வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (06/04/2017)

கடைசி தொடர்பு:13:58 (06/04/2017)

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு!

TN farmers met Delhi Aravind Kejiriwal

விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும், வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல்  தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

எலி, பாம்புக்கறிகளை வாயில் வைத்துக்கொண்டும், தலையில் அரை மொட்டை அடித்தும், பாதி மீசையை மழித்துக்கொண்டும், தினசரி பல்வேறு விதமான நூதனப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய போராட்டத்தின்போது, அய்யாக்கண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, அய்யாக்கண்ணு மீண்டும் போராட்டக் களத்துக்குத் திரும்பினார்.

விவசாயிகளை மத்திய, மாநில அமைச்சர்கள் சந்தித்தபோதும், தங்களை பிரதமர் மோடி சந்திக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 24-வது நாளாக அவர்கள் போராடிவருகின்றனர். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தமிழக விவசாயிகள் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பதாக, கெஜ்ரிவால் உறுதியளித்ததாக போராட்டக்குழுவின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.