தங்கம் வாங்க இது சரியான நேரமா? #InvestmentTips | Is it right time to invest in gold?

வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (20/03/2017)

கடைசி தொடர்பு:20:53 (20/03/2017)

தங்கம் வாங்க இது சரியான நேரமா? #InvestmentTips

தங்கம்

தங்கத்தின் விலை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை இறங்கி வந்தது. தற்போது மீண்டும் திரும்பி உயர ஆரம்பித்து இருக்கிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறையுமா அல்லது தொடர்ந்து உயருமா, தங்கம் வாங்கக் காத்திருக்கலாமா என்ற கேள்விகளோடு தங்கத்தின் விலையினை தொடர்ந்து கண்காணித்து வரும் நிபுணர்களுடன் பேசினோம். 

‘கமான்டிடிரான்ஸ்’ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன், "அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதைப் பொறுத்தே தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும். இந்த வருடத்தில் எத்தனை முறை வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க இருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் மாற்றி அமைக்கும் போது இறங்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் இரண்டு மூன்று முறை மாற்றி அமைக்கும் போது தங்கத்தின் விலை இன்னும் குறையவே வாய்ப்பு இருக்கிறது. 

அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே இனி வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கப் போவதாக அமெரிக்க மத்திய வங்கி, மார்ச் 15-ம் தேதி அறிவித்து விட்டது. இதன் மூலம் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் போய் விட்டது. மேலும், வருடத்திற்கு இரண்டு மூன்று முறை வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி விட்டார்கள். இதன் பிரதிபலிப்பாக உடனடியாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 40 டாலர் உயர்ந்து இருக்கிறது.

இந்தியாவில் ரூபாயின் மதிப்பு உயர்ந்தும், டாலரின் மதிப்பு  இறங்கியும் இருப்பதால் சர்வதேச அளவில் உயர்ந்த தங்கத்தின் விலை, இந்தியாவில் பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை. பத்து கிராம் தங்கத்தின் விலையில் 300 முதல் 500 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. இனி வரும் காலங்களில் பெரிய அளவில் இறங்கவும், ஏறவும் வாய்ப்பு இல்லை. குடும்பத் தேவைக்காக தங்கத்தை வாங்குபவர்கள் குறிப்பிட்ட அளவு வாங்கி வைக்கலாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் கூட இப்போது தங்கத்தில் ஓரளவு முதலீடு செய்து வருகிறார்கள். சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து இருக்கிறது என்பதால் குறிப்பிட்ட அளவு முதலீடு நல்ல ஆதாயத்தையே தரும்” என்கிறார் ஞானசேகர். 

பொதுவாக, முதலீடு செய்யும் போது பல்வேறு வகையில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்ற நிதி ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது தங்கத்தில் எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம் என்பது குறித்து நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம். 

"கடந்த ஐந்தாண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்திருந்தாலும் தற்போது ஏற்கெனவே இருந்த விலையை விடக் குறைவான விலையிலேயே இருக்கிறது. அதாவது தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் பெரிய அளவில் வருமானம் கிடைத்திருக்காது. நீண்ட காலமாக தங்கம் பின்னோக்கி இருப்பதால் இனி வரும் காலங்களில் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் தங்கம்  முதலீடாகப் பார்க்காமல் பயன்பாட்டுப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறது. 

திருமணத்திற்கு 40 பவுனில் தங்க நகைகள் செய்ய இருக்கிறீர்கள் என்றால் இப்போது இருந்தே கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கத்தை வாங்கி வைக்கலாம். உதாரணத்திற்கு இன்னும் இருபது வருடங்கள் இருக்கிறது என்றால் மொத்தம் 320 கிராம் நகையினை நீங்கள் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு வருடத்திற்கும் நீங்கள் 16 கிராம் சேர்க்க வேண்டும். இதற்கு ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், இதனை மாதக் கணக்கில் சேமிக்கும் போது நாலாயிரம் ரூபாய் வரை சேமிக்க வேண்டி இருக்கும். 

இவ்வாறு சேமிப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்ட்டில் தங்கம் சார்ந்த திட்டத்தில் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் சேமிக்கலாம். இதன் மூலம் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தங்கம் வாங்க நினைக்கும் போது பணத்தை எடுத்து வாங்கிக்கொள்ளலாம். இப்போது தங்கம் சார்ந்த ஏராளமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. இதில் நல்ல திட்டத்தினை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். மாதாந்திர முறையிலேயே முதலீடு செய்யலாம். திட்டமிட்டால் எல்லாமே சிறந்த முறையில் பலன் கொடுக்கும்" என்கிறார் சுரேஷ் பார்த்தசாரதி. தங்கம் மீண்டும் ஜொலிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்! 

- ஞா. சக்திவேல் முருகன்


டிரெண்டிங் @ விகடன்