வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (17/03/2017)

கடைசி தொடர்பு:19:42 (17/03/2017)

பன்னீர்செல்வமா? சசிகலாவா? - இரட்டை இலைக்கு வேர் தேடும் தேர்தல் ஆணையம்

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, அ.தி.மு.க.வின் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Election Commission

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, பன்னீர்செல்வம்  ஆதரவு எம்.பிக்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து சசிகலா அணி இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பின் சசிகலா விளக்கத்துக்கு, பன்னீர்செல்வம் அணியும் தேர்தல் ஆணையத்துக்கு விளக்கமளித்தது.

இந்நிலையில், இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, பன்னீர்செல்வம் கடந்த சில நாள்களுக்கு முன் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தார். இதற்கிடையே, இதுதொடர்பாக விளக்கமளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக விசாரணை செய்வதற்காக, இரு அணியினரையும் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி வருகின்ற 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராக, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த விசாரணைக்குப் பிறகுதான் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்குவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.