முதன்முறையாக சாண எரிவாயுப் பேருந்துசேவை! சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை!! | First Bio Gas Bus service launched in Kolkata to Protect environment

வெளியிடப்பட்ட நேரம்: 22:18 (03/04/2017)

கடைசி தொடர்பு:22:18 (03/04/2017)

முதன்முறையாக சாண எரிவாயுப் பேருந்துசேவை! சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை!!

சாண எரிவாயு பேருந்து

ந்தியாவிலேயே முதன்முறையாக சாண எரிவாயுவில் இயங்கும் பேருந்து கொல்கத்தாவில் ஓடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசடைவது வெகுவாகத் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பொதுவாக பல்வேறு கிராமங்களில் மாட்டு சாணத்தை உபயோகித்து, அதில் இருந்து கிடைக்கும் உயிரி எரிவாயுவை,  திரவ பெட்ரோலிய எரிவாயுவுக்கு மாற்றாக உபயோகித்து, சமையல் செய்து வருகின்றனர். இதனால், எரிபொருள் தன்னிறைவு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசடைவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது.

இந்நிலையில், பீனிக்ஸ் இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், சாண எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய பேருந்தை முதன்முறையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறைந்த செலவில் இயங்கக்கூடிய இந்தப் பேருந்து கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது, தெற்காசியாவிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம்  இயங்கக்கூடிய பேருந்து கொல்கத்தாவில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில அரசிடம் அதிக வழித்தடங்களில் இத்தகைய பேருந்துகளை இயக்குவதற்கு பீனிக்ஸ் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதுபோன்ற 10 பேருந்துகளை தயாரித்து இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. சாண எரிவாயு பேருந்துகள் மூலம் மிகக்குறைந்த கட்டணத்தில் அதிக தொலைவு பயணம் செய்ய வழிவகை ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையும் உருவாகிறது. இதனால், ஏழை-எளிய மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று பீனிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் தற்போது பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ஆறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு 12 ரூபாய் கட்டணமாக உள்ளது. சாண எரிவாயு மூலமான பேருந்தில் 17 கிலோ மீட்டர் வரை ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்துகளில் செய்யப்படும் விளம்பர வருவாயில் இருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று பீனிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ஜோதி பிரகாஷ் தாஸ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "சாண எரிவாயு மூலம் தயாரிக்கப்பட்ட முதல் பேருந்து சேவையானது, கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான உல்தாடாங்கா - காரியா இடையே 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும். இந்தப் பேருந்தின் சோதனை ஓட்டம் டெல்லியில் மூன்று மாதங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் எவ்வளவு தொலைவு பயணம் செய்தாலும் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். மிகவும் மலிவான எரிபொருளாகக் கருதப்படும் சாண எரிவாயுவைப் பயன்படுத்தி, 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஓடி முடித்த பேருந்துகளையும் இயக்க முடியும்" என்று தெரிவித்தார்.

சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து ஒன்றின் உற்பத்திச் செலவு ரூ.13 லட்சம் ஆகும். 54 இருக்கைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாட்டு சாணத்தில் இருந்து கிடைக்கும் எரிவாயுவில் மீத்தேன் அடங்கியுள்ள போதிலும், நச்சுத் தன்மையை வெளிப்படுத்தாது. ஒருகிலோ சாண எரிவாயு தயாரிக்க 20 ரூபாய் செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயுவைக் கொண்டு ஆறு கி.மீ வரை பேருந்தை இயக்க முடியும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் ஒருகிலோ எரிவாயுவுக்கு 20 கி.மீ வரை பேருந்தை இயக்குவது பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆராய்ச்சி வெற்றி பெற்றால், 80 கிலோ கொண்ட டேங்க் ஒருமுறை நிரப்பப்பட்டால், பேருந்து 1,600 கி.மீ வரை இயங்கும்.

மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள தர்ப்ராஜ்பூரில் மிகப்பெரிய சாண எரிவாயு உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் கிலோ எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், சாண எரிவாயு மூலமான பேருந்துகளின் இயக்கம் அதிகரித்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு மேலும் குறையும் என்பதில் ஐயமில்லை.

-சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்