வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (01/04/2017)

கடைசி தொடர்பு:18:40 (05/04/2017)

ஆர்பிஐ-க்கு வயது 82

இந்திய ரிசர்வ் வங்கி இன்றுதான் (01 ஏப்ரல் 1935) நிறுவப்பட்டது. 1926ல் ராயல் கமிஷன் ஆன் இந்தியன் கரன்சி அண்ட்  ஃபைனான்ஸ் என்ற பிரிட்டிஷ் குழுவின் பரிந்துரையில் ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது.  டாக்டர் அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படி இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில், கொல்கத்தாவை தலைமை இடமாகக்கொண்டு செயல்படத் தொடங்கி, தற்போது மும்பையைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது, ரிசர்வ் வங்கி.

சுதந்திரத்துக்குப் பிறகு, 01 ஜனவரி 1949 அன்று இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது.  தேசியமயமாக்கப்படுவதற்கு முன், ஜூன் 1948 வரை பாகிஸ்தானுக்கு மத்திய வங்கியாகச் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ரிசர்வ் வங்கி, இந்தியாவின் தலைமை வங்கியாகவும்  வங்கிகளின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளைக் கட்டுப்படுத்துபவராகவும், கண்காணிப்பாளராகவும் இருக்கிறது, ரிசர்வ் வங்கி. 
 
இந்தியாவின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவுகளையும், தன் கருத்துகளையும் அழுத்தமாகத் தெரிவித்து,  இந்தியாவின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் நேரடியாகப் பங்கெடுக்கிறது. 
 
1969-ம் ஆண்டு, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டத்தின்படி, 19 ஜூலை 1969 அன்று இந்தியாவின் 14 மிகப்பெரிய வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதே போல 1980ல் மேலும் ஆறு பெரிய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்,  இந்தியாவின் 91% வங்கிச் சேவை அரசின் கீழ் செயல்படத் தொடங்கியது. இதனால், ரிசர்வ் வங்கியின் முக்கியத்துவம் மேலும் கூடியது.
 
 இந்தியாவின் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஜிடிபி மற்றும் பணவீக்கத்தைக் கண்காணிப்பது, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்வது, வாடிக்கையாளர்களுக்கு பேங்கிங் ஓம்புட்ஸ்மேன் போன்ற சேவைகளை வழங்குவது எனப் பல முக்கியப் பணிகளைச் செய்துவருகிறது.
 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வங்கிக் கடன்களைக் கட்டுப்படுத்துவது, வங்கிகளின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது,  இந்திய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பைத் தீர்மானித்து, மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கிய பின்  அச்சிடுவது, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும் செல்லாது என்று தீர்மானிப்பது, நாட்டின் நிதி சம்பந்தப்பட்ட சிக்கலான சேவைகளையும் செய்துவருகிறது. 
 
புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது, இந்தியாவில் ஒட்டு மொத்த கடன் அளவுகள் மற்றும் அதற்கான வட்டிவிகிதங்களை நிர்ணயிப்பது, கேஒய்சி விவரங்களைச் சரிபார்ப்பது மற்றும் நெறிப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தகங்கள், அந்நியச் செலாவணிகள் போன்றவற்றை கவனிக்கிறது. இவ்வளவு வேலைகளைச் செய்யும் ஆர்பிஐ துவங்கப்பட்டு இன்றோடு 82 வருடங்களாகின்றன.