சீனாவைச் சமாளிக்க இந்தியாவின் புது யுக்தி..!

மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் அசீனா

சீனாவின் ஆதிக்கத்தைத் தவிர்க்க, வங்கதேசத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இந்தியா 350 கோடி அமெரிக்க டாலர் (ஒரு டாலர் 65 ரூபாய்) நிதி உதவி வழங்க உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் அசீனா அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அப்போது, இந்த நிதி உதவிக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுகிறது. 2015-ல் பிரதமர் மோடி வங்கதேசம் சுற்றுப்பயணத்தின்போது, ''அந்த நாட்டுக்கு மிகக் குறைந்த வட்டியில் ரூ.13 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்கப்படும்'' என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இந்த நிலையில், அடுத்த மாதம் 7-ம் தேதி வங்கதேச பிரதமர் ஷேக் அசீனா இந்தியா வருகிறார். அப்போது, மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியா நிதி உதவிகளை அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சக்தியாகச் சீனா விளங்குகிறது. தென் ஆசிய பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தச் சீனா தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில் ஒருபகுதியாக, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. ஏற்கெனவே, சீனாவின் மிகப்பெரிய நண்பனாகப் பாகிஸ்தான் விளங்குகிறது. நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குப் பல்வேறு உதவிகள் செய்வதன் மூலம் தன்னுடைய நெருங்கிய நட்பு நாடாக மாற்றி, தன்னுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்த சீனா முயற்சித்து வருகிறது. இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் துறைமுகங்கள் புதுப்பிப்பு, புதிய துறைமுகங்கள் அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது சீனா.

சீனாவின் இந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும். உலக வல்லரசுகளுள் ஒன்றாக இருக்கவும் இந்தியாவும் தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக, அண்டை நாடுகளுடனான சுமுகமான உறவுக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. பாகிஸ்தானுடனான உறவு சுமுகம் இல்லாத நிலையில், மற்ற அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளத்துடன் நட்புறவை நல்லநிலையில் வைத்திருக்க அவ்வப்போது மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்து வருகிறது. இதன் காரணமாகத்தான், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியாவுடன் இணைந்து இவ்விரு நாடுகளும் புறக்கணித்தன. தற்போது, வங்கதேசத்துக்கு 350 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி உதவியைச் செய்கிறது. இந்த நிதியை புதிய ரயில் பாதை அமைப்பு, அணு, அனல்மின் உற்பத்தி, புதிய மின் கம்பிவடப் பாதை அமைப்பு, சோலார் மின் உற்பத்தி போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கு வங்கதேசம் பயன்படுத்தும். 350 கோடி டாலரைத் தாண்டி, வங்கதேசத்துக்கு இன்னும் அதிக அளவில் இந்தியா நிதி உதவி அளிக்க உள்ளது. வங்கதேசப் பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் ரஹ்மான், "வங்கதேசத்தின் பல திட்டங்களில் இந்தியா முதலீடு செய்ய உள்ளது. இதன் மதிப்பு 500 கோடி அமெரிக்க டாலர் என்ற அளவில் இருக்கும். இது, இந்த இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உதவும்" என்கிறார். 

''தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக 39,595 கோடி ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தமிழக அரசு கேட்டிருந்தது. வறட்சியை ஆய்வுசெய்த மத்தியக் குழுவோ, 2,096 கோடி ரூபாய் வழங்க பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு 1,748 கோடி ரூபாயை மட்டுமே அறிவித்தது. அதேநேரத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக, வங்கதேசத்துக்கு 22,700 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவிகளை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- பா.பிரவீன் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!