வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (02/04/2017)

கடைசி தொடர்பு:10:01 (02/04/2017)

`’சும்மா அதிருதில்ல..?!’ அசத்தும் சி.எம்! அலறும் அலுவலகங்கள்!

ஆதித்யநாத்

த்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பின்னர், அந்த மாநிலத்தில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்த அறிவிப்புகள் சக அமைச்சர்களை மட்டும் அல்லாமல் அதிகாரிகளையும் நிம்மதி இழக்கச் செய்துவருகிறது. அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகளில் சில, பரவலான எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் கிளப்பிய போதிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படத் தொடங்கி இருக்கிறார், முதல்வர் ஆதித்யநாத். 

அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து, இறைச்சிக் கடைகளை நடத்துபவர்கள் கடையடைப்பு நடத்தி அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ‘அனுமதிபெற்ற இறைச்சிக் கடைகள், வழக்கம்போல் இயங்கலாம். அவற்றுக்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம். ஆனால், அனுமதி இல்லாமல் இயங்கும் கடைகளைத் திறக்க அனுமதிக்க மாட்டோம்’ என அரசுத்தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால், அனுமதியின்றி இறைச்சிக் கடைகளை நடத்தி வந்தவர்கள், செய்வது அறியாமல் திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

அரசின் திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு!

பள்ளிகளில் ஆசிரியர்கள் டீ ஷர்ட் அணியத் தடை, ஆசிரியர்கள் அவசியம் இல்லாமல் செல்போனில் பேசுவதற்குத் தடை, அரசு அலுவலகங்களில் பான்மசாலா, குட்கா போன்றவற்றை பயன்படுத்த அனுமதி இல்லை, அலுவலக கோப்புகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லத் தடை, அரசு அலுவலகங்கள் சி.சி.டி.வி கேமரா மூலமாக கண்காணிப்பு, அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை போன்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன .இந்த நடைமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டும் வருகின்றன. 

நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சென்று, ‘பொது மக்களிடம் இருந்து விலகி அந்நியப்பட்டு இருக்கும் அலுவலகம் எது?’ என கேட்டால், உடனடியாக வரக்கூடிய பதில், ‘காவல்நிலையம்’ என்பதாகவே இருக்கும். அந்த அளவுக்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள். இதில், உத்தரபிரதேச மாநிலமும் விதிவிலக்கு அல்ல. அதனால், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கி இருக்கிறது. அனைத்து காவல்நிலையங்களிலும் வரவேற்பு மையங்கள் அமைக்க உத்தரவிட்டதுடன், புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் உத்தரவிட்டு உள்ளார் முதல்வர். இதற்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.  

பரபரப்பாக இயங்கும் தலைமைச் செயலகம்!

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இத்தகைய அதிரடி உத்தரவுகளுக்குப் பின்னர், உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலகம் பரபரப்பாக செயல்படத் தொடங்கி இருக்கிறது. முன் ஒரு காலத்தில் நவாப் ஆட்சி நடைபெற்ற காரணத்தாலோ, என்னவோ லக்னோவில் உள்ள தலைமைச் செயலகம் எப்போதும் ‘துரை’த்தனத்துடனேயே இருக்கும். அதிகாரிகளை அவ்வளவு எளிதாக யாரும் பார்த்துவிட முடியாது. 
எந்த அலுவலகத்திற்குள் நுழைந்தாலும், வாசலில் நிற்கும் பியூனே தடுத்து நிறுத்தி விடுவார். அதிகாரிகளை நேரில் சந்தித்து குறைகளை முறையிடுவது என்பது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. காலை 10 மணிக்கெல்லாம் அதிகாரிகள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு, காலை 9:30 மணிக்கே அனைவரும் ஆஜராகி விடுகிறார்கள். லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில் வழக்கமாக கார்கள் நிறுத்தப்படும் இடத்தில் எப்போதும் நிறைய இடம் காலியாக இருக்கும். ஆனால், இப்போது அனைத்து அதிகாரிகளின் கார்களும் நிறுத்தப்படுவதால், அங்கு வாகனங்களை நிறுத்தமுடியாத சூழல் உள்ளது. அதிகாரிகள் விடுமுறை எடுக்காமல் அலுவலகத்துக்கு வந்துவிடுகின்றனர். இதனால் இதுபோன்று இடநெருக்கடி ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

உத்தரப்பிரதேச தலைமைச் செயலக ஊழியர் ஒருவர் இதுபற்றிக் கூறுகையில், ‘‘இப்போதெல்லாம் அனைத்து அதிகாரிகளும் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வந்து விடுகிறார்கள். இதுவே கடந்த 10 நாளுக்கு முன்பாக இருந்தால், கார் நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படும். நிறைய அதிகாரிகள் அலுவலகப் பணியாக வெளியில் செல்வதாகச் சொல்லிச் சென்று விடுவார்கள். அல்லது அலுவலகத்துக்கு தாமதமாக வருவார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. எல்லோருமே சரியான நேரத்துக்கு முன்பாகவே வந்து விடுகிறார்கள். அதனால்தான் வாகன நிறுத்துமிடத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது’’ என்றார்.
 
உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தலைமைச் செயலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்த ஒரு முதியவர் கூறுகையில், "முதல்வரின் அறிவிப்பு வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்பு வரையிலும், அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், ‘அதிகாரி இப்போது பிஸியாக இருக்கிறார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாருங்கள் பார்க்கலாம்’ என்பார்கள். அல்லது, ‘சார், இப்போதுதான் டீ குடிக்க வெளியில் போயிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாருங்கள்’ என்று அலைக்கழிப்பார்கள். ஆனால், இப்போது எல்லா அதிகாரிகளும் சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார்கள். நமது தேவைகளையும், கோரிக்கைகளையும் அதிகாரிகள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். இந்த நிலைமை தொடர வேண்டும்’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

பான் மசாலா, குட்காவுக்கு விடுதலை!

அரசு அலுவலகங்களில் பான் மசாலா, குட்கா பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அரசு அலுவலக ஊழியர்களிடம் பேசியபோது, "பான் மசாலா, குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் எல்லா இடங்களும் சுத்தமாக இருக்கின்றன. முன்பெல்லாம், அலுவலகத்திற்கு வரும் வழிகளில் பான்மசாலா பாக்கெட்டுகள் சிதறிக் கிடக்கும். பாலித்தீன் பைகள் காற்றில் பரவிக் காணப்படும். ஆனால், அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, அலுவலக வளாகமே சுத்தமாக இருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். அதில். "நீங்கள் கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகிறீர்கள். பான் மசாலா, குட்கா எடுத்துக் கொண்டால் ஆயிரம் ரூபாய அபராதம் விதிக்கப்படுவீர்கள்" என எழுதப்பட்டு இருப்பதால் பொதுமக்களும் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் சிலர் பான் மசாலா, குட்கா ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளவர்கள். ஆனால், இப்போது அந்தப் பழக்கத்தை விடவும் அவர்களால் முடியவில்லை. அலுவலகத்துக்குள் அவற்றை பயன்படுத்தவும் முடியாமல் சூயிங்கம் போன்றவற்றை மெல்வதற்குப் பழகிக் கொண்டார்கள்’’ என்று சொல்லிச் சிரிக்கிறார். 

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்!

அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஃபைல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்களின் மேஜையில் ஃபைல்கள் தேங்கி விடக் கூடாதே என்பதற்காக இரவு நேரத்திலும் ஜரூராக வேலை செய்கிறார்கள். அலுவலகங்களில் தேவையற்ற கூட்டம் அமர்ந்து வெட்டிக் கதைகளைப் பேசுவதற்கு அதிகாரிகளும், அமைச்சர்களும் அனுமதிப்பது இல்லை. மக்களின் கோரிக்கைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கைகளை அமைச்சர்கள் எடுத்து வருகிறார்கள். தங்களைப் பற்றிய புகார் எதுவும் முதல்வரின் கவனத்துக்குப் போய்விடக் கூடாது என்கிற கவலை அவர்களுக்கு.
அத்துடன், அமைச்சர்களின் அலுவலகமும் சுத்தமாகக் காட்சி அளிக்கிறது. குப்பைகள், தேவையற்ற காகிதங்கள் என எதுவும் இல்லாமல் பளிச் என அலுவலக வளாகத்தை வைத்து இருக்கிறார்கள். நாட்டில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு மேற்கொண்டு வரும் முக்கியத்துவத்துக்கு பாதகம் ஏற்பட்டு விடாமல் தங்களுடைய அலுவலகம் இருக்க வேண்டும் என்கிற மன நிலையில் அமைச்சர்கள் இருப்பதைப் புரிய முடிகிறது. 

அரசு நிர்வாகம், அலுவலகம் என அனைத்தும் சரியாக செயல்படத் தொடங்கினால், மக்களின் வாழ்க்கையிலும் அதன் பிரதிபலிப்பு இருக்கத்தானே செய்யும். அதன்படி, இப்போது பொதுமக்களின் செயல்பாடுகளும் வழக்கமான நிலையில் இருந்து மாற்றம் அடைந்து மேம்படத் தொடங்கி இருக்கிறது. இந்த மாற்றத்தை பொதுமக்கள் விருப்பதுடன் வரவேற்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டு இருக்கும் புதிய மாற்றங்கள் பொதுமக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. லக்னோ மாநகரில் வசித்து வரும் குடும்பத் தலைவியான அனிதா ஷர்மா கூறுகையில், "அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகள் 10 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு எங்களுடைய வீட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண், முன்பெல்லாம் தாமதமாகவே பணிக்கு வருவார். ஆனால், இப்போது சீக்கிரமாகவே வந்து விடுகிறார். 
அவர் சீக்கிரமாகவே வருவதற்கு காரணம் என்ன என்பதை அவரிடமே கேட்டேன். அதற்கு அவர், ‘நான் உங்க வீட்டுக்கு வேலைக்கு வருவதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் வேலை செய்யும் அதிகாரி ஒருவரின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வருவேன். முன்பு அவர் தாமதமாகவே வேலைக்குச் செல்வார். அதனால் நானும். அவரது வீட்டுக்கு தாமதமாக போய் வேலைகளைச் செய்து கொடுப்பேன். இப்போது அவர் 9.30 மணிக்கு முன்பாக கிளம்பி விடுவதால், சீக்கிரமாகவே அவரது வீட்டுக்குச் செல்கிறேன். அங்கே வேலைமுடிந்ததும் சீக்கிரமாகவே உங்க வீட்டுக்கு வந்து விடுகிறேன்’ என்கிறார். அந்த அளவுக்கு அரசின் உத்தரவு சாமன்ய குடும்பங்களிலும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது" என்றார் உற்சாகமாக. 

அயோத்தி பிரச்னையில் அதிரடித் திருப்பம்!

அரசு அலுவலக நடைமுறைகள், அதிகாரிகள். அமைச்சர்களுக்கான உத்தரவுகள் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியைக் கிளப்பி வரும் சூழலில், அயோத்தி பிரச்னையும் யூ டர்ன் அடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆதித்யநாத் முதல்வரானதுமே, ‘இந்து சம்யத்தில் தீவிரப் பற்றாளரான இவர் அயோத்தியில் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பார்’ என நடுநிலையாளர்களும் இஸ்லாமிய அமைப்பினரும் அச்சம் தெரிவித்து வந்தனர். ஆனால், அவரதுதரப்பில் இருந்து இதுவரையிலும் அயோத்தி விவகாரம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், லக்னோ நகரில் வசிப்பவர்கள் அங்குள்ள பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டு இருக்கும் ஃபிளக்ஸ் பேனர்களை கடந்த இரு தினங்களாக ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கிறார்கள். இஸ்லாமிய அமைப்பின் பெயரில் வைக்கப்பட்டு இருக்கும் அந்த பேனரில், ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டிக் கொள்ள எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என எழுதப்பட்டு இருப்பதுதான் அந்த ஆச்சர்யத்துக்குக் காரணம். ‘ஸ்ரீராம் மந்திர் நிர்மான் முஸ்லிம் கர்சேவக் மஞ்ச்’ என்ற அமைப்பின் தலைவரான அஸம்கான் பெயரில் அந்த பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. 

இதுபற்றிப் பேசிய அஸம்கான், ‘‘அயோத்தி விவகாரம் தொடர்பாக இந்து, முஸ்லிம் சமுதாயத்தினரிடம் மோதல் போக்கு இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்காக லக்னோவில் ஒருமித்த கருத்து கொண்ட இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து இந்த அமைப்பைத் தொடங்கினேன். உச்சநீதிமன்றமும் அயோத்தி விவகாரத்தில் இரு தரப்பினரும் பேச்சுவாரத்தை நடத்தி சுமூக முடிவை மேற்கொள்ளவே வலியுறுத்தி இருக்கிறது. அதனாலேயே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை, அயோத்தியில் கோயில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுக்கு இந்த பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அவ்வளவே. ஆனால், நான் இதை வெளிப்படையாகச் சொல்வதாலும், இதனை வலியுறுத்தி ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பதாலும் எனக்கு நிறைய மிரட்டல்கள் வருகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் அல்லாமல் போன் மூலமாகவும் பலரும் மிரட்டல் விடுத்து வருகிறார்கள். என்னிடம் பேசிய சிலர், என்னை இந்த விவகாரத்தில் இருந்து விலகச் சொல்கிறார்கள். அல்லது பாபர் மசூதிக்கு ஆதரவாக பேசச் சொல்லி வற்புறுத்தி மிரட்டி வருகிறார்கள்.

எனக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்ததால் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறேன். அதனால் எனக்குப் பாதுகாப்பு கொடுத்து இருக்கிறார்கள். அயோத்தி விவகாரத்தில் வெளியிடங்களைச் சேர்ந்த இந்து அமைப்பினரும் இஸ்லாமிய அமைப்பினரும் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டால், இந்த பிரச்னையை சுலபமாகத் தீர்த்துவிட முடியும். வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த விவகாரத்தை அதிக சிக்கலாக்கி வருகிறார்கள். இதை நான் சொல்வதால் என் மீது இரு சமூகங்களைச் சேர்ந்த அமைப்பினரும் கோபம் அடைந்தாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை’’ என்று படபடக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகளை ஒட்டுமொத்த இந்தியாவே உன்னிபாக கவனித்து வருவதுதான் தற்போதைய நிலைமை!   

-ஆண்டனிராஜ்


டிரெண்டிங் @ விகடன்