''அழகு என்பது முகம் மட்டுமல்ல!''- ஆசிட் வீச்சில் மீண்டெழுந்த லெட்சுமி #AcidAttackSurvivor

ஆசிட் வீச்சில்

ணாதிக்கத்தால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி தன் கோலத்தை இழந்தவர் டெல்லியைச் சேர்ந்த லெட்சுமி அகர்வால். திருமணம் செய்ய வற்புறுத்திய 32 வயது ஆணை மறுத்து, தன் உரிமையை வெளிப்படுத்தியது மட்டுமே லெட்சுமி செய்த குற்றம். அதற்காகச் சமூகத்தால் குற்றவாளி போல ஒதுக்கப்பட்டு, மறைவு வாழ்க்கை வாழ்ந்தார். வலிகளைத் தாண்டிய வலிமையில் போராடியவர். இன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ அமைப்பு மூலம் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக திகழ்கிறார். 

லெட்சுமியின் நெடிய போராட்டத்தின் விளைவாக, ஆசிட் வீச்சைத் தடுக்க பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த விதத்திலும் வெறுக்கத்தக்கவர்கள் இல்லை என்பதை உலகுக்கு வலியுறுத்தும் விதமாக, ஆசிட் வீச்சுக்குள்ளனவர்களுக்கான பேஷன் ஷோ நடத்தி வெற்றி கண்டவர் லெட்சுமி. பாதிக்கப்பட்டவர்களை மாடல்களாக முன்னிறுத்தி காலண்டர் வெளியீடு உட்பட பல்வேறு வழிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது போராட்டத்தில் உறுதுணையாக இருந்த அலோக் திக்ஷித்துடன் ‘லிவிங் டு கேதர்’ வாழ்க்கையில் இருக்கிறார். இவர்களுக்கு ‘பிக்கு’ என்ற இரண்டு வயது பெண் குழந்தை உண்டு. லெட்சுமியின் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்க அரசு ‘உலகின் தைரியமான பெண்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. ‘விவா அண்டு திவா’ தனது நிறுவன மாடலாக இவரை அங்கீகரித்துள்ளது. ஒருபுறம் ‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ இயக்கம். மறுபுறம் பொறுப்பான அம்மா என சுறுசுறு தேனீயாக இருந்தவருடன் போன் டாக் செய்தோம். 

ஆசிட் வீச்சில்

'‘பள்ளிப் பருவத்தில் எனக்குள் ஆயிரம் கனவுகள் இருந்தது. அந்தக் கனவுகளைச் சிதைப்பது போல இந்தக் கோர சம்பவம் நடந்தது. அம்மா இல்லை. அந்தச் சமயத்தில் அப்பா மட்டும் உடன் இருந்தார். மருத்துவச் செலவுக்கே வழியில்லை. என் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக வீட்டுக்குள் முடங்கினேன். வறுமை என்னைத் துரத்தியது. எந்தத் தவறும் செய்யாத நான் குற்றவாளியைப் போல வீட்டுச் சிறையில் முடங்கினேன். தவறு செய்தவனோ, சுதந்திரமாக வெளியுலகில் உலாவினான். ஒரு கட்டத்தில் நீதி கேட்டு நீதிமன்ற படிகளில் ஏறினேன். அந்தச் சமயத்தில் சட்டரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலர் உதவிக்கு வந்தனர். பத்திரிகை நண்பராக அலோக் திக்ஷித் அறிமுகமானார். ஸ்டேஷன், கோர்ட் என போராட்டமான வாழ்வில் தோள் கொடுத்த தோழரானார். அவலட்சணமான என் முகத்தைப் பார்ப்பதே பாவம் என ஒதுங்கியவர்கள் மத்தியில், என் மன அழகை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு என்னுடைய சுகதுக்கங்களில் பங்கெடுத்தார். எங்களுக்குள்ளான புரிதல், காதலாக மலர்ந்தது. திருமண பந்தத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எந்த நிபந்தனையும் இல்லாத ‘லிவிங் டு கேதர் லைப்’ னூலம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்கள் அன்பின் சாட்சியாக மகள் ‘பிக்கு’ இருக்கிறாள்'' என்கிறவர் குரலில் மலர்ச்சி. 

‘ஸ்டாப் ஆசிட் அட்டாக்’ இயக்கப் பணிகள் பற்றி எனக் கேட்டதும், '‘எங்கள் அமைப்பில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட முப்பது பெண்கள் உள்ளனர். நாங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவருகிறோம். பெண்கள் எந்தச் சூழலிலும் வன்முறைக்கு உள்ளாகக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். சமீபத்தில், எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தோம். ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் தங்கள் அழகை இழப்பதோடு, வீச்சின் தன்மைக்கேற்ப கண், மூச்சுக்குழல் எனப் பல்வேறு உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. அதனால், தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கும். அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, தேவையான உதவிகள் செய்து, கவுன்சிலிங் அளிக்கிறோம். அமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீதி கேட்டு சட்டப் போராட்டம் செய்துவருகிறோம். எங்களின் தொடர்ந்த முயற்சியின் விளைவாக சில விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நாங்கள் அடைய வேண்டிய தூரம் வெகு தூரத்தில் உள்ளது.'' 

ஆசிட் வீச்சில்

''உங்கள் குழந்தை ‘பிக்கு’ பற்றிச் சொல்லுங்களேன்'' என்றதும், '‘க்யூட் சுட்டி. அவள் அப்பாவின் பயங்கர செல்லம். எந்த நேரமும் அவளைக் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். துறுதுறுவென ஓடிக்கொண்டிருப்பாள். எங்கள் வாழ்வின் வசந்தம் அவள். அவள் விரும்பும் வாழ்க்கை அவள் வாழ வேண்டும். குழந்தையைக் கவனிப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல. என் பெரும்பாலான நேரத்தை அவளிடம்தான் செலவழிக்கிறேன். குழந்தையைக் கவனிக்கவேண்டிய சூழல் இருப்பதால், ‘மாடல்’ வாய்ப்பைத் தேடவில்லை. அழகு என்பது முகத்தில் மட்டுமல்ல. வேறு வடிவங்களிலும் உணர்த்த முடியும்... உணர முடியும்’ - கம்பீரமாகவும் பளீர் எனவும் ஒலிக்கிறது லெட்சுயின் குரல்! 

- ஆர். ஜெயலெட்சுமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!