வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (20/03/2017)

கடைசி தொடர்பு:15:15 (20/03/2017)

மணிப்பூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க அரசு வெற்றி!

மணிப்பூர் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பா.ஜ.க தலைமையிலான முதல்வர் பிரேன் சிங் அரசு வெற்றி பெற்றுள்ளது.

Biren Singh

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள் கடந்த சில வாரத்துக்கு முன் வெளியானது. இதில், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க வெற்றிபெற்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

மணிப்பூர், கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு, பா.ஜ.க-வைவிட காங்கிரஸ் ஒரு சில இடங்களில் கூடுதலாக வெற்றிபெற்றிருந்தும், பா.ஜ.க. பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இதையடுத்து, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசு வெற்றிபெற்றது.

இந்நிலையில், மணிப்பூரில், பா.ஜ.க அரசு ஆட்சியமைத்த 15 நாள்களில்... பெரும்பான்மையை நிரூபிக்க அந்த மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், மொத்தம் உள்ள 60 எம்எல்ஏ-க்களில், 32 எம்.எல். ஏ-க்களின் ஆதரவுடன் முதல்வர் பிரன்சிங் அரசு வெற்றிபெற்றுள்ளது.  28 எம்எல்ஏ-க்கள் இருந்தபோதும் காங்கிரஸால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியவில்லை.

வெற்றிக்குப் பின்னர் முதல்வர் பிரேன் சிங், 'என் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய வெற்றியல்ல. இது மோடியின், பா.ஜ.க-வின், மணிப்பூர் மக்களின் வெற்றி. மணிப்பூர்-மியான்மர் எல்லை பிரச்னை குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்படும். அக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்.' என்று கூறியுள்ளார்.