வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (29/03/2017)

கடைசி தொடர்பு:08:26 (30/03/2017)

ஜி.எஸ்.டி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

மக்களவை

'ஜி.எஸ்.டி' என்று கூறப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி மசோதா, திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜி.எஸ்.டி துணை மசோதாக்கள் மீது அடுத்தடுத்து வாக்கெடுப்புகள் நடந்தன. இதையொட்டி, ஜி.எஸ்.டி சம்பந்தமான நான்கு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மக்களவையில் ஜி.எஸ்.டி மசோதாவைத் தாக்கல்செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'நாங்கள் உருவாக்கிய இந்தச் சட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சமமான பயனைக் கொடுக்கும். இப்போது நடைமுறையில் இருக்கும் பல வரிகளை ஜி.எஸ்.டி குறைக்கும். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருள்களைக் கொண்டுசெல்வதை ஜி.எஸ்.டி சுலபமாக்கும்' என்று கூறினார்.  
 
இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றியதற்கு வாழ்த்துகள். புத்தாண்டு, புதுச் சட்டம் மற்றும் புது இந்தியா' என்று வாழ்த்துச்செய்தி பதிவிட்டுள்ளார். 
 
ஜி.எஸ்.டி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'ஜி.எஸ்.டி சம்பந்தமான நான்கு மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதை, ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பாகக் கருதுகிறேன். வரலாறு உருவாக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், மிகவும் புது விதமான மறைமுக வரி நோக்கி நாம் மாறவுள்ளோம். ஜி.எஸ்.டி சம்பந்தமான அனைத்து சட்ட நடைமுறைகளும், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் நிறைவுசெய்யப்படும்' என்று கூறியுள்ளார்.