வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (04/04/2017)

கடைசி தொடர்பு:08:25 (04/04/2017)

“வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது யார் பொறுப்பு?” - தலாய் லாமா பதில்

தலாய் லாமா

“தலாய் லாமா என்பதற்குப் பலரும் பல்வேறு அர்த்தங்களை வழங்குகிறார்கள். சிலருக்கு நான் புத்தரின் அவதாரம்; சிலருக்கு நான் இறைவன், அரசன். 1950-களில் சீன அரசு எனக்கான மரியாதையை அளித்து சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவராக்கியது. ஆனால், 1959-ல் திபெத்தின் மீதான சீனாவின் அத்துமீறல்களை எதிர்த்து நான் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தபோது அதே சீனா என்னைப் புரட்சிக்காரன் என்று அழைத்தது'' - இப்படித் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த மனிதர் வேறு யாருமல்ல... புத்த மதத் தலைவர் தலாய் லாமா.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமுக்கு வருகை  தந்துள்ள இவர் திபெத்திலிருந்து தப்பியபோது சீன எல்லை பகுதியில் நம் இந்திய ராணுவ வீரர்கள் ஏழு பேரால் பத்திரமாக அழைத்து வரப்பட்டார். அதில், தற்போது நரேன் சந்திரதாஸ் என்பவர் மட்டுமே உயிரோடிருக்கிறார். அவரை, கெளகாத்தி பிரம்மபுத்திரா நதி விழா ஒன்றில் சந்தித்து, தம் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார். பின்பு, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். கெளகாத்தியிலேயே நிறைய நிகழ்வுகளில் பேசிவரும் அவர், தனது எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டு, மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இங்கிருந்து அருணாச்சலப்பிரதேசத்துக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் லூ காங், ''தலாய் லாமாவின் அருணாச்சலப்பிரதேசப் பயணம்குறித்து இந்தியா ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இந்தியா - சீனா ஆகிய இரண்டு முக்கிய நாடுகளுக்குள் இருக்கும் உறவைப் பாதுகாப்பது, இரு நாடுகளின் பொறுப்பு. உறவில் விரிசல் ஏற்படுத்தும் எந்த ஒரு முடிவும் ஆரோக்கியமானதல்ல'' எனத் தெரிவித்துள்ளார். 

இது ஒருபுறமிருக்க, கடந்த மாதம் பீகாரில் நடைபெற்ற புத்த மாநாட்டின்போது தலாய் லாமா கலந்துகொண்டார். அதற்கு, அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, ''சீனாவுக்கு எதிராகச் செயல்படும் தலாய் லாமாவுக்கு இந்தியா இப்படி இடம்கொடுப்பது சரியில்லை. சீன  - இந்திய உறவில் நல்லிணக்கம் தொடரும் வகையில் இந்தியா செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்திருந்தது. அதற்கு தலாய் லாமா, ''சீனாவில் இருக்கும் பொதுமக்கள் என்னை நேர்மறை கண்ணோட்டத்தில்தான் பார்க்கின்றனர். சீன அடிப்படைவாதிகள்தான் என்னைத் தொல்லை கொடுப்பவராக பார்க்கின்றனர்' என்று அப்போதே பதிலடி கொடுத்திருந்தார்.  

இந்த நிலையில், கெளகாத்தியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், ''கடந்த சில ஆண்டுகளாக நான், 'என்னை இந்தியாவின் மகன்' என்று கூறி வருகிறேன். 'அப்படி ஏன் சொல்கிறீர்கள்' என்று சீன மீடியாக்கள் என்னிடம் கேள்வி கேட்டன. அதற்கு, 'எனது மூளை முழுவதும் நாளந்தாப் பல்கலைக்கழகத்தின் சிந்தனைகளே நிரம்பியுள்ளன. கடந்த  ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் சப்பாத்தி, பருப்புக்கடைசலையே சாப்பிட்டு வருகிறேன். எனவே, மனதளவிலும், உடலளவிலும் நான் இந்தியனாகவே இருக்கிறேன்' என்று பதிலளித்தேன். நான் இந்திய அரசின் நீண்டநாள் விருந்தாளி, தற்போது இந்தியக் கலாசாரத்தைப் பரப்பும் தூதுவனாக மாறிவிட்டேன். மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் நான் முழு உறுதியுடன் இருக்கிறேன். மத வன்முறைகளுக்கு தீய நோக்கம் கொண்ட சிலரே காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் பிரச்னைகளையும், கருத்து வேறுபாடுகளையும் குறைப்பதற்கு ஒரே வழி, நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை முதலில் உணர வேண்டும். முகமது நபியோ, புத்தரோ, மகாவீரரோ இன்று மீண்டும் தோன்றினால் வன்முறையை உருவாக்கியது யார் என்று கேள்வியெழுப்புவார்கள். நிச்சயமாகக் கடவுள் இல்லை. அதை மக்களாகிய நீங்கள்தான் உருவாக்கினீர்கள். எனவே, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது உங்களது பொறுப்பாகும். எனக்கு எண்பது வயதுக்கும் மேலாகிறது. எனினும், நான் எழுபது வயதுக்காரர் போன்று இருப்பதாகக் கூறி, 'என்னுடைய இளமையின் ரகசியம்' குறித்து என்னிடம் பலரும் காரணம் கேட்கிறார்கள். அவர்களிடம், 'அது எனது ரகசியம்; அதை யாரிடமும் சொல்ல மாட்டேன்' என்று பதிலளித்துவிடுவேன். ஆனால், மன அமைதியே அதற்கு முக்கியக் காரணம்'' என்றார். 

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்