இருநாட்டு உறவில் விரிசல் விழுந்துவிட்டது! இந்தியாவுக்கு, சீனா எச்சரிக்கை!

தலாய் லாமா, அருணாச்சல் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, இதன்மூலம் இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளது. தங்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், இந்தியா பிடிவாதமாக நடந்துகொண்டுள்ளது என, சீனா விமர்சித்துள்ளது. தலாய் லாமாவின் வருகை, ஆன்மிக நோக்கில் அமைந்தது என, இந்தியா தரப்பில் கூறப்பட்டது.

தலாய்லாமா

அருணாச்சலப்பிரதேச முதல்வர் பெமாகண்டுவின் அழைப்பின் பேரில், திபெத் புத்தமதத் தலைவர் தலாய் லாமா, அங்கு செல்வதை சீனா எதிர்த்துவந்தது. 'தலாய் லாமாவின்  பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால், இரு தரப்பு உறவில் கடும் பாதிப்பு ஏற்படும்' என சீனா எச்சரித்தது. ஆனால், இந்த விவகாரத்தில், இந்திய அரசு சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்து, தலாய் லாமா அருணாச்சல் பிரதேசம் செல்வதை உறுதிசெய்தது.

'தலாய் லாமாவின் அருணாச்சல் பயணம் முற்றிலும் மதம் சார்பானது. இதற்கு, அரசியல் சாயம் கொடுக்க வேண்டாம்' என்றார், உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு. மேலும், 'சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்டது கிடையாது. அதேபோன்று, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும் சீனா தலையிடாது என எதிர்பார்க்கிறோம்' என்று கூறினார்.

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இந்தியா, இந்த விஷயத்தில் பிடிவாதமாக நடந்துள்ளது. இதனால், இரு நாட்டு உறவுகளுக்குள்ளும் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று  தெரிவித்துள்ளது. 'தாலாய் லாமாவின் வருகை ஆன்மிகம் சார்ந்தது' என்ற இந்தியாவின் கருத்தையும் சீனா நிராகரித்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!