வெளியிடப்பட்ட நேரம்: 18:01 (19/03/2017)

கடைசி தொடர்பு:10:45 (20/03/2017)

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து கூட்டம் - பாகிஸ்தான் சென்ற இந்திய பிரதிநிதிகள் குழு

இஸ்லமாபாத்தில் நாளை நடைபெறவுள்ள சிந்து நதி ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த 10 பேர் இன்று பாகிஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற உரி தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி தொடர்பான கூட்டம் ஆறு மாதங்கள் தள்ளிப்போனது.

நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் காஷ்மீரில் உள்ள கார்கில் மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள நீர்மின்சாரம் தயாரிப்பு திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்தியா விவாதிக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சிந்து நதி நீர் ஆணையர் ஆர்.கே.சக்ஸேனா மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 'நதி நீர் தொடர்பான பிரச்னைகளைத் பேசித் தீர்ப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்படாது' என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.