4ஜி ஃபோன் மற்றும் சேலை: மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இப்படியும் ஒரு வழி! | 4G mobiles and saree are given for people who volunteer for family planning

வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (17/03/2017)

கடைசி தொடர்பு:09:12 (17/03/2017)

4ஜி ஃபோன் மற்றும் சேலை: மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இப்படியும் ஒரு வழி!

மக்கள் தொகை

'உலக மக்கள் தொகை தினம்' ஜூலை 11-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே உலக நாடுகள் பலவும் ஆண்டுதோறும் இந்த தினத்தைக் கடைபிடித்து வருகின்றன. அனைத்து நாடுகளும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த களமிறங்கி உள்ளன. கல்வி, பொருளாதார சூழ்நிலை போன்ற காரணிகளை உணர்ந்து, மக்கள் தங்கள் குடும்பத்தை ஒன்றிரண்டு குழந்தைகளுடன் சுருக்கிக் கொண்டுள்ளனர்.

மக்கள் தொகையைப் பொறுத்தவரை இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகையானது சுமார் 133 கோடியைத் தாண்டி சென்று கொண்டுள்ளது. பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படும் கொடூரச் சம்பவங்கள் ஒருபக்கம் நடந்தாலும், இன்னொருபுறம் குடும்பக் கட்டுப்பாடு இல்லாததாலேயே மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய யுக்தி கடைப்பிடிக்கப்படுகிறது. 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவர் பகுதியைச் சேர்ந்தவரான முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கவர்ச்சியான சலுகைத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். 2015-16-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் குடும்பக் கட்டுபாட்டை நடைமுறைப்படுத்தியதில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், புதிய திட்டத்தை அறிவித்தார்  முதல்வர். குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் ஆண்களுக்கு 4-ஜி வசதி கொண்ட மொபைல் ஃபோனும் இலவசமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல், குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

ராஜஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம் குறித்துஅம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சஜீத் கான் கூறுகையில், "கடந்த ஆண்டு குடும்பக்கட்டுபாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் ராஜஸ்தான் முதல் இடம் பிடித்தது. இந்த ஆண்டும் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே இதுபோன்ற சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், கடந்த ஆண்டு குடும்பக்கட்டுப்பாடு செய்ய வந்த ஆண்களுக்கு 2,000 ரூபாயும், பெண்களுக்கு 1,400 ரூபாயும் ரொக்கமாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் 4-ஜி மொபைல் மற்றும் சேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 4-ஜி மொபைல் வேண்டாம் என்றால், அதற்குப் பதிலாக 5,000 ரூபாய், வழங்கப்படும்" என்றார். "ஆண்களுக்கு இந்த அளவுக்கு சலுகை வழங்கப்படுவது ஏன்?" என்று அவரிடம் கேட்டபோது, "குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் அதிகளவு பெண்களே சேர்கிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் முன்வருவதில்லை. அதிக எண்ணிக்கையிலான ஆண்களை குடும்பக்கட்டுபாடு திட்டத்தில் கொண்டுவருவதற்காகவே, இதுபோன்ற சலுகைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது" என்றார். 

இந்தச் சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 15 ஆண்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் வெகுவாக மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற ஏதாவது கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு செய்ய வேண்டியதைத் தாண்டி, மக்களும் நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு, மக்கள் தொகையைக் குறைக்க குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள தாங்களாகவே முன்வரவேண்டும்.  செய்யும் முடிவுக்கு வந்தால் இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும். மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதை மாற்ற முடியும். மக்கள் தொகை முன்னிலையை தவிர்த்து, தொழில்நுட்பம், பொருளாதரம் உள்ளிட்டவற்றில் இந்தியா முன்னிலை பெற வேண்டும்!

- நந்தினி சுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்