தீயாய் பரவும் 200 ரூபாய் புகைப்படம்... போலியா, உண்மையா?! | Is the news on the release of 200 rupee note by reserve bank, a fake one?

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (06/04/2017)

கடைசி தொடர்பு:17:01 (06/04/2017)

தீயாய் பரவும் 200 ரூபாய் புகைப்படம்... போலியா, உண்மையா?!

200 ரூபாய் நோட்டு

ந்தியாவில் புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் பரவலாக வாட்ஸ்அப் செய்தி ஒன்று வெளியானது. 200 ரூபாய் நோட்டின் படமும் அந்த செய்தியில் இணைக்கப்பட்டிருந்தது.

'இது என்ன புதுக்கதை?' என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு, கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை சரிக்கட்டுவதற்கு 200 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை எதுவும் அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை. இந்நிலையில் 200 ரூபாய் நோட்டின் மாதிரிப் புகைப்படம் வெளியானது. அதில், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள், வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதுடன், இருநூறு ரூபாய் என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது. 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் வண்ணங்களில் இருந்து மாறுபட்ட வண்ணத்துடன் காணப்பட்ட 200 ரூபாய் நோட்டின் மாதிரியானது. வாட்ஸ்அப்-லும், முகநூலிலும் வேகமாகப் பரவியது.

இந்தப் படம் தீயைப் போல பரவிக்கொண்டிருந்த நிலையில், 'புது ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டிருப்பது உண்மையா' என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது.அவர், "வர்த்தகம் முழுமையும் டிஜிட்டல் மயமாக்கும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது. இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட அரசு எவ்வகையிலும் திட்டமிடாது” என்று கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பணமதிப்பு நீக்கம் நடைமுறைக்கு வந்தபிறகு இதுபோன்ற புதிய ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர்.சி.பி. கிருஷ்ணன், "ரிசர்வ் வங்கி இன்னும் 200 ரூபாய் நோட்டு வெளியிடுவது பற்றி உறுதி எதுவும் அளிக்கவில்லை. இந்தத் தகவல் முழுக்க, முழுக்க வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்தி. இது போலதான் இந்த மாத இறுதியில் மீண்டும் பழைய நோட்டுகளைக் கொடுத்து, புது ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று வங்கிகள் அறிவித்திருப்பதாக ஒரு தகவல், வாட்ஸ்அப்-ல் வந்தது. ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் வெறும் புரளி. அது போலத்தான் தற்போது வெளியாகி உள்ள தகவலும். ரிசர்வ் வங்கி அதுபோன்ற உத்தரவு எதையும் வெளியிடும் நிலையில், அது மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.

இந்த 200 ரூபாய் விவகாரம் போலவே மாற்று 20 ரூபாய் மற்றும் மாற்று 50 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகள் வெளியிடப்பட்டதாகவும் அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

-ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்