வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (23/03/2017)

கடைசி தொடர்பு:10:40 (23/03/2017)

புல்டோசர் ஏற்றி புலியைக் கொன்ற வனத்துறையினர்... எங்கே போனது #SaveTiger திட்டம்?

புலி

புலிகளைப் பாதுகாப்போம், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவருகிறது. இந்தியப் புலிகள் மிகவும் அரிய வகை உயிரினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன . இந்தச் சூழலில்தான் உத்தரகண்டில் ஒரு புலி புல்டோசர் ஏற்றிக் கொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் செயலைச் செய்தது வனத்துறையினர் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி. நம் நாட்டில் அரிய இனமான புலிகள் வெறும் 
3000-த்துக்கும் குறைவாகத்தான் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புலியைக் கொல்ல இதுதான் காரணமா?

இந்தப் புலி உத்தரகண்டில் உள்ள டாப்கா நதி ஓடும் பகுதியான பெல்படாவ் வனப்பகுதியில் பகவதி தேவி என்ற பெண்ணைத் தாக்கியுள்ளது. அந்தப் பெண்ணைக் காப்பாற்றச் சென்ற அவரின் மாமனாரையும் தாக்கியுள்ளது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனையறிந்த வனத்துறையினர் புலியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேடியுள்ளனர். புலியை வனப்பகுதியில் புல்டோசரைக் கொண்டு கீழே தள்ளி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அதன் முதுகுப்பகுதி தாக்கப்பட்டு கீழே சரிந்துள்ளது.  தேசியப் பூங்காவுக்குக் கொண்டு செல்லும் வழியில் புல்டோசர் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களால்  உயிரிழந்துள்ளது.

Indian Forest Department Killed Tiger with bulldozer

ஏன் அவர்களைத் தாக்கியது?

அவர்கள் தாக்கப்பட்ட பகுதி வனப்பகுதி, சில காலங்களாகவே டாப்கா நதி பாயும் வனப்பகுதியில் வளங்களை எடுக்க சுரங்கங்கள் சட்டத்துக்கு விரோதமான நிலையில் நடைபெற்று வருகிறது. அதனை அரசும், வனத்துறையும் கண்டு கொள்ளாமலேயே இருந்துள்ளது. வனப்பகுதியில் மனித ஊடுருவல் அங்குள்ள விலங்குகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. வழக்கமாக விலங்குகளைப் பிடிக்க பல வழிகள் இருந்தும் வனத்துறையினர் இந்த வழியைக் கையாண்டது ஏன் என்பதற்கும், இந்தச் சம்பவத்திற்கும் அவர்களிடமிருந்து பதிலும் இல்லை.

எங்கே போனது #SaveTiger திட்டம் 

பாலிவுட் பிரபலங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் வைத்து #SaveTiger என்ற பெயரில் பெரிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது ஒரு திட்டம். அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டாலும் புலிகள் ஊருக்குள் ஊடுருவுவதும், வனத்தில் மனித ஊடுருவல்களால் விலங்குகள் காட்டை விட்டு உணவுக்காக நகருக்குள் நுழைவதும் அதிகரித்து வருகிறது. அபாயகரமான விலங்குகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட திட்டம் பெயரளவிலே இருப்பதும் இது போன்ற செயல்களுக்கு காரணமாகிறது. 

அந்த இரண்டு பேர் இறந்தது பெரிய விஷயமாகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப் புலியைப் பிடிக்க வனத்துறை முயன்றிருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு கையாண்ட முறை மிகவும் தவறானது. இனியாவது அரசு வனப்பகுதிக்குள் மனித ஊடுருவலைத் தடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடக்காமலும், அரிய வகை உயிரினங்களைப் பாதுகாக்கவும் முடியும்.


காட்டுயிர்களைக் காப்பதற்கான அமைப்புகளின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி,  கடந்த நூற்றாண்டுகளில் முதல் முறையாக உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 1990-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தன. ஆனால் அதன்பின் எடுக்கப்பட்ட அனைத்து கணக்கெடுப்புகளிலும் இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து,  கடந்த 2010 -ம் ஆண்டின்படி வெறும் 3200 என்ற எண்ணிக்கையில் முடிந்தது. ஆனால் அதன்பின் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தற்பொழுது உலகில் 3,890 புலிகள் இருப்பதாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மட்டும் 2226 புலிகள் உள்ளன


 

 

ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்