்றுமாறு கூறினர். நான் அதனை கழற்றிவிட்டு, விழா நடக்கும் இடத்துக்குச் சென்றேன். ஆனால்,  கசரகோட் மாவட்டத்தில் இருந்து சேர்குளம் (Cherkulam ),  த்ரிகரிபூர் ( Trikaripur)  ஆகிய கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தங்களின் பாரம்பர்யமான ‘ஹிஜாப்’ இல்லாமல், விழாவில் கலந்துகொள்ள மறுத்தனர்”, என்று தெரிவித்தார். 

இதனையடுத்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்  அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு, அவர்களை ‘ஹிஜாப்’புடன் விழாவில் கலந்துகொள்ள அனுமதித்தனர். 

பெண்களை கெளரவிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து, சம்பவ இடத்தில் மெளனம் காத்த பிரதமரின் செயல்  பெண்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. 

- ஷோபனா


டிரெண்டிங் @ விகடன்