வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (20/03/2017)

கடைசி தொடர்பு:18:15 (20/03/2017)

உத்தரப்பிரதேசத்திற்கு மூன்று முதல்வர்கள்... தெரியுமா உங்களுக்கு?

தேர்தல் களத்தில் மோடி அமித் ஷா

ந்திய அரசியல் வரலாறு இதுவரை காணாத அதிசயம்தான். ஆனால், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு இதற்குத்தான் ஐந்து வருடங்களாகத் திட்டமிட்டது. இத்தனைக்கும் 2012-ம் வருடத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு பதினைந்து சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதே வருடம், குஜராத்தில் மோடி தலைமையிலான அரசு பல்வேறு வகையிலான வியூகங்களைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்திருந்தது. இங்கே உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி-க்கு பின்னடைவு ஏற்பட, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது. குஜராத்தில் பி.ஜே.பி-க்கான வெற்றி வியூகத்தை மோடியுடன் இருந்து வகுத்த அமித் ஷா, இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் களத்தில் இறக்கப்பட்டார்.

உ.பி-யில் அமித் ஷா முக்கியமாகச் செய்தது எல்லாம் மத அடிப்படையில், குறிப்பாக மேல்வர்க்க இந்துக்கள் என்கிற அடிப்படையில் அனைவரையும் ஒன்றுசேர்த்ததுதான். அதுதவிர, 2014-ல் மோடி அலை உருவாகி இருந்த சமயம், அமித் ஷா அதனை உத்தரப்பிரதேசத்திலும் பிரபலப்படுத்தத் தொடங்கி இருந்தார். அதுதவிர, அந்த மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் எண்ணிக்கை சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிகராக இருந்தது. இதனை கணக்கில்கொண்டு, அந்த சமூகத்தினருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்தார் அமித் ஷா. உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், கடந்த 2015-ம் ஆண்டு இறுதியிலிருந்தே ஒருவாறாக சூடுபிடிக்கத் தொடங்கி இருந்தன. மோடி அலை குறைந்திருந்த நிலையில்தான் 2016 நவம்பரில் அவர், நாடு முழுவதும் உயர்மதிப்பு கொண்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து, பண முடக்கத் திட்டத்தை அறிவித்தார்.பணமுடக்கம் தேசிய அளவில் மோடியின் செல்வாக்கை குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளும் சமாஜ்வாடி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவும், காங்கிரஸ் உடனான அதன் கூட்டணியும் இந்த நிலையை மாற்றியது எனலாம். ஆளும் கட்சி ஏற்படுத்திய குழப்பத்தைவிட மத்திய அரசின் குளறுபடியை மக்கள் பெரிதுபடுத்தவில்லை. பகுஜன் சமாஜ் கட்சிக்கும் 2012-க்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் எவ்வித எழுச்சியும் இல்லை. இவை அத்தனையும் பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக்கிக் கொண்டார் அமித் ஷா. 

யோகி அதித்யநாத்

ஆனால், தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் குற்றவாளிகள். உ.பி முதல்வராகப் பொறுப்பேற்று இருக்கும் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இந்தநிலையில் அவரை உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக அமித் ஷாவும், மோடியும் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?. முன்னேற்றம்தான் தங்களது முக்கியக் குறிக்கோள் என்கிற நோக்கத்தை மக்களிடம் முன்வைத்துதான் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டது பி.ஜே.பி. அதேசமயம் தனது வேட்பாளர்களில் ஒருவர்கூட வேற்று மதத்தவர்களோ அல்லது ஒடுக்கப்பட்டவர்களோ இல்லாமல் பார்த்துக் கொண்டது அந்த கட்சி. ஒருவகையில் சார்புத்தன்மையுடைய தேர்தல் பிரசார உத்தியைத்தான் கையாண்டது. மதச்சார்பு அரசியலை முக்கியத்துவப்படுத்தும் நோக்கம்தான் அது. யோகி ஆதித்யநாத், கோரக்பூர் மடத்தின் பிரதான உபாசகராக இருப்பவர். அந்த வகையில் அவரை முதல்வராக நியமிப்பது மேல்தட்டு இந்துக்கள் சமூகத்தில் பி.ஜே.பி-க்கு நல்லதொரு மதிப்பை பெற்றுத் தரும். அதே சமயம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் ஒருபுறம் இருக்கிறது. முன்னேற்றம் என்கிற வார்த்தையை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தி விட்டு நகர்த்தி விடமுடியாது. யோகி ஆதித்யநாத் சமூகநலன் சார்ந்த எவ்வித செயல்பாடுகளிலும் இதுவரை ஈடுபட்டிருக்காதவர். அப்படியிருக்கும்போது முன்னேற்றம் என்பதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்? அதனைச் சரிகட்டும் வகையில்தான், இரண்டு துணைமுதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். துணை முதல்வர்கள் என்று கூறப்பட்டாலும், மாநிலத்தின் மேலாண்மையை அவர்கள் இருவரும்தான் ஆதித்யநாத் உடன் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் தினேஷ் சர்மா

துணை முதல்வர்களில் ஒருவர் தினேஷ் குமார் ஷர்மா. லக்னோ மாநகர மேயராகவும், கட்சியின் துணைத்தலைவராகவும் இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. மற்றொருவர் கேசவ் பிரசாத் மௌரியா. மாநில பி.ஜே.பி தலைவரான இவர், தேர்தல் நேரங்களில் சூறாவளியாக கட்சிக்காகப் பணியாற்றியவர். இம்முறை பி.ஜே.பி-க்கு  பெருவாரியான வாக்குகளைத் தந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதில் கூடுதல் சுவாரஸ்யம் துணை முதல்வர்கள் இருவருமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள். இதை வைத்துப் பார்க்கும்போது, அமித்ஷா மற்றும் மோடியின் இந்த திட்டம் வித்தியாசமானதுதான். மதச்சார்பு மற்றும் முன்னேற்றம் இரண்டையும் ஒரே கடிவாளத்தில் பூட்டி வழிநடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதுவும் இரண்டு குதிரைகள் கொண்ட வண்டிக்கு ஒரே சமயத்தில் மூன்று பேர் ஓட்டுநர்கள்.

ஓட்டம் தொடருமா அல்லது தடம் புரளுமா என்பதை அடுத்தடுத்து வரும் நாட்களில்தான் உறுதி செய்ய முடியும்.

-ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்