வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (22/03/2017)

கடைசி தொடர்பு:17:39 (22/03/2017)

சவுதியில் தமிழக மீனவர்கள் பலி: பிரதமருக்கு, முதல்வர் பழனிசாமி முக்கிய கோரிக்கை

சவுதி அரேபியாவில், கடந்த 18-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த ஜார்ஜ், நெவில் மற்றும் ஜோசப் ஆகிய மூன்று மீனவர்கள் சவுதி கடற்கரையில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும் சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், ஜார்ஜ் மற்றும் ஜோசப் ஆகிய இருவரது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால்,  நெவிலின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'சவுதி அரேபியாவில் வேலை செய்த மூன்று மீனவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்தனர். அவர்கள் இறந்தது, அவர்களின் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய தூதரகத்தின் வாயிலாக இறந்த இரண்டு தமிழக மீனவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு வரவேண்டும். மேலும், காணாமல் போன மீனவரை தேடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வேலை பார்த்த நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு தொகையையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.