Election bannerElection banner
Published:Updated:

`கடினமாக உழைக்க அப்பா கற்றுக்கொடுத்தார்!' - வைரலாகும் சிலம்பம் சுற்றும் பாட்டி

சிலம்பம் சுற்றும் 85 வயது பாட்டி
சிலம்பம் சுற்றும் 85 வயது பாட்டி

``நான் என்னுடைய 8 வயதில் இருந்து சிலம்பம் சுற்றி வருகிறேன். என்னுடைய அப்பா கடினமாக உழைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்.’

சமூக வலைதளங்களில் சிலம்பம் சுற்றும் பாட்டி ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. ``இந்த வயதிலும் இவ்வளவு வேகமாக சிலம்பம் சுற்றுகிறார்; இவரைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்; மிகவும் கடினமாக இந்தச் சூழலில் இந்த வீடியோ புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மிகவும் திறமைசாலி அவர்; அவரால் மற்றவர்களுக்கு சிலம்பம் பயிற்றுவிக்க முடியும்” போன்ற கமென்டுகளுடன் வீடியோவைப் பகிர்ந்து அந்தப் பாட்டிக்கு தங்களது ஆதரவுகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா காலே பாட்டி சிலம்பம் சுற்றும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து வந்தனர். இணையத்தில் இவ்வளவு வைரலாகும் இந்தப் பாட்டி யார் என்றும் நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். ஆமாம்.. இந்தப் பாட்டி யார்?

புனேவைச் சேர்ந்த இந்தப் பாட்டியின் பெயர் சாந்தாபாய் பவார். 85 வயதான இவர் தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக சிலம்பம் சுற்றி வருகிறார். புனேவில் உள்ள சாலை ஒன்றின் அருகில் நின்றபடி பாட்டி சிலம்பம் சுற்றும்போது அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். சிலம்பம் சுற்றுவது குறித்து ஊடகங்களிடம் சாந்தாபாய் பேசும்போது, ``நான் என்னுடைய 8 வயதில் இருந்து சிலம்பம் சுற்றி வருகிறேன். என்னுடைய அப்பா கடினமாக உழைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். கொரோனா காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், நான் சிலம்பம் சுற்றும்போது அவர்கள் வந்து பார்க்கும் வகையில் பாத்திரத்தில் ஒலி எழுப்பி எனது வருகையைத் தெரிவிப்பேன். கடவுளின் அருளால் என்னால் இந்த வயதிலும் செயல்பட முடிகிறது. எனது வாழ்வாதாரத்தையும் ஈட்டிக்கொள்ள முடிகிறது. என்னுடைய பேரக் குழந்தைகள் படித்து வருகிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று எனர்ஜியுடன் தெரிவிக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா காலே இந்த வீடியோவைப் பகிர்ந்து, ``நம்ப முடியாத ஒன்று. இதையத்தைத் தொடுகிற ஒன்று. மிகவும் வலிமையான பெண்” என்று குறிப்பிட்டு அவருக்கு உதவி செய்வது தொடர்பாக கேப்ஷனில் பதிவிட்டுருந்தார். வீடியோ வைரலான பிறகு, புனே காவல்துறை ஆணையர் வெங்கடேஷம் மற்றும் நடிகர்கள் ரித்தேஷ் தேஷ்முக், சோனு சூட் உட்பட பலரும் அவருக்கு உதவிகளை செய்ய முன் வந்துள்ளனர். பலரும் தள்ளாடும் வயதில் வலிமையாக நின்று சிலம்பம் சுற்றும் சாந்தாபாய்க்கு நாமும் வாழ்த்துக்களை தெரிவிக்கலாமே!

`எப்படியாவது அவனை வளர்த்துடணும்!' தேநீர் விற்று குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்! | Inspiring
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு