வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (04/04/2017)

கடைசி தொடர்பு:12:49 (04/04/2017)

தற்கொலை செய்துகொண்ட மும்பை இளைஞர்... கடைசியாக ஃபேஸ்புக் லைவ் பயன்படுத்தியுள்ளார்!

மும்பையில் இருக்கும் தனியார் கல்லூரியில், பி.காம் பயின்று வந்துள்ளார் அர்ஜுன் பரத்வாஜ். மும்பையில் இருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் (Taj Lands End Hotel) தங்கி இருந்துள்ளார். சில காலமாக, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த பரத்வாஜ், கடும் மனச் சோர்வுக்கு ஆளாகி இருந்துள்ளார். இதனால், நேற்று மாலை 6.30 மணி அளவில், ஃபேஸ்புக் லைவின் மூலம் பேசிவிட்டு, ஓட்டலின் 19-வது மாடியில் இருந்து குதித்துத்  தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பரத்வாஜின் பெற்றோர், பெங்களூரில் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

ஓட்டல் நிர்வாகம், 'பரத்வாஜ், அடிக்கடி உணவு ஆர்டர் செய்வார். மற்றபடி, எங்களுக்கு எந்தத் தொந்தரவும் தந்ததில்லை' என்று கூறியுள்ளது. 

இறப்பதற்கு முன் பரத்வாஜ், 'எப்படித் தற்கொலை செய்துகொள்வது?' என்று ஃபேஸ்புக் லைவ் மூலம் பேசியுள்ளார். அந்த வீடியோவை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று மும்பை போலீஸ் கூறியுள்ளது. மேலும், மும்பை போலீஸ் தமது  ட்விட்டர் பக்கத்தில், 'நகரத்தில் நடக்கும் இளைஞர்களின் தற்கொலை, மிகுந்த வருத்தம் தருகிறது. இத்தகைய இளைஞர்கள், எங்கள் உதவியை நாடும்படி கேட்டுக்கொள்கிறோம்' என்று பதிவுசெய்துள்ளது.