"பறவையாக வேண்டும் என்ற கனவு சுமந்தவன்" - முத்துக்கிருஷ்ணனின் நண்பர்கள் அதிர்ச்சி! #JNU | He had dreams to fly, says JNU MuthuKrishnan's Friend who are in shock over his death

வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (14/03/2017)

கடைசி தொடர்பு:12:37 (17/03/2017)

"பறவையாக வேண்டும் என்ற கனவு சுமந்தவன்" - முத்துக்கிருஷ்ணனின் நண்பர்கள் அதிர்ச்சி! #JNU

முத்துக்கிருஷ்ணன்

"நான் அப்போது நீலாங்கரையில் பெயிண்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் தலைக்குமேல் விமானம் பறந்து கொண்டிருந்தது. விமானங்களில் பறப்பது எல்லாம் சாத்தியமில்லாதது. அதனால் அடுத்தமுறை என்னை பறவையாகப் படைக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பறவைகளால் மட்டும்தான் எளிமையாக தனது சிறகுகளைக் கொண்டே உலகத்தைச் சுற்றி வரமுடியும். ஒரு பறவையாக இந்த உலகத்தின் எல்லைகளைக் காணும்வரை நான் சோர்வடைந்துவிடக் கூடாது”, மரணமடைந்த ஜே.என்.யூ மாணவன் முத்துக்கிருஷ்ணன், தனது முகநூலில் எழுதிய பதிவொன்றின் தமிழாக்கம் இது. நேற்றுவரை உயிருடன் இருந்த முத்துக்கிருஷ்ணன் தற்போது இல்லை. அவர் தற்கொலை செய்து கொண்டதாக உடலைப் பார்த்த போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் அது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவர் தற்கொலை செய்யும் எண்ணமுடையவர் இல்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள்.


தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவிட்டு, அவர்களின் அறைக்குள் சமைப்பதற்காக வந்தவர் திடீரென தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் இல்லை. இத்தனைக்கும் தனது அக்காவின் திருமணத்தை பத்து நாட்களில் வைத்துக் கொண்டு, தனது தந்தையிடம் சேலம் வருவது தொடர்பாக, நல்ல முறையில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். தனது வழிகாட்டி பேராசிரியருடன் (கைடு) சற்றே முரண்பாடு இருந்தாலும், அது முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கானதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஜே.என்.யூவில் கொரிய மாணவர்களுடன்தான் தங்கி இருந்திருக்கிறார் அவர். நண்பர்களுடன் ஹோலி கொண்டாடச் சென்ற இடத்தில்தான், இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது!

அங்கே படிப்பது கடினம் என்றோம்! அங்கேதான் படிப்பேன் என்றான்!”

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.; எம்.ஃபில். படித்தவர்  முத்துக்கிருஷ்ணன். அங்கே அவர்களுக்கு இருந்த நண்பர்கள் வட்டம் அதிகம். அவர்களில் ஒருவரான ஏக்னஸ் அமலா கூறுகையில், "முத்து எனக்கு தம்பி மாதிரி. அவன் தற்கொலை செய்து கொள்கிற ஆள் கிடையாது. எதையும் ரொம்ப கூலாக எடுத்துக் கொள்வான். ஜே.என்.யூ-வில் சேரணும் என்பது அவனுடைய கனவு. அங்கே படிப்பதெல்லாம் கஷ்டம் என்று நாங்கள்கூட சொல்வோம், ஆனால் தொடர்ந்து தேர்வு எழுதிதான் அவனுக்கு அங்கே அனுமதி கிடைத்தது. சென்ற ஜூலையில்தான் சேர்ந்தான். அங்கே தமிழ் மாணவர்கள் மற்றும் வடக்கத்திய மாணவர்கள் இடையே எப்போதுமே பிரச்னைகள் உண்டு. ஆனால் அது பெரும்பிரச்னையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஃபேஸ்புக்கில் அவன் கடைசியாக இட்ட பதிவை வைத்து, அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவன் எப்போதுமே அதுபோன்று ஏதாவது தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன்தான். அவனது மரணம் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

மாணவர்கள்-ஆசிரியர் உறவு சுமூகமாக இருப்பதில்லை

முற்போக்கு மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாரதி கூறுகையில், "இது ஒடுக்கப்பட்டவர்கள் மீது திணிக்கப்படும் பிரச்னையால் நிகழ்ந்த மரணமாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்குப் பின்னணி இருக்கும். ஒடுக்கப்பட்டவராக இருந்தாலும் அங்கே தமிழர்கள் என்கிற அடிப்படையிலும் தனித்து விடப்படுகிறார்கள். ஆனால், அதுதான் காரணம் என்று சரிவரச் சொல்லமுடியாது. மற்றொருபுறம் மாணவர்களுடைய எண்ணம் தற்போது முற்றிலும் அரசியல்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக, இயல்பாக நடக்கும் பிரச்னையிலும் அரசியல்தேடும் எண்ணம் அதிகரித்து விட்டது. அதனால், ஆசிரியர் - மாணவர்கள் இடையேயான உறவு சுமூகமாக இருப்பதில்லை. ஏ.பி.வி.பி போன்ற அமைப்புகள் ஒருபக்கம் எப்போதும் பிரச்னைகள் ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், இதுபோன்ற பிரச்னைகளும் மறுபக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு கண்டால்தான் மாணவர்களின்  மரணத்தைத் தடுக்க முடியும்” என்றார். 

வெமூலா மரணம் மக்களுக்குத் தெளிவுபடுத்தியது வேறு. அவனது நட்சத்திரக் கனவை அவர்களுக்கு உணர்த்தியது. முத்துக்கிருஷ்ணன் மரணம் மர்மம் கலந்து கிடக்கிறது. பறவையாக வேண்டும் என்ற கனவை சுமந்தவன், இன்று இல்லையென்றாலும் அவன் சிறகுகள் மட்டும் மிச்சமாய் வான்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன.

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்