வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (04/04/2017)

கடைசி தொடர்பு:09:58 (05/04/2017)

உ.பி.-யில் ரூ.30 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி!

உத்தரப்பிரதேசத்தில் 30,729 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. யோகி ஆதித்யநாத் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சிறு, குறு விவசாயிகளின் 30 கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமாக கருதப்பட்ட விவசாய கடன் தள்ளுபடியை முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றியுள்ளது ஆதித்யநாத் அரசு. இதன் மூலம் மாநிலத்தின் இரண்டு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான நலத்திட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அறுவடைக்கான பணம் அவர்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இறைச்சிக் கூடங்களின் உரிமம் குறித்தும் இன்று விவாதிக்கப்பட்டது. அனுமதி பெற்ற இறைச்சிக் கூடங்கள் தொடர்ந்து இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த விவாதங்களை கிளப்பிய ஆன்டி-ரோமியோ படையினர் பெண்களை தொந்தரவு செய்வோரிடம் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும், காதலர்களிடம் அல்ல எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.