வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (16/03/2017)

கடைசி தொடர்பு:15:19 (16/03/2017)

'உலகின் தீவிரவாதத் தொழிற்சாலையாக பாகிஸ்தான் மாறியுள்ளது!': ஐ.நா-வில் இந்தியா

Modi

ஐ.நா மனித உரிமைப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா, 'உலகின் தீவிரவாதத் தொழிற்சாலையாக பாகிஸ்தான் மாறியுள்ளது' என்று குற்றம் சாட்டியுள்ளது.

மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில் அதிகாரிகள் பேசுகையில், 'இந்த கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர்கள் பற்றிப் பேசுகிறது. இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர்,  பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், கிரிக்கெட் அணி கேப்டன்கள் போன்ற பதவிகளில் இருந்துள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு இதைப் போன்ற வரலாறு ஏதாவது இருக்கிறதா? அங்கு இருக்கும் சிறுபான்மையினர் மீது, தொடர்ந்து தாக்குதல்களும் மனித உரிமை மீறல்களும்தான் நடக்கின்றன. இந்தியாவின் எந்தப் பகுதிகளிலும் தீவிரவாதத்தையோ வன்முறையையோ நிகழ்த்த துணை நிற்க வேண்டாம் என்று பாகிஸ்தானிடம் கேட்டுக்கொள்கிறோம்.' என்று கூறினர்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பற்றி இந்திய அதிகாரிகள் பேசுகையில், 'இந்தியாவில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மதச்சார்பற்ற அரசாங்கம் நடக்கிறது. அங்கு, சுதந்திரமான நீதித்துறை, ஊடகம் செயல்படுகிறது. இதனால், அங்கு மக்கள் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலோ, எதேச்சதிகார அரசு நடக்கிறது. பாகிஸ்தான், உலகின் தீவிரவாதத் தொழிற்சாலையாக மாறியுள்ளது.' என்று தெரிவித்துள்ளனர்.