வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (22/03/2017)

கடைசி தொடர்பு:15:48 (22/03/2017)

சவுதியில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 29 இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை

சவுதி அரேபியாவில் அல்-ஹஜ்ரி என்னும் நிறுவனத்தில்  பிணைக் கைதிகளாக உள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த 29 தொழிலாளர்களை மீட்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Sushma
 

சவுதியில் அல்-ஹசா என்ற இடத்தில் அல்-ஹஜ்ரி  நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு தெலுங்கானாவைச் சேர்ந்த 29 தொழிலாளர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதி இல்லாமல் கடந்த 12 நாள்களாக  பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அடைத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களில் ஒருவரான சேகர், 29 இந்தியர்களும்  சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்குமாறு அந்நிறுவனத்திடம்  கோரியுள்ளார். ஆனால், அந்த நிறுவன அதிகாரிகளோ, 50,000 டாலர்களைச் செலுத்திவிட்டுப் போகுமாறு கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சவுதியில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் இந்தியர்கள் முறையிட்டுள்ளனர். பயணச் செலவுகளை நிறுவனமே ஏற்று, 29 இந்தியர்களையும் மூன்று நாள்களுக்குள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காத அந்நிறுவனம், இந்தியர்களை மீண்டும் அடைத்து வைத்துவிட்டது. இதுகுறித்து அந்தத் தொழிலாளர்கள் தெலுங்கானா அரசுக்குத் தகவல் தெரிவித்தனர். 


தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ்  இந்த சம்பவம் தொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மாவுக்கு அனுப்பினார். கடிதம் பெற்றவுடன் சுஷ்மா உடனடியாக சவுதியின்  இந்தியத் தூதர் அகமது ஜாவேத்திடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.  மேலும், 29 பேரையும் விரைவில் மீட்டு, இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் சுஷ்மா வலியுறுத்தி உள்ளார்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க