தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | Apex court asked explanation to Election Commission regarding EVM

வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (24/03/2017)

கடைசி தொடர்பு:20:38 (24/03/2017)

தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 11-ம் உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதேபோல பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம்ஆத்மி பெரும் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி அங்கு அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் மின்னணு எந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் மென்பொருள் வல்லுநர்களால் மின்னணு இயந்திரத்தின் மென்பொருளை ஊடுருவ முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் 'மின்னணு இயந்திரத்தின் முறைகேடுகள் தொடர்பாக நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.