வெளியிடப்பட்ட நேரம்: 19:36 (13/03/2017)

கடைசி தொடர்பு:20:33 (13/03/2017)

முகேஷ் அம்பானி பகிர்ந்த 4 சக்சஸ் ரகசியங்கள்! #MustRead

முகேஷ் அம்பானி

இந்திய ஐடி துறையின் கூட்டமைப்பாக விளங்கும் நாஸ்காம் அமைப்பின் வருடாந்திர தொழிலதிபர்கள் உச்சி மாநாடு மும்பையில், பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியும் கலந்துகொண்டார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவின் ஒவ்வொரு குடிமக்களிடமும் தனது அதிரடி ஜியோ ஆட்டத்தின் மூலம் பேசுபொருளாகி இருக்கிறார். என்னதான் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் திருபாய் அம்பானியால் உருவாக்கப்பட்டு முகேஷுக்கு தாரை வார்க்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் அதன் வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகரிக்க செய்தது சாதனைதான். ஒரு தொழிலதிபராக அவர் இன்னும் புரியாத புதிராகவே இருந்துகொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட இந்திய நிறுவனங்கள் அனைத்தும் வியந்து பார்க்கும் முகேஷ் அம்பானி அந்த மாநாட்டில் பேசுகையில் தொழில்முனைவோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்களைத் தன்னுடைய அனுபவத்தில் எடுத்துச் சொன்னார். அவராக எதையும் கற்றுக்கொண்டுவிடவில்லை. அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களும், வளர்ந்த சூழலுமே அவருக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

தந்தை சொன்ன பாடம்!

ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்து திரும்பி வந்த முகேஷ், "என்னுடைய உத்தியோகம் என்ன? நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று தந்தை திருபாய் அம்பானியிடம் கேட்கிறார். அதற்குத் திருபாய் அம்பானி, "நீ ஒரு வேலையைத் தேடுவதாக இருந்தால் நீ ஒரு மேனேஜராக ஆகலாம். அதுவே நீ ஒரு தொழிலதிபராக விரும்பினால், உனக்கு என்ன தேவை என்பதை நீதான் கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறினாராம். அதன்படியே செயல்பட்டதால்தான் இன்றும் இந்திய பிசினஸ் உலகின் முடிசூடா மன்னனாக இருக்கிறார்.

ஆசிரியரிடம் கற்ற பாடம்!

அம்பானி படித்த கெமிக்கல் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் இருந்த ஆசிரியர் ஒருவர் வாழ்க்கையின் மிக முக்கியமான பாடத்தை அம்பானிக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். அந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வாராம். "நீ தீர்க்கக் கூடிய பிரச்னைகளின் பட்டியலை நான் உனக்குத் தரவே மாட்டேன். நீயே உன்னுடைய பிரச்னைகளைக் கண்டறி, நீ கண்டறியும் பிரச்னைகளின் தரம் மற்றும் அதற்கு நீ தரும் தீர்வுகளின் தரத்தைப் பொறுத்து நான் உனக்கு மதிப்பெண் தருவேன்" என்று கூறுவாராம். அம்பானி இதனைப் படிப்பதற்கு மட்டுமல்ல தொழிலிலும் பயன்படுத்துகிறார். நம்முடைய பிரச்னைகளை நாமே அடையாளம் காண்பதும் அதற்கான தீர்வுகளைத் திட்டமிடுவதும்தான் நமக்கான உண்மையான வெற்றியைத் தரும்.

வாழ்க்கைக் கற்று தந்த பாடம்!

“சமுதாயத்துக்கு உதவக் கூடிய ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். அதுவே உங்கள் வியாபாரத்தின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதைத் தாண்டி அடையும் வருமானம் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும் என்கிறார் அம்பானி. வருமானத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினால் உண்மையில் உங்களால் சிறந்த மனிதனாக முடியாது என்றும் கூறினார். அதேபோல் தோல்விகள் தான் வெற்றிக்கான பாதையை வகுக்க நமக்கு கற்றுக்கொடுக்கும் தோல்விகளால் மனம் துவண்டு விடக்கூடாது. தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்றும் முயற்சிகளை விட்டுக் கொடுக்காதீர்கள்”  என்கிறார் முகேஷ் அம்பானி.  

தானாய்க் கற்றுக் கொண்ட பாடம்!  

“தொழில்முனைவோர் எந்தக் கட்டத்திலும் தன்னம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளிகளிலும் நாம் பல்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் நம்முடைய உணர்வுகளோடு விளையாடுவார்கள். ஆனால் ஒருபோதும் நம்முடைய நிலையிலிருந்து நாம் பின்வாங்கக் கூடாது. சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. பிசினஸை வெற்றிகரமாக வளர்த்தெடுக்க சரியான அணி அவசியம் தேவை. நமது தன்னம்பிக்கையும், அதோடு பயணிக்கிற சரியான அணியும் அமைவது மிகவும் முக்கியம்” - இது அவர் சொன்ன நான்காவது பாடம்!    

இப்படி, தான் தன்னுடைய பிசினஸ் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்களை அவர் அந்த மாநாட்டில் பகிர்ந்துகொண்டார். ஆனால் ஒரு தொழிலதிபர் தனது ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வதைக் கேட்கும் ஒருவரால் அந்த ரகசியத்தை வைத்துக்கொண்டு மட்டுமே அவரைப் போல் வளர்ந்துவிட முடியாது என்பதுதான் நிஜம். அம்பானியாக ஆக வேண்டுமெனில் அம்பானியின் வாழ்க்கையையே வாழ்ந்தால் தான் முடியும். அல்லது அந்த வெற்றி ரகசியங்களை நமக்கு ஏற்றாற்போல, மாற்றிக் கொண்டு அவற்றைப் பின்பற்றினால்... வெற்றி நிச்சயம்! 

- ஜெ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்