வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (30/03/2017)

கடைசி தொடர்பு:13:24 (30/03/2017)

'பூத் ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார் முதல்வர்' - டெல்லி போராட்டத்தில் சீமான் காட்டம்

seeman

தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உட்பட,  டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 16 நாள்களாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இன்று நடந்த 17-வது நாள் போராட்டத்தில், தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தந்துள்ளார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பேசிய அவர், 'விவசாயிகளைப் பற்றி யோசிக்காமல், முதல்வர் பழனிசாமி ஆர்.கே.நகரில் பூத் ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார். விவசாயிகளைப் பார்த்து, நீங்கள் போராடாதீர்கள்... உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். உரிய நிவாரணத்தை நாங்கள் வாங்கித்தருகிறோம் என களமிறங்கவேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் அவர்களோ, கட்சியின் சின்னத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் கடனை அரசு உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். 

மேலும், நேற்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து தேசத்துரோகி என்று கூறியதைப் பற்றி கருத்து தெரிவித்த சீமான், 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... தேசத்துரோகிகளுக்கு யாரைக் கண்டாலும் தேசத் துரோகியாகத்தான் தெரியும்', என்றார்.