பகத்சிங் இறப்புக்காக 86 வருடங்கள் கழித்து கேட்கப்படும் நீதி!

பகத்சிங்

1931-ம் ஆண்டு மார்ச் 23, சாண்டர்ஸ் என்கிற வெள்ளைக்கார துரையை சுட்டுக் கொன்றதற்காகவும், தன் நண்பர்கள் சுக்தேவ், ராஜகுரு ஆகியோருடன் சேர்ந்து குண்டுகள் வீசியதற்காகவும் பகத்சிங், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்ட தினம். பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 86 வருடங்கள் கடந்துவிட்டன. அவரைத் தூக்கிலிடுவதா, வேண்டாமா என்று மகாத்மா காந்தி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி இர்வின் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, இறுதியில் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததை அடுத்து, பகத்சிங் விவகாரத்தில் பிரிடிஷ் அரசாங்கம் என்ன நினைக்கிறதோ அதையே செய்யட்டும் என்று ஒப்புதல் அளித்தார் காந்தி. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அன்றைய நாள் மாவீரர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி பகத்சிங்கின் 86வது நினைவுதினம் இந்தியா முழுதும் நேற்று முன்தினம் நினைவுகூறப்பட்டது.

இதற்கிடையே, பகத்சிங்கின் நினைவு தினம் பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும் அனுசரிக்கப்பட்டது. பகத்சிங் நினைவு அறக்கட்டளை என்கிற அமைப்பால் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் நடைபெற்ற நிகழ்வில்,  23 வயதே ஆன பகத்சிங்கை கொன்றதற்காக, பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தும், பிரிட்டிஷ் அரசாங்கமும் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று இதில் கலந்துகொண்டவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்தத் தீர்மானத்தின்படி, ராணி எலிசபெத் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். நியாயமற்ற முறையில் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுருவை கொன்றதற்காக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்த நிகழ்வில் பகத்சிங்கின் வாரிசுகளான கிரண்ஜித் சிங், சுக்வேந்திர சிங், ஹகூமத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் பகத்சிங் நினைவு அறக்கட்டளையின் தலைவருமான இம்தியாஸ் குரேஷி என்பவர் கூறுகையில், "பகத்சிங் போன்ற தியாகம் உள்ளம் கொண்டவர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள். அவரைக் கொன்றதற்கு பிரிடிஷ் அரசாங்கம் வருத்தப்பட வேண்டும்" என்றார். சில பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் இருந்ததால், லாகூர் போலீஸின் பாதுகாப்புடன் இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றன. இதில் கலந்துகொண்டு பேசிய பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியர் இக்பால் சாவ்லா, "பகத்சிங்கை காப்பாற்ற மகாத்மா காந்தி தவறி விட்டார். ஜின்னாதான் அவரைசுதந்திரப் போராட்டத் தியாகி என்று அறிவித்தார். பாகிஸ்தானிய  கவிஞர் ஜபர் அலி என்பவர்தான் பகத் சிங் பற்றி அதிக கவிதைகளை எழுதியுள்ளார். அவர்தான் பகத்சிங்கை மாவீரன் என்று முதன்முதலில் விளித்தார்" என்று குறிப்பிட்டார்.

மன்னிப்பு கேட்பாரா பிரிட்டிஷ் மகாராணி?!

- ஐஷ்வர்யா    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!