Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்.... ஒரு பூசாரி முதல்வர் ஆன கதை!

ஆதித்யநாத்

ந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் முதல்வராய்ப் பொறுப்பேற்க இருக்கும் யோகி ஆதித்யநாத், இதற்குமுன் பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசம். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். இங்கு சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி., பெரும்பான்மையாக வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே மாபெரும் வெற்றிபெற்ற பி.ஜே.பி., புதிய முதல்வரைத் தேர்வுசெய்ய ஒருமனதாக முடிவு செய்தது. இதில், அந்த மாநிலத்தில் உள்ள கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரான யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேச புதிய முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நேரத்தில், அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்துகொண்டிருக்க... மற்றொரு புறம், அவர் முன்னர் ஏற்படுத்திய சர்ச்சைகளும்... வழக்குகளும் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

''ராமர் கோயில் கட்ட முடியும்!'' 

உத்தரகாண்ட்டில் உள்ள கட்வால் என்ற கிராமத்தில் பிறந்தவர், ஆதித்யநாத். அஜய் சிங் பிஷ்ட் என்று பெயர்கொண்ட இந்த யோகி,  ''ஆதித்யநாத்தை, உத்தரப்பிரதேச முதலமைச்சராக முன்னிறுத்த வேண்டும்; அவர் முதலமைச்சர் ஆனால்தான் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட முடியும்'' என, அங்கு கடந்த ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையை பி.ஜே.பி நிராகரித்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த முடிந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தல் வெற்றிக்குப் பெரும்பான்மையான பங்கு இவருடையதே என்று சொல்லப்படுகிறது. 

கோரக்பூர் ஆலயத்தின் தலைமை பூசாரி!

அரியாசனத்தில் அமர்வதற்கு அல்லும்பகலும் உழைத்த ஆதித்யநாத், அதற்கான பயனைத் தற்போது அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் அவருடைய பழைய புராணங்களைக் கொஞ்சம் பார்ப்போம். இருபது ஆண்டுகளுக்கு முன்... கோரக்நாத் ஆலயத்தால் நடத்தப்பட்டுவரும் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், ஜவுளி எடுக்க ஒரு கடைக்குச் சென்றனர். அங்கே அந்தக் கடைக்காரருக்கும் இவர்களுக்கும் வாதம் ஏற்பட, கடைசியில் அந்தக் கடைக்காரர் கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். இந்த நிகழ்வு நடந்த இரண்டு தினங்கள் கழித்து, அந்தக் கடைக்காரருக்கு எதிராக ஒரு யோகி தலைமையில், போராட்டம் நடைபெற்றிருக்கிறது. அதற்குத் தலைமை தாங்கிய யோகிதான் தற்போதைய உத்தரப்பிரதேச மாநில அரியாசனத்தில் அமரயிருக்கும் ஆதித்யநாத். இந்த நிகழ்வுக்குப் பிறகுதான், மிகவும் பிரசித்தி பெற்ற கோரக்பூர் ஆலயத்தின்  தலைமை பூசாரியாக, அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றுமுதல் கோரக்பூரின் அரசியலில் நாயகராக வலம்வரத் தொடங்கினார். இதன் காரணமாகக் கோரக்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் ஈர்க்கப்பட்டார். இந்து மகாசபை தலைவராகவும் உருவெடுத்தார். 

சுடுகாடு முற்றுகை!

விரைவிலேயே நன்கு பிரபலமான ஆதித்யநாத், தன் கருத்துகளால் சர்ச்சைகளுக்குள் சிக்கியும்கொண்டார்.  மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஞ்ச் ரூக்கியா என்ற கிராமத்தில் இரண்டு பிரிவினருக்கிடையே பிரச்னைக்கு உரியதாக இருந்த சுடுகாட்டை, கைப்பற்றும் நோக்கத்தில் களத்தில் இறங்கினர் ஆதித்யநாத்தும் அவரது ஆதரவாளர்களும். அந்தச் சுடுகாட்டை முற்றுகையிட்ட அவர்கள், அங்கே ஓர் ஆலமரத்தையும் நட்டனர். இதனால் அங்கு, கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட... அவரைக் கைதுசெய்தது போலீஸ். அத்துடன், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. 

சிறைத்தண்டனை!

மேலும், கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், இந்து இளைஞர் கொலை தொடர்பாகச் சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்தார். இதையடுத்து, கோரக்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரம் நடந்தது. இதில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ஆதித்யநாத், கடந்த 2007-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 15 நாள்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார். இந்த இரண்டு வழக்குகளின் மீதான விசாரணை இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அமீர்கானுடன் மோதல்!

இதுதவிர, கடந்த 2014-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்,''இந்துக்கள் மீது சிறுபான்மையினர் தாக்குதலில் ஈடுபட்டாலோ அல்லது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ, அதே விதத்தில் இந்துக்கள் பதிலடி தருவார்கள்'' என்று சிறுபான்மையினருக்கு எதிராகச் சொன்ன கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ''நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது... வேறு நாட்டுக்குச் செல்கிறேன்'' என்று சொன்ன நடிகர் அமீர்கானையும், அவர் விட்டுவைக்கவில்லை. ''அமீர்கான் செல்வதை யாரும் தடுக்கவில்லை. மேலும், அவர் நாட்டைவிட்டுச் சென்றால் மக்கள்தொகையைக் குறைக்க உதவும்'' என்று அவருக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்தைச் சொன்னார்.

மிஸ்டு கால் பிரசாரம் !

அமெரிக்காவில் தற்போது புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், ஏழு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இன மக்கள் அந்த நாட்டுக்குள் வர தடைவிதித்தார். இதற்கு ஆதித்யநாத், ''அதிபர் டிரம்ப், பிறப்பித்த குடியேற்றத் தடை உத்தரவு போன்ற ஒன்று, இந்தியாவுக்குத் தேவைதான். இந்துப் பெண்களைக் காதலித்து மதம் மாறச்செய்யும் லவ் ஜிகாத் ஆகிய விஷயங்கள் தேர்தலில் முக்கியத் துருப்புச் சீட்டுகளாக எங்களுக்கு இருக்கும்'' என்றார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க வலியுறுத்தி, அவர் மிஸ்டு கால் பிரசாரம் செய்தார். மேலும், ''சூரிய நமஸ்காரம், யோகாவை எதிர்ப்பவர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் அல்லது தங்கள் வாழ்க்கையை இருட்டில் அறையில் வாழ வேண்டும்'' எனப் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் பேசியிருக்கிறார்.

இப்படி அவர் பேசிய கருத்துகளுக்கு எதிராகக் கண்டனங்கள் கிளம்பியதுடன், வழக்குகளும் பதியப்பட்டன.  ''தொடர்ந்து இதுபோன்று அவருக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்ததனாலேயே, ஐந்து முறை எம்.பி-யான ஆதித்யநாத்துக்கு, மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அத்துடன், ஓர் ஆண்டாக உத்தரப்பிரதேசத்தில் யோகிகள் இவரை முதல்வராக நிறுத்த வேண்டும் என்று சொன்ன கருத்தையும் பி.ஜே.பி ஏற்றுக்கொள்ளவில்லை'' என்று சொல்லும் பி.ஜே.பி நிர்வாகிகள், ''உத்தரப்பிரதேசத்திலாவது சர்ச்சையின்றிப் பேசாமல் ஆட்சியைச் சிறப்பாக நடத்தட்டும்'' என்கின்றனர். 

இனிமேலாவது சர்ச்சைக்கு இடமின்றி ஆட்சிபுரிந்தால் சரிதான்!

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement