வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (16/03/2017)

கடைசி தொடர்பு:11:59 (16/03/2017)

தொடரும் விபத்துகள் : அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமா இந்தியா? #3MinsRead

அணு உலை

பிரான்ஸ் நாட்டின் வடக்கு கடலோரப் பகுதியில் உள்ள பிலமன்விலே அணு உலையில், சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அந்த அணுஉலையை நிறுவி வரும் E.D.F என்னும் நிறுவனத்துடன் இணைந்து, மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் ஆறு அணு உலைகளை அமைக்கும் இந்திய அரசின் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

அணுசக்தி ஆராய்ச்சி, ராணுவம் மற்றும் மின்சாரத் தேவைக்காக அணு உலைகள் அமைப்பதில் உலக நாடுகள் பலவும் கவனம் செலுத்தி வந்தாலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், வடகொரியா, தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே முன்னணியில் உள்ளன. இந்த நாடுகளிடம் இருந்துதான் பிற நாடுகள் தொழில்நுட்ப உதவியைப் பெற்று அணு உலைகளை அமைத்து வருகின்றன.

பிரான்சின் பிலமன்விலேவில் அந்நாட்டைச் சேர்ந்த E.D.F எனும் நிறுவனம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அணுமின் நிலையத்தைக் கட்டி வருகிறது. இந்த அணு உலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த விபத்து குறித்த முழுமையான தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

அதிக பங்கு வைத்துள்ள பிரான்ஸ் அரசு எதிர்கொண்ட கடும் நிதிநெருக்கடி காரணமாக, அதிகளவு அரசுப் பங்குகளைக் கொண்டுள்ள Areva என்ற நிறுவனத்தின் அணு உலை ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் உற்பத்திப் பிரிவை மற்றொரு அரசு நிறுவனமான E.D.F அண்மையில் கையகப்படுத்தியது. 

மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் பிலமன்விலே அணு உலையானது, தற்போது நடைமுறையில் இருக்கும் மற்ற அணு உலை தொழில்நுட்பங்களை விட மிகவும் பாதுகாப்பானது என்பதோடு, அதிக திறன் வாய்ந்தது மற்றும் செலவினங்களை குறைக்கவல்லது என்று கூறப்படுகிறது. இதுபோன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி பிரான்ஸ் மட்டுமல்லாது பின்லாந்து மற்றும் சீனாவில், இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பல அணு உலைகள், கடந்த 12 ஆண்டுகளாக முழுமையான பயன்பாட்டுக்கு வராமல் தொடர்ந்து கட்டமைப்பு நிலையிலேயே இருந்து வருகின்றன.

இந்தியாவுக்கு என்ன ஆபத்து?

கடந்த 18 ஆண்டுகளாக ஆராய்ச்சி நிலையிலும், பத்து ஆண்டுகளாக கட்டமைப்பு நிலையிலும் இருந்துவரும் இந்த EPR  (European Pressurized Reactor அல்லது Evolutionary Power Reactor) என்னும் அழுத்த நீர் அணு உலை முறையை அடிப்படையாகக் கொண்ட இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இத்தாலி, தென்னாப்பிரிக்கா மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகள் ஏற்கெனவே நிராகரித்துள்ளன. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் இதற்கு அனுமதி அளித்த இங்கிலாந்து அரசு அதை மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், தொடர்ந்து அணு உலைகளை கட்டுவதற்கு ஆர்வம் காட்டி வரும் இந்திய அரசு, பிரான்ஸ் நாட்டுடன் மகாராஷ்டிராவின் ஜெய்த்தாப்பூரில் ஆறு அணு உலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு கையெழுத்திட்டது. மேலும், அந்த அணு உலைகளை E.D.F நிறுவனம், இன்னமும் நிரூபிக்கப்படாத E.P.R தொழில்நுட்பத்தில் இந்திய அணுமின் கழகத்துடன் இணைந்து கட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்?

இந்தியா - பிரான்ஸ் இடையே அணு உலைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2009-ம் ஆண்டிலேயே கையெழுத்தான போதிலும், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த பிரான்ஸ் அதிபர் ஹாலண்டு மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின்போதுதான் இத்திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்க முடிவு செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டில் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்குவது என்று மோடியும், ஹாலண்டும் கூட்டாக அறிவித்தனர். இந்நிலையில் திட்டம் குறித்த முழு அறிக்கையுடன் கூடிய செலவினப் பட்டியலை அளிக்குமாறும், E.P.R தொழில்நுட்பத்தில் வெற்றிகரமாக செயல்படும் அணு உலையை காண்பிக்குமாறும் EDF நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் 2018-ம் ஆண்டு மத்தியிலேயே EPR தொழில்நுட்பத்தில் இயங்கும் முதலாவது அணு உலை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, இந்த கால தாமதம், Areva-EDF நிறுவன கையகப்படுத்துதலால் ஏற்பட இருக்கும் சிக்கல்கள் மற்றும் மற்ற தொழில்நுட்ப குறைபாடுகளைக் காரணம்காட்டி, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இந்திய அரசு இறங்க வேண்டும் என்பதே அணு உலை எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது.

அணு உலை

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறுகையில், “அணு உலை என்று வந்துவிட்டால் E.P.R உள்ளிட்ட எந்தவொரு தொழில்நுட்பமும் சிறந்தது, பாதுகாப்பானது என்று கிடையாது. எனவே அணு உலை பாதுகாப்பு அம்சங்கள், வடிவமைப்பு குறைபாடுகள் போன்றவற்றில் கேள்விகளை எழுப்பாமல், அதன் நிதி மற்றும் தேவை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, தற்போது இருக்கும் அனல் மற்றும் இதர மின்சார உற்பத்தி நிலையங்களை  அதன் இலக்குகளை நோக்கி செயல்பட வைப்பதன் மூலமாக மட்டுமே 2025-ம் ஆண்டுவரை நமது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், ஆயிரம் மெகாவாட் திறனுள்ள அணுஉலையை நிறுவ கிட்டத்தட்ட 33,000 கோடி ரூபாய் செலவிடப்பட வேண்டும். வருங்காலத்தில் இதன் கட்டமைப்புச் செலவு மேலும் அதிகம் ஆவதற்கான வாய்ப்புகளே உள்ளதால் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 12 முதல் 24 ரூபாய் வரை மக்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அல்லது இந்தத் தொகையில் பாதிக்குமேல் மானியமாக அரசு செலவிட வேண்டியிருக்கும். இது ஏற்கனவே அதிகபட்ச நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் மின்சார வாரியங்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார். 

அணுஉலை ஒப்பந்தம் தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, "1984-ம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டபோது, அதன் கடும் விளைவுகளை எண்ணி ரஷ்யாவுடன் எந்த ஒரு நாடும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் இந்திய அரசு சிறிதும் யோசிக்காமல் ரஷ்யாவின் சரிவை ஈடுகட்ட, அந்நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டு, கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைத்துள்ளது. அதேபோன்றுதான் உலகில் எங்குமே நடைமுறைக்கு வராத மற்றும் பல நாடுகளால் நிராகரிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் E.P.R தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அணு உலைகளை அமைப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. எந்த ஒரு அணு தொழில்நுட்பமும் அழிவுக்கே வித்திடும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும்” என்றார். 

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த மாதம், இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்ட டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டி பல கிலோமீட்டர் தூரம் வரை பரவியது. இதன் காரணமாக கடல் நீரில் ஏற்பட்ட மாற்றத்தினால், பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கின. கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் கைகொடுக்காத நிலையில் கையில் வாளியைக் கொண்டு எண்ணெய்க் கசிவை அகற்றும் நிலையிலுள்ள நாம், அணு உலை விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பதற்கான திறன்வாய்ந்த தொழில்நுட்பம் இல்லாத நிலையில்தான் இன்னும் இருக்கின்றோம். இதனை நினைத்துப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்! 

-ஜெ.சாய்ராம், (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்