வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (22/03/2017)

கடைசி தொடர்பு:15:04 (22/03/2017)

பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து அத்வானியை விடுவித்த வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களை விடுவித்ததற்கு எதிராக சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இந்து அமைப்புகள் மற்றும் கரசேவகர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள பாபர் மசூதியை இடித்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உள்ளிட்டவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அலகாபாத் விசாரணை நீதிமன்றம், எல்.கே.அத்வானி உள்பட பா.ஜ.க தலைவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பி.சி.கோஷ், வழக்கை உடனிருந்து விசாரித்த பி.எஃப்.நாரிமன் இல்லாததால் வழக்கை நாளை தள்ளி வைப்பதாக உத்தரவிட்டார். முன்னதாக நடந்த விசாரணையின்போது, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.