பிரதமரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை! விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின் வேதனை

stalin

டெல்லியில், தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், 'நான் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால், அவர் எனக்கு நேரம் தரவில்லை' என்று வேதனை தெரிவித்தார்.

தமிழகத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க்கடனைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லி, ஜந்தர் மந்தரில் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பல அரசியல் தலைவர்கள் அவர்களைச் சந்தித்து வரும் நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்று விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். போராட்டக் களத்தில் அமர்ந்து பேசிவரும் அவர், விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணுவுடன் கலந்தாலோசித்தார். ஸ்டாலினுடன், திருச்சி சிவா எம்பி., டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  டி.ராஜா எம்பி-யும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை அரசுகள் கண்டுகொள்ளாதது வேதனை தருகிறது. முதல்வர் பழனிசாமி, விவசாயிகளைச் சந்திக்காமல், ஆர்.கே.நகரில் பிரசாரம்செய்கிறார். அவர், நேரில் வந்து சந்தித்திருக்க வேண்டும். விவசாயிகளுடன் நேரில் பேசி அவர்களின் பிரச்னைகளுக்கு பிரதமர் தீர்வு காண வேண்டும். பயிர்க்கடன் குறித்து மத்திய, மாநில அரசுகள் முரணான தகவல்களைத் தருகின்றன. விவசாயிகள் பிரச்னைகுறித்து தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், 'நான் அவரைச் சந்திக்க நேரம் கேட்டேன். ஆனால், அவர்கள் எனக்கு நேரம் தரவில்லை' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!