வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/06/2012)

கடைசி தொடர்பு:20:32 (10/06/2012)

'இந்தி எதிர்ப்பு கார்ட்டூன் திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்தவில்லை'

சென்னை: இந்தி எதிர்ப்பு குறித்த கார்ட்டூன்  திராவிட  இயக்கத்தை     கொச்சைப் படுத்தவில்லை  என்று தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் முன்னாள் தலைமை ஆலோசகர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். 

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில்,விடுதலைக்கு பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலிச்சித்திரம் அச்சிடப்பட்டுள்ளது.

அந்த கேலிச்சித்திரம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் விதமாக உள்ளது என்றும், பாடப்புத்தகத்தில் இருந்து இந்த கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் என்று கருணாநிதி,வைகோ,டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு பாடப்புத்தகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்து கார்ட்டூன் அச்சிடப்பட்டிருப்பதாக கூறுவதை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் முன்னாள் தலைமை ஆலோசகர் யோகேந்திர யாதவ் மறுத்துள்ளார்.

அம்பேத்கார் பற்றிய கேலிச்சித்திர விவகாரத்தை அடுத்து, இப்பதவியில் இருந்து விலகிய அவர், இந்தி எதிர்ப்பு கேலிசித்திரம் குறித்து அளித்துள்ள பேட்டியில்,"மத்திய அரசு பாடப்புத்தகத்துக்கு திராவிட இயக்கத்தினர் ஆட்சேபனை எழுப்பி இருப்பதை அறிந்து நான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன்.இதுபோன்ற முயற்சிகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வேதனை அளிக்கிறது.

ஒரு நிகழ்வை அல்லது சம்பவத்தை எழுத்து வடிவமாக்கும்போது,அதற்கு தகுந்தவாறு கார்ட்டூன்கள் வரைந்து,அதில் வரும் உருவங்கள் பேசுவதுபோல் வசனங்கள் எழுதப்படுவது உண்டு.குறிப்பிட்ட கதை,அல்லது கட்டுரைக்கு சுவையையும் சுலபமாக புரிதலையும் தருவதுதான் கார்ட்டூன்.

வசனமோ அல்லது வாசகமோ இல்லாமல் ஒரு கார்ட்டூனை படிக்க முடியாது. கார்ட்டூனும், வசனமும் பிரிக்க முடியாதவை.இந்த பாடப்புத்தகம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், தமிழக அரசியலில் திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட ஆழமான விளைவையும் அங்கீகரிக்கிறது.இந்தியாவில் எழுதப்பட்ட வரலாற்று புத்தகங்களில்,திராவிட இயக்கத்து முறையான அங்கீகாரம் அளித்து எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுவாகும்.

மேலோட்டமாக பார்த்தால்,இந்தி எதிர்ப்பை கொச்சைப்படுத்துவதுபோல் தோன்றலாம். ஆனால் முழுமையாக படித்து முடிக்கும்போது அதில் உண்மை இல்லை என்பது தெரியவரும்.தேசியவாதத்துக்கும்,மாநில வாதத்துக்கும் ஒத்தியல்புகள் இருப்பதை பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது.அப்படி இருக்கையில்,தமிழின் பெருமையை, இது அவமதிக்கிறது. தமிழர்களை புண்படுத்துகிறது என்ற வாதத்தை எப்படி ஏற்றுக் கொள்வது?" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்