மன்னிப்பு கோரினார் பிரஷாந்த் பூஷன்

உ.பி.யில் அமைக்கப்பட்டிருக்கும் ஆன்டி-ரோமியோ படையை விமர்சிக்கும் வகையில் அவர் கிருஷ்ணரை கேலி செய்திருந்தார். இதையடுத்து,  எழுந்த எதிர்ப்புகளால் தனது ரீட்வீட்டை நீக்கியுள்ள அவர் தனது கருத்துக்கு  மன்னிப்பு கோரியுள்ளார்.

உ.பி.யில் ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைந்த பின்னர் பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. சட்ட விரோதமான இறைச்சி கூடங்களுக்கு தடை விதித்தார் முதல்வர் யோகி. மேலும், அவர் ஆன்டி-ரோமியோ படை என்ற குழுவை உருவாக்கி, பெண்களிடம் அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, உ.பி.யில் காதலர்கள் கூட வெளியில் செல்வதற்கு அஞ்சினர். உ.பி.யில் நடக்கும் அரசின் அடக்குமுறையை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சிக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாய் பிரஷாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெண்களிடம் குறும்பு செய்யும் கண்ணன் மீதும் உ.பி அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேலியாக பதிவிட்டார். மேலும, ஆன்டி-ரோமியோ படை என்பது ஆன்டி கிருஷ்ணா படையென மாற்றப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரஷாந்த் பூஷனின் கருத்து சமூக வலைத்தளங்களில் ரசிக்கப்பட்டாலும், அதிகளவிலான எதிர்ப்புகள் வர தொடங்கின. பல ஹிந்து அமைப்புகள் பூஷனின் கருத்தை கடுமையாக விமர்சித்தன. இதையடுத்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பிரஷாந்த் பூஷன். இது குறித்து தனது புதிய ட்விட்டர் பதிவில், 'மக்கள் மனதை எனது கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்' என கூறியுள்ளார். மேலும் தனது முந்தைய பதிவையும் அவர் நீக்கியுள்ளார்.

கிருஷ்ணரை பற்றி கருத்து கூறிய பிரஷாந்த் பூஷனின் தலையை கொண்டு வருவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என பஜ்ரங் தள் அமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.      
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!