பல்கலைக்கழகங்கள் தற்கொலை மையங்களா? கவலையில் கல்வியாளர்கள் #MustRead #VikatanExclusive

மத்திய அரசின் மனித வளத் துறையின் நேரடி கண்காணிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி உயர் கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்து வருகிறது. இங்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையால் ஏராளமான மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு சேர்கிறார்கள். இங்கு சேர்ந்து படிக்க வேண்டும் என்பது  தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் ஏழை மாணவர்களின் கனவாக இருக்கிறது. அண்மையில் நடந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்துகிருஷ்ணனின் மரணம், கடந்த ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை, இதே பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வு மாணவர் சரவணனின் தற்கொலை எனப் பல்கலைக்கழகங்களில் தொடரும் தற்கொலைகள் இங்கு சேர காத்திருக்கும் மாணவர்களிடையே கிலியினை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அண்மையில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி 'பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்திற்கு சவால் விடும் வகையில் பல சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. பல்கலைக்கழகங்களில் மாறுபட்ட கருத்துகள் கொண்டிருப்பதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் அடிப்படை உரிமை. ஆனால், இங்கு இனப்பிரிவுகளும், மத அடிப்படையிலான குழுக்களுக்கும் இடமே இல்லை' என்று பேசி இருக்கிறார்.

பல்கலைக்கழகங்கள் கல்வியாளர் போராட்டம்

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் நடக்கும் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம்? இங்கு உயர் படிப்புகளில் சமநிலையும், சுதந்திரமும் இல்லையா? என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. இது குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம். 

கல்வியாளர் எழுத்தாளர் பிரேம் பல்கலைக்கழகங்கள்டெல்லி பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியரும், எழுத்தாளருமான பிரேம் "பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆதிக்க மற்றும் நடுத்தர பிரிவு மாணவர்களிடம் பேசி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் மீது வெறுப்பு உணர்வை ஊட்டுகிறார்கள். ஒடுக்கப்பட்ட பிரிவில் வரும் மாணவர்களும் பதுங்கி பதுங்கிதான் படித்து முடிக்கிறார்கள். கொஞ்சம் அரசியல் தெரிந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குச் சூழல் சரியில்லாத சூழ்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். டெல்லியில் உள்ள கல்லூரி ஒரே வகுப்பில் இரண்டு மூன்று ஏபிவிபி மாணவர்கள் இருந்தாலேயே வகுப்பு மாணவர்களையும், பேராசிரியர்களையும் அழ வைக்கிறார்கள். 

ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள காரணம் இவர்கள் மீது மறைமுகமான தாக்குதல் இருந்துகொண்டே இருக்கும். தற்போது இந்துத்துவா கொள்கைக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்பவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அதுவும் குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளிப்படையாக ஆங்கிலத்தில் பதிவு செய்து வருபவர்களை மதவாத சக்தியும், சாதிய சக்திகளும் பின் தொடர்ந்து கண்காணித்துத் தாக்குதல் நடத்துகிறார்கள்" என்கிறார். 

பல்கலைக்கழகங்கள் கல்வியாளர் வேங்கடாசலபதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை முடித்து தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக இருக்கும் ஏ.ஆர். வேங்கடாசலபதி "ஒடுக்குமுறை அதிகமாக இருக்கும் இடத்தில் இது போல் நடப்பதில்லை. உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களும் செத்து போன சுடுகாடு போல் தான் இருக்கிறது. இங்கு மாணவர்கள் அமைப்புகளும், கலை இலக்கிய அமைப்புகளும், ஒரு குழுவாக சமூகமாக கலந்துகொள்ளும் சூழலும் இல்லை. 

ஆனால், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெரிய உக்கிரமான அறிவு சூழல் இருக்கிறது. அங்கு தினந்தினம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கும். இதனால் சமூக விழிப்பு உணர்வும், அரசியல் விழிப்பு உணர்வும் அதிகமாக இருக்கும். இங்குப் பயிலும் மாணவர்கள் கற்றல் கல்விக்கும் அனுபவத்திற்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதை உணர்வார்கள். இந்த இடைவெளி உணர்வு மாணவர்களை நெருக்கடியில் தள்ளுகிறது. மோடி அரசு பதவியேற்ற பின்பு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீரற்ற நிலையும், பெரிய அளவில் கொந்தளிப்பும் நிலவுகிறது. இதனால் விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்குப் போகும் போது திக்குத்தெரியாத காட்டில் போய் மாட்டிக்கொண்ட நிலையில் மாணவர்களிடையே மலைப்பை உருவாக்கும். நடுத்தர குடும்பத்தில் இருந்தும், மேல் தட்டு வர்க்கத்தில் இருந்தும் செல்லும் மாணவர்கள் எளிதில் அந்தச் சூழலில் தங்களைத் தகவமைத்து கொள்கிறார்கள். விளிம்பு நிலையில் இருந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இவர்களுடைய எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும், நிறையப் படிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். இந்த நிலையில் கொந்தளிப்பான நிலையில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களை எதுவும் செய்ய விடாமல் தடுக்கிறது. இது தற்கொலை வரை தள்ளி விடுகிறது" என்றவர், "இதனைத் தடுக்க சாதி அமைப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும். புண்ணுக்கு மருந்து போடுவது மட்டும் சரியானது அல்ல. சமூக அமைப்பிலேயே மிகப்பெரிய மாற்றம் நடைபெற வேண்டும்" என்கிறார். 

பல்கலைக்கழகம் கல்வியாளர் வீ. அரசுஓய்வு பெற்ற சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் பேராசிரியர் வீ. அரசு "முத்துகிருஷ்ணன் போன்ற மாணவர்கள் தற்கொலை வரை செல்வதற்கு அவர்களுடைய மனதில் உருவாக்கப்படுகின்ற தாழ்வுணர்ச்சி முதன்மையான காரணம். மாணவர் பிறந்த சாதி, ஆங்கில அறிவின் பலவீனம், பொருளாதார அளவில் பின் தங்கி இருப்பது போன்றவை உருவாக்குகின்ற தாக்கம் ஆழமான தாழ்வு மனப்பான்மையினை உருவாக்கி விடுகிறது. இதில் இருந்து விடுவித்துக்கொண்டு மாணவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லக் கடுமையாக போராடுகிறார்கள். இதற்கு முத்துகிருஷ்ணனுடைய முக நூல் பதிவுகளை உதாரணமாகச் சொல்ல முடியும். அவர் மொழி குறித்தும், பொருளாதார அளவில் இருக்கும் விஷயத்தையும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் சம உரிமை கிடைக்கவில்லை என்ற விஷயத்தை எல்லாம் விரிவாகப் பதிவு செய்து இருக்கிறார். ஆனால், சமூக எதார்த்தங்களை புரிந்து போராடி வென்று அடுத்த கட்டத்துக்கு சென்ற முத்துகிருஷ்ணன் ஏன் இந்த மாதிரியான முடிவினை எடுத்துக்கொண்டார் என்ற கேள்வி மிகவும் உறுத்துதலாக இருக்கிறது. 

இவ்வளவு கொடுமைகளையும் எதிர்கொண்டு மேல் வந்தாலும், மீண்டும் மீண்டும் அவர் புழங்குகிற பல்கலைக்கழகத்தில் மரியாதையும், சமூக அங்கீகாரமும் வழங்குவது இல்லை. 'இந்தச் சமூகம் நம்மை வாழவே விடாதோ' என்று ஆழமான கேள்வியால் ஒடுக்கப்படுகிறோம் என்று மனரீதியில் உணர்கிறார்கள். ஒடுக்கப்படுதலுக்கு எதிர்த்து வெளிப்படுத்துகிற மனநிலை வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது. இதில் ஒரு வடிவம் தான் அம்பேத்கர் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு அடையாளப்படுத்திக்கொள்வது, இடசாரி அமைப்புகளுடன் தங்களை இணைத்துக்கொண்டு போராடுவது. இந்தப் போராட்டங்களின் உணர்வுகளை மனதில் வாங்கி அதுவே மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகின்ற மனநிலை உருவாகிறது. தற்கொலை என்பது விரும்பிச் செய்வது அல்ல, தற்கொலைக்கான மனநிலையைப் படிப்பு சூழல், நிர்வாகம், அங்கு நடக்கும் நிகழ்வுகள் உருவாக்குகின்றன.

தற்கொலைகள் தொடர்ந்து நடக்காமல் இருக்கச் சாதி ஆதிக்க சார்ந்த கருத்து நிலை உள்ள பல்கலைக்கழக தலைமை இல்லாமல் இருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் தலைவர் தோரட் 2007-ம் ஆண்டு ஒரு அறிக்கையினை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் போன்றவர்கள் தற்கொலை செய்துகொள்ள காரணமான விஷயங்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். 'முதல்தலைமுறையில் இருந்து படிக்க வருபவர்கள் மன ரீதியாக அவர்கள் எடுக்கக்கூடிய தாழ்வு உணர்ச்சியினை போக்கி, அவர்களை வளர்த்து எடுப்பதற்குக் கல்வி நிறுவனங்களில் பயிற்சி வழங்க வேண்டும், உதவித்தொகைகளைக் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும், உதவித்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்' போன்ற 70 பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார். ஆனால், எதுவுமே கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படுவதில்லை. காரணம் பல்கலைக்கழக தலைமையே சாதி போன்ற விஷயங்களில் மூழ்கி இருப்பது தான். பல்கலைக்கழகங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குக் குறிப்பிட்ட அளவு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், இதில் 10% பேருக்குக் கூட வேலை வாய்ப்பினை வழங்குவதில்லை" என்கிறார் பேராசிரியர் வீ. அரசு. 

சமூக செயற்பாட்டாளர் கல்வியாளர் எவிடன்ஸ் கதிர்முத்துகிருஷ்ணனின் தற்கொலையினை முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் எவிடன்ஸ் கதிர். இவர் கூறுகையில் "யூஜிசி முன்னாள் சேர்மன் தோரட் அவர்களுடைய பரிந்துரையினை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கொண்டு வர வேண்டும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்பதற்கு என்று ஆலோசனை குழுவினை அமைக்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு பெரிய அளவில் இருக்கிறது. அது சமுதாயத்தில் வெளியே தெரியாமல் இருக்கிறது. ஆய்வு படிப்பிற்கு செல்லும் ஒடுக்கப்பட்ட மாணவர்களில் 95% வழிகாட்டியாக உள்ள பேராசிரியர்களிடம் பாதிக்கப்படுகிறார்கள். இதிலும், பெண் மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

பலரும் சாதி ரீதியான தனிமனித வன்முறை பிரச்னையினை பெருமளவில் சந்திக்கிறார்கள். இதற்கு உதாரணமாக 2008-ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் ஆராய்ச்சி செய்து வரும் செந்தில்குமார் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்னொரு புறம் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக, வட மாநிலங்களில் பல்கலைக்கழகங்களில் மத அமைப்புகள் உள்ளே புகுந்து விட்டன. அதனை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடுக்கும் போது அவர்களின் மீது தாக்குதலுக்கு ஆளாகுகிறார்கள். மாணவர்களிடையே குறைகள் இருப்பதால் தான் போராட்டம் வருகிறது. அந்தக் குறைகளை களைவதற்கு அமைப்பினை உடனே தொடங்கிட வேண்டும். மாணவர்களின் போராட்டங்கள் மூலம் கொள்கைகள் மாற வேண்டும். அதிகாரமும், மதவாதமும் மாற வேண்டும். சோலைவனமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகம் சேரும் மாணவனை புதைகுழியாக இருக்கக்கூடாது. கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகள் இருந்தால் அந்தக் கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதை உடனே அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்" என்கிறார் எவிடன்ஸ் கதிர்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து, தற்போது டெல்லியின் அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர் சுரேஷ் "தற்போது டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் வலது சாரிகளும் இடது சாரி கொள்கை கொண்ட மாணவர்களும் மோதிக்கொள்ளும் போக்கு நிலவி வருகிறது. இந்தப் போக்கு இதர மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் மாணவர்களிடையே ஒரு வித பய உணர்வினை உருவாக்கி இருக்கிறது" என்கிறார்.

மனநல மருத்துவரும் ஆலோசகருமான நம்பி "போராட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள் கொள்கை கோட்பாட்டில் அதிக ஈடுபாடு இருந்தாலும், அதை தங்களுடைய மனதுக்குள் வைத்தும் குமுறிக்கொண்டு இருப்பார்கள். கடைசி தருணத்தில் யாரேனும் ஒருவரிடம் மன குமுறலை கொட்டிவிட்டாலேயே தற்கொலைக்கான எண்ணம் வராது. மனக்குமுறல் என்பது பிரசர் மாதிரி. அந்த பிரசரை கொஞ்சம் வெளியே திறந்து விட்டாலேயே தற்கொலைக்கான எண்ணங்கள் காணாமல் போய்விடும். உள்ளேயே வைத்துப் பூட்டி வைக்கும் போது ஒரு நாள் வெடித்து விடும். கண்ணதாசன் இதைத் தனது பாடல் மூலம் அழகாகச் சொல்லி இருக்கிறார். 'சொல்லி அழுது விட்டால் துன்பம் எல்லாம் தீர்ந்து விடும்... சொல்ல ஒரு தோழி இல்லை, சொல்வதற்கு வார்த்தை இல்லை....தனியே படுத்திருந்து, தலையணையை நனைப்பதன்றி வேறோர் பரிகாரம் நானறியேன் காண்பதற்கு....!' என்று சொல்லி இருக்கிறார்.

தற்கொலை என்பது காலரா, டெங்கு காய்ச்சல் மாதிரி ஒருத்தரிடமிருந்து இன்னொருவருக்கும் பரவும் நோய் போன்றது. அதாவது ஒருத்தரின் எண்ணங்கள் இன்னொரு பரவி பாதிப்பினை ஏற்படுத்தும். எதிர்மறையான எண்ணங்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும். நம்பிக்கையற்று, நண்பர்களும் இல்லாத நிலையில் தற்கொலைக்கான சிந்தனைதான் ஓடும். எந்த ஒரு விஷயத்தையும் மனதில் வைத்து புழுங்கிக்கொண்டிக்காமல், நண்பர்களிடம் விஷயத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்" என்கிறார்.

இந்திய பல்கலைக்கழகங்கள் மாறும், உலக அளவில் இடம் பிடிக்கும் என்ற கனவை பலரும் சிதைத்து வருகிறார்கள். இளைஞர்கள் விழித்துக்கொண்டு பல்கலைக்கழக கல்வியில் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்.

- ஞா. சக்திவேல் முருகன் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!