வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (02/04/2017)

கடைசி தொடர்பு:20:16 (02/04/2017)

உலகின் டாப் 50 வங்கிகளில் இடம் பிடித்த SBI -யின் முதல் பெயர், சொத்து மதிப்பு தெரியுமா?

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான State Bank Of India (SBI) உலகின் பெரிய 50 வங்கிகள் பட்டியலில் இணைந்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  

SBI

கடந்த 2008ம் ஆண்டு முதலே எஸ்.பி.ஐ வங்கியுடன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. முதலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஸ்டிராவும் இரு ஆண்டுகள் கழித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரும் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டன. தொடர்ந்து,  எஸ்.பி.ஐ. வங்கியுடன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்டு ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபத், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க்  ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவான்கூர் மற்றும் பாரதிய மகிளா வங்கிகளை எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முழுமை பெற்றதையடுத்து, நேற்று இந்த 6 வங்கிகளுடன் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து ஸ்டேட் வங்கி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

தற்போது எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2.77 லட்சமாக ஆகியிருக்கிறது. நாடு முழுவதும் 25 ஆயிரம் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் 36 வெளிநாடுகளில் 190 எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகள் உள்ளன. சுமார், 58 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 50 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் 10க்கு 4 பேர் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள். இணைப்பையடுத்து எஸ்.பி.ஐ வங்கியின் சந்தை மதிப்பு 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் 50 பெரிய வங்கிகளின் பட்டியலில் எஸ்.பி.ஐ சேர்ந்துள்ளது. 

எஸ்.பி.ஐ. வங்கி நாட்டிலேயே பழமையான வங்கி. பிரிட்டிஷார் காலத்தில் 1806ம் ஆண்டு 'பேங்க் ஆப் கல்கத்தா' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1921ம் ஆண்டு 'இம்பிரீயல் வங்கி' என பெயர் மாற்றப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த பின், 1955ம் ஆண்டு 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' என பெயர் சூட்டப்பட்டது. அடுத்த ஆண்டே தேசியமயமாக்கப்பட்டது. தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு போர்ப்ஸ் இதழ், எஸ்.பி.ஐ வங்கிக்கு உலகின் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் 29வது இடம் அளித்திருந்தது. 

எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா

இணைப்பு குறித்து எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறுகையில், '' எஸ்.பி.ஐ வங்கியுடன் இணைந்த துணை வங்கிகளையும் அதன் ஊழியர்களையும் வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வங்கியை இன்னும் வளமிக்க சிறந்த வங்கியாக மாற்ற வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் உலகின் 30 பெரிய வங்கிகளுக்குள் ஒன்றாக எஸ்.பி.ஐ வங்கியும் மாற வேண்டும். தற்போதைய இலக்கு அதுதான்.  கடும் முயற்சிக்கு பின், வங்கிகள் இணைப்பு சாத்தியமாக்கியிருக்கிறது. பணியாளர்களுக்கு ஏதாவது பிரச்னை இருப்பின் என்னை நேரடியாக இ- மெயிலில்  தொடர்பு கொள்ளலாம். இணைந்து செயல்படுவோம் வெற்றி பெறுவோம்'' என தெரிவித்துள்ளார். 

இணைக்கப்பட்ட வங்கிகளில் பாரதிய மகிளா வங்கி கடந்த 2013ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. பெண்கள் பொருளாதாரரீதியாக தன்னிறைவு பெறுவதற்காக இந்த வங்கி உருவாக்கப்பட்டது. மகிளா வங்கி ஆண்டுக்கு 2.38 கோடி லாபமாக பெற்றது. ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்டு ஜெய்பூர் 1.69 லட்சம் கோடி வர்த்தகம் செய்து 851 கோடி லாபம் ஈட்டியது.  ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவான்கூர் 1.68 லட்சம் கோடி வர்த்தகம் செய்தது. நிகர லாபம் 338 கோடி. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் 1.25 கோடி வர்த்தகத்துடன் 358 கோடி நிகரலாபம் சம்பாதித்தது. ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா 1.89 லட்சம் கோடி வர்த்தம் செய்து 972 கோடி நிகரலாபம் ஈட்டியது. ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதரபாத் 2.5 லட்சம் வர்த்தகம் செய்தது. இந்த வங்கியின் நிகரலாபம் 1,065 கோடி.

-எம்.குமரேசன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்